பண்டைய காலங்களிலிருந்து இன்றும் கூட, பல கலாச்சாரங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் மதங்களில் விலங்குகளை பலியிடுவது காணப்படுகிறது. இரத்தத்தின் மூலம் பிராயச்சித்தம் தேவை என்பது மனிதகுலத்தின் ஆவிக்குரிய தாகத்தை குறிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, கல்வாரி சிலுவையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அறுதிஇறுதியான தியாகத்தை அவர்கள் காணத் தவறிவிட்டனர்.
கண்ணுக்குத் தெரியாதது:
தேவனுக்குக் கொடுக்கப்படும் தகனபலியைக் காணமுடியும், பலிபீடத்தில் எரிக்கப்படும், பின்னர் அது புகையாக மாறி வானத்தை எட்டும்போது அது கண்ணுக்கு தெரியாததாகிறது. காணிக்கை தேவனுக்கு இனிய நறுமணமாக மாறுவதை இது குறிக்கிறது. “இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி” (லேவியராகமம் 2:9).
குறைபாடு இல்லாதது:
பலியிடும் விலங்கு குறைபாடு இல்லாமல், நேர்த்தியானதாக இருக்க வேண்டும். தேவன் முழுமையான தூய்மையையும் பரிசுத்தத்தையும் எதிர்பார்க்கிறார். முடமான அல்லது நோயுற்ற மிருகத்தை ஒரு நாட்டின் ஆளுநருக்குப் பரிசாகக் கொடுக்க முடியுமா? அப்படியானால், தேவனுக்கு காணிக்கை செலுத்துவதும் பழுதற்றதாக இருக்க வேண்டும் அல்லவா (மல்கியா 1:8-9).
தேவனுக்கே உரிமை:
சர்வாங்க தகனபலியில், காணிக்கை செலுத்துபவனுக்கோ அல்லது ஆசாரியனுக்கோ எதுவும் திருப்பித் தரப்படுவதில்லை. இது முற்றிலும் தேவனுக்கு சொந்தமானது. முழுப் படைப்பும் ஒன்றுமில்லாமையில் இருந்து தேவனால் படைக்கப்பட்டது. எனவே, உலகில் காணக்கூடிய மற்றும் காணப்படாத அனைத்து பொருட்களின் அறுதிஇறுதி உரிமையாளர் அவர் மாத்திரமே. சர்வாங்க தகன பலி என்பது இஸ்ரவேலின் தேவனானவர் என்ற அங்கீகாரம் மாத்திரமல்ல, உலகம் அனைத்திற்கும் அவர் ஒருவரே உரிமையாளர்.
விசுவாசத்தின் வெளிப்பாடு:
தியாக பலிகள் பகிரங்கமாக செய்யப்படுகின்றன. இது கீழ்ப்படிதலினாலான விசுவாசத்தின் வெளிப்பாடு. பழைய ஏற்பாடு முழுவதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவான மேசியாவின் அறுதிஇறுதி பலியில் விசுவாசத்தின் வெளிப்பாடாக அனைத்து பலிகளும் வழங்கப்பட்டன. காணிக்கை செலுத்தும் நபர் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
இரத்தம்:
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது (லேவியராகமம் 17:11). உயிர்களின் அடையாளமான இரத்தம் பலிபீடத்தின் மீது ஊற்றப்பட்டது, எல்லா உயிர்களையும் கொடுப்பவருக்கு உயிர் திரும்புவதைக் குறிக்கிறது. “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:19: மத்தேயு 26:28). தேவன் எல்லா உயிர்களுக்கும் சொந்தக்காரர், மேலும் ஜீவன் அவரிடம் திரும்புகிறது. எனவே, கொலை, தற்கொலை மற்றும் கருக்கலைப்பு ஆகியவை தேவனுக்கு எதிரான பாவங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தியாகத்தின் முக்கியத்துவம் எனக்கு புரிகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்