குழந்தைகளுக்கு உணவளிக்கும், பால் பாட்டில்கள், கிண்ணங்கள் மற்றும் கரண்டி போன்ற பாத்திரங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. ஆம், குழந்தைக்கு உணவளிக்கும் பாத்திரங்கள் அழுக்கு அல்லது கிருமிகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது மிக அவசியம். "ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்" (2 தீமோத்தேயு 2:21) என்பதாக பவுல் எழுதுகிறார்.
தொற்று நீக்கம்:
கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாத்திரத்தைப் போலவே, சீஷர்களும் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு சுத்தப்படுத்தப்பட்டு பரிசுத்தமாக இருக்க வேண்டும். தங்கம் நெருப்பால் சுத்திகரிக்கப்படுவது போல, குழந்தைக்கு உணவளிக்கும் பாத்திரங்கள் கொதிக்கும் நீரால் கிருமி நீக்கம் செய்யப்படுவது போல, ஒரு விசுவாசி உபத்திரவத்தின் உலையில் தயாராகிறான். எனவே, ஒரு விசுவாசி அன்பான தேவன் சிட்சிப்பதையும் திருத்துவதையும் வெறுக்கக்கூடாது, அதன் முடிவு தேவனுக்கு பிரியமானதாக மாறுகிறது (நீதிமொழிகள் 3:11-12). ஒரு விசுவாசி பாவங்களிலிருந்தும், பயனற்ற நாட்டங்களிலிருந்தும், தவறான போதனைகளிலிருந்தும் சுத்திகரிக்கப்பட வேண்டும். அவர்கள் உலகத்தின் போக்கிற்கு ஏற்றாற்போல் இல்லாமல், வேதத்தால் வடிவமைக்கப்படுகிறார்கள் (ரோமர் 12:2).
பயனுள்ளவை:
தேவன் தனது பயன்பாட்டிற்காக தனது பாத்திரத்தை வடிவமைக்கிறார். ஒரு கலைஞருக்கோ அல்லது தொழிலாளிக்கோ பயனுள்ள, அழகான மற்றும் உபயோகமான தயாரிப்புகளைச் செய்ய துல்லியமான கருவிகள் தேவை. அவருடைய ராஜ்யத்தை கட்டியெழுப்பவும், நிலைநிறுத்தவும், விரிவுபடுத்தவும், பயன்படுத்துவதற்குத் தகுதியான ஆட்கள் கர்த்தருக்குத் தேவை. பவுலைப் போலவே, விசுவாசிகள் அவருடைய ராஜ்யத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (அப்போஸ்தலர் 9;15). பெரும்பாலான மக்கள் காபி குவளை அல்லது உணவு தட்டு அல்லது தண்ணீர் பாட்டில் போன்று தாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை நேசிப்பதுண்டு, அவர்கள் எப்போதும் அவற்றைப் பத்திரமாக வைத்துப் பயன்படுத்த விரும்புகிறார்கள். தேவன் தனது விசேஷமான பணிகளுக்கு விசேஷ பாத்திரங்களை நியமிக்கிறார்.
மரியாதை குறைவு:
தேவனைத் தேடாத மனிதர்கள் அவமரியாதைக்கு பாத்திரமாகிறார்கள். உதாரணமாக, பார்வோன் மோசேவைப் பற்றி நன்கு அறியப்பட்டான். இருப்பினும், பார்வோன் அவமானகரமான பாத்திரம், அதன் மூலம் தேவன் தனது தண்டனையையும் தீர்ப்பையும் அளித்தார் (யாத்திராகமம் 14:4). நேபுகாத்நேச்சார், கோரேசு மற்றும் இன்னும் சிலரும் அப்படித்தான்.
நற்கிரியை:
நிலையான மற்றும் நித்திய மதிப்புள்ள செயல்கள் ஒரு விசுவாசி தொடர வேண்டிய உண்மையான நற்செயல்கள் ஆகும். தீமையை எதிர்ப்பது, நீதியை நிலைநாட்டுவது, அன்பின் செயல்கள், இரக்கத்தின் செயல்கள், பாவத்தின் அடிமைத்தனத்தை விடுவிப்பது, ஒடுக்குமுறைகளின் அடிமைத்தனத்தை உடைப்பது, நம்பிக்கை அளிப்பது, விரக்தியில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பது, பலவீனமானவர்களை பலப்படுத்துவது எனப் போன்ற செயல்கள் எல்லாம் நற்கிரியைகள் ஆகும்.
நான் கனத்திற்குரிய பாத்திரமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்