இஸ்ரவேலின் இளைய தலைமுறையினர் வனாந்தரத்தில் அழிந்தவர்களை விட மோசமாக இருந்தனர். அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர், வழியில் ஏதோமின் எல்லையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஏதோமியர்களோ தங்கள் வழியாக கடந்து போக இஸ்ரவேலரை அனுமதிக்கவில்லை (எண்ணாகமம் 20:14-21). எனவே, அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது, அதாவது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அடைய இன்னும் தூரம் சென்று சுற்றி திரும்ப வேண்டும். மக்கள் மனம் தளர்ந்து தேவனுக்கு எதிராகப் பேசினர். அப்போது தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை அவர்களிடையே அனுப்பி அவர்களைத் தண்டித்தார்.
தேவனுக்கு எதிராக:
முந்தைய தலைமுறையினர் மோசேக்கு எதிராக குறைந்தது எட்டு முறை முணுமுணுத்தனர் (யாத்திராகமம் 15:24; 16:2; 17:3; எண்ணாகமம் 12:1; 14:2; 16:3; 16:41; 20:2). ஜனங்கள் தனக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று தேவனும் அறிந்திருந்தார் (யாத்திராகமம் 16:7-8; எண்கள் 24:27). இளைய தலைமுறையினர் மோசேக்கு எதிராக மட்டுமல்ல, தேவனுக்கு எதிராகவும் பேசுவதற்கு தைரியமாகவும் வெட்கமற்றவர்களாகவும் இருந்தனர். ஆரோனும் மரித்து விட்டான்.
நம்பிக்கையின்மை:
அவிசுவாசத்தின் காரணமாக பழைய தலைமுறை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையத் தவறிவிட்டது. முணுமுணுப்பு என்பது நம்பிக்கையின்மைக்கு ஆதாரம். இளைய தலைமுறையினர் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழையும் தருவாயில் இருந்தனர், ஆனாலும் அவர்களுக்குள்ளும் அதே நம்பிக்கையின்மை இருந்தது.
அற்பமான உணவா?:
தங்கள் தந்தைகளைப் போலவே, இளைய தலைமுறையினரும் தேவனின் முன்னேற்பாட்டை இகழ்ந்தனர் (எண்ணாகமம் 21:4-5). மன்னா தூதர்களின் அப்பம் என்று வேதாகமம் கூறுகிறது (சங்கீதம் 78:23-24). அவர்கள் ஏசாவைப் போல இருந்தார்கள், அவன் தனது முதற்பேறான உரிமைகளை விட உணவை அதிகமாக மதிப்பிட்டான். தேவன் இஸ்ரவேலை தம்முடைய முதற்பேறானவர் என்று அழைக்கிறார் (யாத்திராகமம் 4:21-23).
நன்றியின்மை:
இஸ்ரவேலர் முணுமுணுத்தது என்பது, அது நன்றியின்மையைக் குறிக்கிறது. தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து பலத்த கையால் விடுவித்தார். நானூறு ஆண்டுகளாக இஸ்ரவேலின் இரக்கமற்ற அடிமைத்தனத்திற்காக கர்த்தர் எகிப்து தேசத்தை நியாயந்தீர்த்தார். இப்போது, அவர்கள் தேவனின் மகத்தான செயல்களை மறந்துவிட்டார்கள், எனவே, அவர்கள் தேவனுக்கு எதிராக முணுமுணுக்கும் மனநிலைக்கு நழுவினர்.
அற்புதமான நிலைத்தன்மை:
விடுவிக்கப்பட்ட அடிமைகள் நாற்பது ஆண்டுகளாக அலைந்து திரிந்தவர்கள். தேவனுடைய பாதுகாப்பும், ஏற்பாடும் இல்லாவிட்டால், அவர்கள் வனாந்தரத்தில் அழிந்து போயிருக்கலாம். அவர் இருபத்தி நான்கு மணிநேரமும் அக்கினி ஸ்தம்பமாகவும் மற்றும் மேகஸ்தம்பமாகவும் இருந்தார். நாற்பது ஆண்டுகளுக்கும் அற்புதமாக உணவு வழங்கப்பட்டது. "இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாகப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை” (உபாகமம் 8:4). ஆம், தேவன் அவர்களுக்கு ஆடைகளை அணிவித்து, நாற்பது வருடங்கள் பயணம் செய்வதற்குத் நல்ல பெலத்தைத் தந்தார்.
என்னிடமும் தேவனுக்கு எதிராக முணுமுணுக்கும் பழக்கம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்