ஒரு இளைஞன் தன் சொந்த ஊருக்கு வெகுநாட்களுக்கு பின்பதாக சென்று கொண்டிருந்தான். தன் ஊரில் கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்க்க காரை எடுத்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தான். அப்படி அவன் சென்று கொண்டிருந்த போது ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே புதிய பாலம் போடப்பட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அந்த உற்சாக மிகுதியில் காரை வேகமாக ஓட்டினான்; ஆனால் பாலம் முழுமையாக கட்டப்படவில்லை என்பதை அறியாததால் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து மோசமாக காயமடைந்தான். மருத்துவமனையில் அவனை சேர்த்தனர், வேகமாக வாகனம் ஓட்டியதாக அவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அலட்சியம்:
பாலம் முழுமையடையாத நிலையில் தற்போது பாலத்தைப் பயன்படுத்த முடியாது என்பதான எச்சரிப்பு பலகையோ அல்லது சாலைத் தடைகளோ அல்லது எவ்வித அறிவிப்போ இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், இதைச் செய்ய வேண்டியவர்கள் தங்கள் வேலையை மெத்தனமாகவோ அல்லது அலட்சியமாகவோ செய்தார்கள். தங்கள் வேலைகள், பணிகள், தொழில்கள், உத்யோகம் மற்றும் பொறுப்பு என தனக்கு கொடுக்கப்பட்ட பணியை அஜாக்கிரதையாக செய்பவர்கள் உண்மையிலே அதை உருவாக்குவதற்கு பதிலாக அழிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். "தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்" (நீதிமொழிகள் 18:9).
சிரத்தை:
சோம்பலுக்கு எதிரானது சிரத்தை, கடமை, அர்ப்பணிப்பு மற்றும் சமர்ப்பணம். சிரத்தை என்பது மனதைப் பயன்படுத்துதல், கவனம் செலுத்துதல், அனைத்து வளங்களையும் திறன்களையும் பயன்படுத்துதல் மற்றும் சிறப்பாகச் செயல்படுதல். "தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்" (நீதிமொழிகள் 22:29). கடமையை மிகுந்த உண்மையோடு நிறைவேற்றுவது என்பது, பிறனை உண்மையாக நேசிப்பதைக் குறிக்கிறது.
ஆண்டவரை நோக்கு:
"நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" (கொலோசெயர் 3:23-24). எல்லா மனிதர்களுமே பணி செய்ய வேண்டும். ஆனால் அதை தேவ அழைப்பாகத் தங்கள் வேலையைப் புரிந்துகொள்பவர்கள், ஆண்டவரைப் பிரியப்படுத்தச் செய்வார்கள். அவர்கள் முதலாளிகளை மகிழ்விக்க முயற்சிக்காமல் தேவனை மாத்திரம் மகிழ்விப்பார்கள். ஒரு நபர் சமைக்கலாம், கணினியில் வேலை செய்யலாம், ஊடகப்பணியில் இருக்கலாம், வாகனம் ஓட்டலாம், தச்சுவேலை, மரவேலை என எதுவேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், அனைத்தும் தேவனின் மகிமைக்காகவே செய்யப்படுகின்றன.
சோம்பலுக்கு சாபம்:
"கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்" (எரேமியா 48:10). ஞாயிறு பள்ளிக்கு ஜெபமோ அல்லது ஆயத்தப் பணியோ இன்றி கற்பிக்கும் நபர் சபிக்கப்படலாம். தினமும் வார்த்தையை தியானிக்க வேண்டும் என்ற ஒழுக்கம் இல்லாமல், யாராவது ஆராதனை நடத்தினால், அவர் சபிக்கப்படலாம். போதனை, கற்பித்தல், ஆலோசனை மற்றும் ஆவிக்குரிய ஒழுக்கம் இல்லாமல் இருப்பது என்பது சாபங்களை வரவழைக்கும்.
நாம் செய்யும் அனைத்தையும் செய்வதில் ஈடுபாடும், ஆர்வமும், சுறுசுறுப்பும் உள்ளதா? ஆராய்வோமே.
Author: Rev. Dr. J .N. மனோகரன்