பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய போதனைக்கும், அவருடைய ஊழியத்துக்கும் எதிராக இருந்தார்கள். கர்த்தர் அவர்களைக் கடிந்துகொண்டு அவர்களுடைய பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், பரிசேயர்களில் ஒருவர் அவரை விருந்துக்கு அழைத்தபோது, அவர் கலந்துகொண்டார் (லூக்கா 7:36-50). அவர்கள் அவருக்கு விரோதமாக இருந்தாலும் ஒருபோதும் பாவிகளை தேவன் நிராகரிக்கவில்லை. ஆம், பாவங்களை தான் தேவன் வெறுக்கிறார்; பாவிகளை அல்ல.
அழைப்பை ஏற்கவும்:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது விமர்சகர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறார். நீதிமான்கள் சிங்கம் போல் தைரியசாலிகள். "ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்" (நீதிமொழிகள் 28:1). அது ஒரு விரோதமான கூட்டமாக இருக்கும் மற்றும் அதுபோல் அங்கு விரோதமான கேள்விகள் இருக்கும் என்று கர்த்தராகிய இயேசு அறிந்திருந்தார்; ஆனாலும் ஆண்டவர் அந்த அழைப்பை மனதார ஏற்றுக்கொண்டார். ஏனெனில் நற்செய்தி எதிரிகளை அடைய வேண்டும், தேவன் திறந்த கதவுகளை வழங்கும்போது, அவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
பின்வாங்கவில்லை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சரியான நேரத்தில் அங்கே இருந்தார். இருப்பினும், மரியாதை சரியாக வழங்கப்படவில்லை. முதலில் , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தழுவி முத்தமிட விருந்தோம்புநர் இல்லை. இரண்டாவது, வேலைக்காரன் எவரேனும் அவர் கால்களைக் கழுவ வேண்டும், அதற்கு தண்ணீர் கொண்டு வரவில்லை. மூன்றாவது, விருந்தோம்புநர் வாசனை திரவியத்தையோ எண்ணெயையோ ஊற்றி தலையில் பூசவில்லை. இதுவே சுயம் மேலோங்கின விருந்தினராக இருந்தால் மனம் வருத்தப்படுவதுடன் அவமதிக்கப்பட்டவர்களாகக் கருதுவார்கள். கர்த்தராகிய இயேசு சிறிதும் வருத்தப்படவில்லை.
அக்கறை:
கர்த்தராகிய இயேசுவின் அக்கறை சீமோன் மீதும் அவனது நண்பர்கள் மீதும் (பெரும்பாலும் சக பரிசேயர்கள்) சத்தியத்தை காண அவர்களின் கண்கள் திறக்கப்பட வேண்டும் என்பதில் மாத்திரம் இருந்தது.
கற்பித்தது:
ஆண்டவர் எதுவும் பேசவில்லை ஆனால் அவர் அமைதியாக இருந்தார். கூட்டத்தில் அமைதிக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். பாவியான ஒரு பெண் கண்ணீரால் ஆண்டவரின் பாதங்களைக் கழுவுவதையும், தலைமுடியால் துடைப்பதையும், வாசனை திரவியத்தால் அபிஷேகம் செய்வதையும் கண்டு மக்கள் குழப்பமடைந்தனர்.
கேள்வி:
ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. அதை கொடுக்க முடியாத போது இருவருக்கும் கடன் மன்னிக்கப்பட்டது. இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். சீமோன் அதற்கு சரியான விடை அளித்தான்.
மன்னிக்கப்பட்டது:
தேவன் பெண்ணையும் அவளது செயலையும் கற்பிக்கும் மாதிரியாக உருவாக்கி சீமோன் மற்றும் பிறருக்கு உதாரணமாக சொன்னார், அவர்களின் பாவத்தின் அளவை உணர்ந்தவர்கள் மன்னிப்பின் கிருபையைப் பாராட்டுவார்கள்.
விசுவாசம்:
கர்த்தர் அந்தப் பெண்ணிடம் தன் தெய்வீகத்தை நிரூபித்தார்; "அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்" (லூக்கா 7:50).
கர்த்தராகிய ஆண்டவரைப் போன்று நம்மை எதிர்ப்பவர்களிடமும் அணுகும் மனப்பான்மை எனக்கு இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்