அன்பை விவரிக்கும் ஒரு உன்னதமான அத்தியாயத்தை பவுல் எழுதியிருக்கிறார். இதில் இவர் குறிப்பிட்டிருக்கும் அன்பு கணவன் மனைவியிடையே இருக்கும் அன்பல்ல அல்லது சகோதர அன்பும் அல்ல; ஆனால் எல்லாவற்றைக் காட்டிலும் மேலானது தெய்வீக அன்பு, அதைதான் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்கள் தேவனிடமிருந்து அன்பைப் பெறுகிறார்கள், அதை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துவது என்பது மிக முக்கியமானது (1 கொரிந்தியர் 13:1-3). அன்பு இல்லாமல், எந்த ஊழியமும், அருட்பணியும், சேவையும் அர்த்தமற்றதாகி ஒன்றுமில்லாததாகிவிடும் என்று பவுல் எழுதுகிறார். ஆவிக்குரிய காரியமாக பார்க்கக்கூடிய ஆனால் அன்பற்ற வெறுமையான மூன்று அம்சங்கள்:
1) இயற்கைக்கு அப்பாற்பட்ட வரம்:
ஒரு நபருக்கு நல்ல மொழியறிவு, மொழியை திறம்பட பயன்படுத்துவதற்கான நுட்பம், தேவதூதர்களைப் போல இனிமையான பேச்சு என் எல்லாம் இருந்தாலும், அன்பு இல்லையென்றால் இந்த மகத்துவங்கள் அனைத்தும் வெறும் சத்தத்திற்கு சமம். ஆம், குறை குடம் கூத்தாடும். வெண்கலம் அதிர்வின் மூலம் சத்தம் எழுப்புகிறது. அதன் தாளத்தை மெட்டுப்படுத்த முடியாது.
சத்தமிடும் வெங்கலம் என்பது பயனற்ற சத்தத்தைக் குறிக்கும் அல்லது வெற்று வார்த்தைகள் அல்லது அதிக ஒலி (ரீங்காரம்).
2) இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிக்குரிய வாழ்வு:
ஆவிக்குரிய வளர்ச்சியை அடைந்தவர்கள் இருக்கலாம். அத்தகைய வளர்ச்சியை அன்பில் பிரதிபலிக்க முடியும். அப்படி முடியவில்லை என்றால், அது மீண்டும் மேலோட்டமான ஆவிக்குரிய வாழ்வே.
தீர்க்கதரிசன வரம்:
தீர்க்கதரிசன வல்லமை என்பது ஒரு அற்புதமான வரம், அது அன்புடன் ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே அது வரம்.
அறிவு:
மக்கள் புத்திசாலியாகவும், அறிவாளியாகவும், ஞானமுள்ளவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் மர்மங்களையும் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும், அன்பைப் போல அறிவு கொப்பளித்து, கட்டியெழுப்பவில்லை என்றால், அது நோக்கமற்ற புரிதல் அல்லது விவேகமற்றதாக அல்லவா மாறும் (1 கொரிந்தியர் 8:1).
மாபெரும் விசுவாசம்:
மலைகளைக் கூட அசைக்கக் கூடிய அதீத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், விசுவாசம் அன்புடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
3) மேன்மையான தியாகம்:
மக்களுக்கு நல்ல உயர்ந்த அர்ப்பணிப்பு இருக்கலாம்; அவர்கள் தங்கள் உயிர் உட்பட அனைத்தையும் கொடுக்க கூட தயாராக உள்ளனர். சமூகத்தில் தற்கொலை படைகள் செயல்படுவதைக் காணலாம்; அவர்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள், அது அன்பினால் அல்ல, வெறுப்பின் காரணமாக!
மக்கள் தீர்க்கதரிசனம் சொல்லலாம், வேதத்தை கற்பிக்கலாம் மற்றும் மலைகளை கூட நகர்த்தலாம். அவர்களுக்கு அன்பு இல்லையென்றால், ஒன்றும் பிரயோஜனமில்லை (1 கொரிந்தியர் 13: 1-3).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார்:
"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" (யோவான் 15:5). நல்ல கனிகளை அளிக்க வேண்டுமென்றால், அதற்கான திறவுகோல் அவருடைய அன்பில் நிலைத்திருப்பது ஆகும். அந்த அன்பின் நிரூபணமே உண்மையான ஆவிக்குரிய வாழ்வு.
நான் தேவ அன்பில் நிலைத்திருந்து அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்