ஒரு கடினமான சூழ்நிலைக்குள் தேவ ஊழியர் ஒருவர் இருந்தார். பல வருட உழைப்பு கண்ணீரையும், இதயத்தில் உடைப்பையும், மன உளைச்சலையும், நோயையும் கொண்டு வந்திருக்கிறது. மனதை ஆறுதல் படுத்தும்படியோ அல்லது திருப்தி அடையும் அளவோ போதுமான கனிகள் இல்லை. அவரால் வேதனை தாங்க முடியாமல் தரையில் விழுந்து ஆண்டவரை நோக்கி கதறி அழுது ஜெபித்தார். ஆண்டவரே நான் இதை விட்டு விலகி கொள்கிறேன், என்பதாக கூறிக் கொண்டு அழுது கொண்டே இருந்தவரால் கண்ணீர் வற்றினவராய் களைத்து போனவராய் அப்படியே உறங்கியும் விட்டார். அந்த நேரம் நினைவு இழந்தவர் போலக் காணப்பட்ட போது, கனவில் ஒரு தேவதூதன் பணி நியமனக் (அப்பாயின்ட்மென்ட்) கடிதம் கொடுப்பதைக் கண்டார்: "உங்கள் மறு நியமனம் மீண்டும் கையொப்பமிடப்பட்டது" என்பதைக் கண்டவுடன், அவர் எழுந்து, கர்த்தர் அவர் தொடர்வதை விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொண்டார், பிற்காலங்களில் பெரிய ஊழியங்களைச் செய்தார்.
சில சமயங்களில் தேவ ஊழியர்கள் கடினமான காலங்களைக் கடந்து செல்கிறார்கள் அல்லது கடினமான சூழ்நிலைகளைக் கண்டு பயப்படுகிறார்கள். பல சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய ஆறு காரணங்களுக்காக எபேசுவில் தேவ பணியைத் தொடருமாறு பவுல் தீமோத்தேயுக்கு எழுதுகிறார் (1 தீமோத்தேயு 1:3-20).
1) சத்தியம் (3-7):
மக்களுக்கு எப்போதும் போலித்தனமானவைகள் வழங்கப்படுகிறது. சத்தியமானது மறைக்கப்படுகிறது அல்லது திரிக்கப்படுகிறது, இதனால் மக்கள் பொய்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். வேடிக்கை என்னவெனில், "தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்" (1 தீமோத்தேயு 1:7).
2) அக்கிரமம் (8-11):
துன்மார்க்கரின் இரத்தத்தில் அக்கிரமம் எழுதப்பட்டுள்ளது போலும். நற்செய்தி அறிவிப்பும் சரியான போதனையும் இல்லாதபோது, தனிநபர்கள், குடும்பம், நிறுவனங்கள், சமூகம் மற்றும் அரசாங்கம் என வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அக்கிரமம் நிறைந்திருக்கிறது. அவர்களுடைய தீய இதயங்கள் பிடிவாதமானவையாக இருக்கின்றது (எரேமியா 16:12).
3) தகுதியற்ற நிலை 12-16):
பல சமயங்களில், ஏசாயா மற்றும் எரேமியா போன்ற தாழ்மையான ஊழியர்கள் போதிய தகுதியற்றவர்களாகவும், பரிசுத்தமற்றவர்களாகவும் உணர்கிறார்கள் (ஏசாயா 6:5; எரேமியா 1:1). தேவன் தான் அழைத்தவர்களையும் தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறார் (2 கொரிந்தியர் 3:5).
4) மகா தேவன் (17):
ராஜாக்களின் ராஜா, பிரபுக்களின் பிரபு, கண்ணுக்கு தெரியாத மற்றும் நித்திய தேவன் வணக்கத்திற்கும் கனத்திற்கும் தகுதியானவர். "நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்".
5) யுத்தம் (18):
தேவ ஜனங்களுக்கு ஊழியம் செய்வதும், சுவிசேஷம் சென்றடையாதவர்களுக்கு பணி செய்வதும் எப்போதும் சவாலாகவே இருக்கிறது. இது தளர்வு இல்லாத உக்கிரமான யுத்தம். சாத்தானையும் அவனது உத்திகளையும் எதிர்கொள்ள அதிக எச்சரிக்கை, சுறுசுறுப்பு மற்றும் ஒரு உறுதிப்பாடு தேவை.
6) வேறு யாரும் இல்லை (19-20):
அநேகர் தங்கள் விசுவாசத்தைக் கைவிட்டதால், பவுல் தீமோத்தேயுவை மட்டுமே நம்ப முடிந்தது. தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஒரு நபரை தயார்படுத்துவதை வேதாகமத்தில் உள்ள பல 'தேவ ஊழியர்களின்’ வாழ்க்கையில் தெளிவாக காண முடிகிறது.
நான் என் பணியை ராஜினாமா செய்துவிட்டேனா அல்லது தேவனால் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்