ஒரு கடற்கரையில், ஏழை மீனவர்கள் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க முயன்றனர். ஒரு மீனைப் பிடிக்கவே அவர்களுக்கு நீண்ட நேரம் பிடித்தது. மீன்கள் அகப்படாததால் சிலர் ஏமாற்றம் அடைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் எல்லா மீனவர்களும் ஒன்றிணைந்து தனித்தனி வலையாக இல்லாமல் ஒரே வலையாகப் போடச் சொன்னார்; அப்படி செய்தால் இப்போது பெறுவதை விட அதிகமாக பெற முடியுமே என்றார். ஆனால் அவர்களோ அதற்கு இணங்காமல்; "எனக்கு அந்த மனிதனைப் பிடிக்காது". "நான் ஏன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்?" “நான் ஒரு தனிக்காட்டு ராஜா. என்னால் என்னை நிர்வகிக்க முடியும்". "மற்றவர்களின் கட்டளைகளுக்கு நான் ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?". "எனக்கு நானே முதலாளி"; எனப்போன்ற பலவித சாக்குபோக்குகளைச் சொன்னார்கள்
பேதுரு ஒரு மீனைக் கூட பிடிக்கவில்லை, வலைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தான். ஆண்டவர் அவன் படகைக் கடன் வாங்கி போதகம் பண்ணினார். பின்னர், கர்த்தர் பேதுருவை வலது பக்கத்தில் வலைகளை இறக்கும்படி கட்டளையிட்டார். "அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்" (லூக்கா 5:6-7). இரண்டு படகுகளும் முழு கொள்ளளவுக்கு நிரப்பப்பட்டன. சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவும், சீஷர்களை உருவாக்கவும் விரும்புகிற பல ‘மனிதர்களைப் பிடிக்கிறவர்கள்’ இருக்கிறார்கள். ஆனால் பேதுருவைப் போல மற்றவர்களை அழைக்க விரும்புவதில்லை.
என்னை விட பரிசுத்தமா?:
அப்படிப்பட்டவர்கள் தங்களை ‘மற்றவர்களை விட பரிசுத்தமானவர்கள்' என்று கருதுகிறார்கள். தங்களுடைய ஆவிக்குரிய வாழ்வைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதால், அவர்கள் மற்றவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை குறைத்து மதிப்பிடுகிறார்கள் அல்லது கேலி செய்கிறார்கள்.
என்னை விட மேன்மையா?:
பலர் தங்கள் திறமைகள், தாலந்துகள், வரங்கள் அல்லது கல்வியின் அடிப்படையில் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதுகின்றனர். மற்றவர்களுடன் இணைந்து பணிபுரிவதை தாழ்வாக எண்ணி; நம்மை நாமே ஏன் தாழ்த்திக் கொண்டு மற்றவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.
என்னை விட பெரியவனா?:
சிலர் தங்கள் அனுபவத்தையும் கடந்த காலங்களையும் நம்பி வாழ்கிறார்கள். குறைந்த அனுபவமுள்ளவர்களை அல்லது புதிதாக ஊழியத்தில் ஈடுபடுபவர்களை அவர்கள் அலட்சியமாக நடத்துகிறார்கள். பகிர்வது வேதனையானது; பலர் தங்களைப் பற்றி மிதப்பான கருத்தைக் கொண்டுள்ளனர். அணியில், அவர்கள் தங்களை ஒரு சிறந்த பங்களிப்பாளராகக் கருதுகிறார்கள், மற்றவர்கள் வெறும் ஒட்டுண்ணிகள் என்றும், கொள்ளையடிப்பவர்களாகவும் எண்ணுகிறார்கள். எனவே, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தை அவர்கள் வெறுக்கிறார்கள்.
என்னை விட பிரபலமா?:
சிலர் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள் மற்றும் மற்றவர்களின் பங்களிப்புகளை புறக்கணிக்கிறார்கள் அல்லது அவற்றை நிராகரிக்கிறார்கள்.
அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தால் சாதிக்கலாம் என்பதே குழுவாக பணியாற்றுதலின் மேன்மை.
ஊழியம் அல்லது அருட்பணிக்காக பங்காளர்களை அழைப்பதை விட பலர் ஆத்துமாக்கள் அழிய அனுமதிப்பார்கள்.
நான் விருப்பத்துடன் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்