ஒரு மனிதனின் தலையில் செத்த பல்லி விழுந்தது. அது என்ன சகுனமோ என்று எண்ணி பயந்தான். இறந்த பல்லி யாரோ ஒருவர் மீது விழுந்தால் மரணத்திற்கான சகுனம் என்று முன்பொரு முறை கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. உடனே அவன் அப்படி இப்போது வீட்டில் இறக்கக்கூடிய முதியவர் யாரும் இல்லையே, வீட்டில் மூத்தவர் என்று பார்த்தால் தான் ஒருவர்தானே இருக்கிறோம் அப்படியென்றால் நாம் இறந்து விடுவோமோ என்று பயந்தான். இப்படியொரு தீங்கைத் தடுக்க சில மத சடங்குகளை அதிக செலவு செய்து ஆர்வமாக செய்தான். ஆனாலும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவனது நண்பர் ஒருவர் அவனைச் சந்தித்தார், அவரிடம் தனது சங்கடத்தைப் பகிர்ந்து கொண்டான். அவருக்கு பயங்கர சிரிப்பு; சிரித்துக்கொண்டே நண்பர் சொன்னார்: “செத்த பல்லி யாரோ ஒருவர் மீது விழுந்தால், அது பல்லியின் மரணம் என்று தானே அர்த்தம். அதெப்படி ஒரு பல்லியின் மரணம் மனிதனுக்கு எப்படி மரணத்தை ஏற்படுத்தும்?” என்றார். அந்த பேச்சில் நம்பிக்கைக் கொண்டான் அந்த மூடநம்பிக்கை மனிதன். அதற்கு பின்பதாக மனதிலும் அமைதி இருந்தது. பொதுவாகவே, மக்கள் தங்களின் எதிர்காலம், மரணம், நோய், பேரிடர்கள், இழப்புகள், தொற்றுநோய்... போன்றவற்றைப் பற்றி பயப்படுகிறார்கள். சில விசித்திரமான ஆனால் இயற்கையான விஷயம் நடக்கும் போது, அவர்கள் அதை சகுனமாக நினைக்கிறார்கள். அதை வைத்து தங்கள் எதிர்காலத்தை கணிக்கிறார்கள். சில சகுனங்கள் நல்ல செய்தி என்றும் மற்றவை கெட்ட செய்தி என்றும் நம்புகிறார்கள். உதாரணமாக, ஒரு பூனை ஒரு நபரின் பாதையை கடந்தால் அது துரதிர்ஷ்டம் மற்றும் தீங்கு என எண்ணுகிறார்கள். அதுபோல ஒரு காகம் வீட்டு வாசலில் நின்று கத்தினால் அன்று வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள் என்று எண்ணுகிறார்கள். இவை கலாச்சாரங்களோடு இணைந்த மூடப்பழக்க வழக்கங்களாக இந்த நிகழ்வுகள் அல்லது சகுனங்களின் விளக்கங்கள் காணப்படுகிறது.
இருப்பினும், வேதாகமம் தெளிவாக எச்சரிக்கிறது: "யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக" (லேவியராகமம் 19:26). இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. சில தீர்க்கதரிசிகள் ஜோசியம் சொல்பவர்களாக மாறுகிறார்கள். சகுனத்திற்கான விளக்கத்தையோ அல்லது குறி சொல்பவர்களையோ ஒரு கிறிஸ்தவ ஊழியனிடம் அல்லது தீர்க்கதரிசியிடம் தேடுவது பாவம்.
சகுனங்கள் அல்லது சகுனங்களின் விளக்கங்களைத் தேடுவதற்குப் பதிலாக, கடினமான காலங்களில், நாம் நம் வாழ்க்கையை ஆராய்ந்து மதிப்பீடு (தற்பரிசோதனை) செய்ய வேண்டும். "இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்" (ஆகாய் 1:5). தேவன் நம் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார், ஆளுகிறார்; சகுனங்கள் அல்லது சாபங்கள் நம்மை ஒருபோதும் பாதிக்காது. உண்மையில், பரிபூரணமான அன்பு எல்லா பயத்தையும் விரட்டுகிறது (1 யோவான் 4:18). "அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது" (நீதிமொழிகள் 26:2).
நான் தேவனை நம்புகிறேனா அல்லது சகுனங்கள் மற்றும் சாபங்களுக்கு பயப்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்