ஒரு விஞ்ஞானி வெளிச்சமான தனது படிக்கும் அறையில் சென்று அமர்ந்தார். திரைப்படம் தயாரிப்பதற்கு வெளிப்புற படப்பிடிப்பில் அதிக வெளிச்சம் வேண்டுமென்பதற்கு ஔிக்கருவிகளை பயன்படுத்துவார்களே அதுபோல மிகுந்த வெளிச்சமாக அந்த அறை இருந்தது. அவ்வளவு வெளிச்சமாக காணப்பட்டதால் விஞ்ஞானியால் தனது ஆராய்ச்சிக்கு தேவைப்படும் மாதிரிகளைத் தெளிவாகக் கவனிக்க முடிந்தது, அது குறைந்த ஒளியினால் சாத்தியமில்லை. அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக அவரது உதவியாளர் ஒரு மெழுகுவர்த்தியை அறைக்கு கொண்டு வந்தார். அவ்வெளிச்சம் மிக பிரகாசமாக இல்லாததால் விரக்தியடைந்த விஞ்ஞானி, மெழுகுவர்த்தி வெளிச்சம் இருளுக்கு சமம் என்றார். உயர் ஆற்றல் கொண்ட விளக்கை ஒப்பிடும்போது, மெழுகுவர்த்தி வெளிச்சம் கிட்டத்தட்ட இருள் என்பது உண்மை தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கூற்றைப் புரிந்துகொள்ள இந்த உருவகம் நுண்ணறிவை வழங்குகிறது; "யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" (லூக்கா 14:26).
மனித அன்பு தீர்ந்து போகலாம்; அதுமாத்திரமல்ல சில வரம்புகளையும் கொண்டுள்ளது மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் விருப்பத்திற்கேற்ப செயல்படும். தேவ அன்பு விவரிக்க முடியாதது மற்றும் நிபந்தனையற்றது. ஒரு நபர் தேவனை ஏற்றுக்கொண்டால் அவரது அன்பு அந்நபரின் மேல் நிரம்பி வழிகிறது. இது முழு உயிரினத்தையும் விஞ்சும் மற்றும் தழுவும் ஆவிக்குரிய வாழ்வு எனலாம். ஒரு சீஷன் சக்தி வாய்ந்த விளக்கைப் போல தேவ அன்பிற்கு தெய்வீக உத்வேகத்துடன் பதிலளிக்கிறான். அந்த அன்பின் பிரதிபலிப்போடு ஒப்பிடும்போது, பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மற்றும் சுயம் உட்பட மனித உறவுகளில் உள்ள மற்ற எல்லா அன்பும் வெறுப்பாகவே தெரிகிறது.
பெற்றோருக்கான கனம்:
நீண்ட ஆயுளைப் பெற தகப்பனையும் தாயையும் கனம் பண்ண வேண்டும் என தேவன் அனைவருக்கும் கட்டளையிட்டுள்ளார் (யாத்திராகமம் 20:12; எபேசியர் 6:1-3).
மனைவியின் மீது அன்பு:
கணவன் தன் மனைவியிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அந்த அன்பிற்கு பதிலளிக்கும் விதமாக மனைவியும் அன்புடனும், கீழ்ப்படிதலுடனும், மரியாதையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார் (எபேசியர் 5:25). வாழ்க்கைத் துணையின் மீதான அன்பு மனித உலகில் மிகப் பெரியதாகத் தெரிகிறது. அதுவும் தேவ அன்போடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வெறுப்பாகவே தெரிகிறது.
சகோதர அன்பு:
சக விசுவாசிகளை நேசிக்கவும், மற்றவர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் யோவான் அறிவுறுத்துகிறார் (1 யோவான் 3:16). இதுவும் வெறுப்பளவிற்கு போதுமானதாக இல்லை.
தன்னைத் தான் நேசிப்பது:
உங்களைப் போலவே உங்கள் அயலானையும் நேசியுங்கள் என்றால் அதாவது ஒவ்வொருவரும் முதலில் தன்னை விலையேறப்பெற்றவர்களாக எண்ண வேண்டும், அதே அடிப்படையில் மற்றவர்களையும் சமமாக மதிப்புமிக்கவர்களாக கருத வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் (லேவியராகமம் 19:18). ஆம் தேவ அன்பு ஜீவனைக் காட்டிலும் மேலானது. "ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்" (சங்கீதம் 63:3).
தேவன் மீதான அன்பு ஆவிக்குரிய வெளிப்பாடு, மனித அன்பு என்பது உணர்வின் வெளிப்பாடு.
எனது தேவனை நான் எப்படி நேசிக்கிறேன்?
Author: Rev. Dr. J .N. மனோகரன்