எனது நண்பர் ஒருவர் நற்செய்தியைப் பற்றிய தனது புரிதலை சுருக்கமாகக் கூறினார். அதாவது “மன்னிப்பது தேவனின் கடமை. பாவத்தில் வாழ்வதே உன் கடமை. இறுதியில் அவர் மன்னித்து உங்களை பரலோகத்திற்கு அனுப்புவார், அது அவருடைய ‘தர்மம்’ (மாற்ற முடியாத கட்டாய கடமை மற்றும் நெறிமுறை)” என்பதாக கூறினார். கிறிஸ்தவ நம்பிக்கைக்கு இப்படி ஒரு வியாக்கியானத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் அவர் விளக்கினார்: “கடவுளின் ‘விதி’யில் மன்னிக்கவும் என்பதும் மற்றும் மனிதன் பாவம் செய்வான் என்பது குறியிடப்பட்டுள்ளது. அதை ஒருபோதும் மாற்ற முடியாது.”
ஆனால், நம் வேதாகமம் கற்பிக்கிறது: "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9).
1) ஒப்புக் கொள்ளல்:
ஒரு நபர் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த நபர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தான் ஒரு பாவியாக இருப்பதற்காக உண்மையில் சங்கடமாகவும், கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். உணரும் போது அந்த 'பாவம்' அல்லது 'வீழ்ந்த நிலை'யிலிருந்து மனந்திரும்ப வேண்டும் மற்றும் பாவ மனப்பான்மை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், நடத்தை மற்றும் பழக்கத்தை 'கைவிட' தீர்மானமாக முடிவு எடுக்க வேண்டும்.
2) உண்மையுள்ள தேவன்:
பின்னர் அந்த நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வர வேண்டும், அவர் பாவ மன்னிப்பை உள்ளடக்கிய இரட்சிப்பை வாக்களித்துள்ளார். மனந்திரும்பி, எல்லாவற்றையும் அறிக்கையிட்டு, விசுவாசத்துடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும் எவரையும் மன்னித்து, ஒப்புரவாக்கி, மறுவாழ்வு கொடுப்பதாக தேவன் வாக்களித்துள்ளார்.
3) நீதியுள்ள தேவன்:
அவர் கடமைப்பட்டவர் அல்லது இரக்கமுள்ளவர் ஆகையால் அவர் மன்னிப்பார் என்பதாக இந்த வசனம் கூறவில்லை. ஆனால் அவர் நீதியும் நியாயமுள்ளவர். ஆம், பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23). பாவத்தை மன்னிக்கும் அதிகாரம், நம்பகத்தன்மை, ஆவிக்குரிய அதிகாரம் மற்றும் சட்டப்பூர்வமான அதிகாரம் அவருக்கு உண்டு என்று மனிதகுலத்தின் சார்பாக பரிசுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் பாவத்திற்கான மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மன்னிப்பு இலவசம், ஆனால் கல்வாரி சிலுவையில் அதற்கான விலைக்கிரயம் செலுத்தப்பட்டாயிற்று. வலியையும், துன்பத்தையும், மரணத்தையும் மனமுவந்து தாங்கி, அடக்கம் செய்ய்ப்பட்டு, உயிர்த்தெழுந்த தம் குமாரனை அனுப்பும் அற்புதமான செயலைச் செய்தார் இந்த அற்புதமான தேவன். அவருடைய ‘தியாகமான செயலின்' மூலம் நாம் மன்னிக்கப்படுகிறோம். அவருடைய அன்பை புரிந்து கொள்ளவே முடியாது.
இந்த மாபெரும் இரட்சிப்பை நான் பயபக்தியுடன் துதித்து மகிழ்ந்து சாட்சியாகப் பார்க்கிறேனா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்