பல தசாப்தங்களாக ஊழியத்தில் பணியாற்றிய ஒரு மிஷனரி, தனது அருட்பணி வாழ்க்கையின் முதல் பருவத்தில் பலன் இல்லை என்று நினைத்தார். அதாவது எந்தப் பலனும் இல்லாமல் அலைவது போல் அவருக்கு இருந்தது. அவர் ஒரு இறையியல் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டார், அவருடைய உரைக்குப் பிறகு ஒரு ஆசிரியர் எழுந்து நின்று; “ஐயா, இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் குழந்தையாக இருந்தபோது நீங்கள் என் வீட்டிற்கு வந்தீர்கள். நீங்களும் உங்கள் மனைவியும் வேதாகமத்திலிருந்து கற்பித்து ஜெபித்துவிட்டு செல்வது வழக்கம். தேவன் உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளித்தார், பாருங்கள் இன்று நான் இறையியல் கல்லூரியில் போதிக்கிறேன்” எனக் கூறியதைக் கேட்ட அந்த மிஷனரி அதிர்ச்சியடைந்தார், அவர் ஒரு பெரிய அரசாங்க கட்டுமான தளத்தின் மத்தியில் இருந்ததால், வீட்டை அடைய சில மைல்கள் நடந்து சென்றதை அவர் நினைவு கூர்ந்தார். உலகத்தில் இருக்கும் போதே, தேவன் தம்முடைய அன்பின் செயல்களுக்கு வெகுமதி அளித்தால், பரலோகம் இன்னும் எதை வெளிப்படுத்தும்? “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்” (பிரசங்கி 11:1).
வீண் செயலா?
தண்ணீரில் ஆகாரத்தைப் போடுவதும் அல்லது விதைகளை விதைப்பதும் ஒரு வீண் வேலை. இதில் தண்ணீர் என்பது வெகுஜனங்கள் அல்லது மக்கள் என்று விளக்கலாம். வார்த்தையைப் பகிர்வது, மக்களுக்கான ஜெபங்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் மற்றும் எழுதுதல் என எதுவும் உடனடி முடிவுகளைத் தராது. விதைக்கப்பட்ட விதைக்கு உயிர் உண்டு, சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது முளைத்து அதிக மகசூலைத் தரும்.
நீதியை விதையுங்கள்:
தேவன் தம் மக்களை நீதியை விதைக்க அழைத்துள்ளார். பாகுபாடு, அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தல் உலகில், விசுவாசிகள் நீதியை விதைக்க அழைக்கப்படுகிறார்கள். குரலற்றவர்களுக்காகப் பேசுவது, உண்மைக்காக நிற்பது, தாழ்த்தப்பட்டவர்களை ஊக்குவிப்பது, நோயாளிகளுக்காக ஜெபிப்பது, ஏழைகளுக்குப் பரிசுகள் வழங்குவது என நிச்சயம் பலன் கிடைக்கும். “துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்” (நீதிமொழிகள் 11:18).
அதிகமாக விதையுங்கள்:
சிலர் கஞ்சத்தனமாக, சிக்கனமாக விதைக்கிறார்கள். மற்றவர்கள் சோம்பேறிகள் மற்றும் உகந்த முறையில் விதைக்க மாட்டார்கள். தேவ ஜனங்கள் தாராளமாகவும், ஏராளமாகவும், பரவலாகவும் விதைக்க வேண்டும். “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரிந்தியர் 9:6).
சோர்ந்து போகாதீர்கள்:
அன்பு, அக்கறை, நீதியை எடுத்துரைத்தல், வளங்களை இணைத்தல், ஜெபம் செய்தல், பரிந்து பேசுதல் மற்றும் பிறரை ஆசீர்வதித்தல் என நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம் என்று பவுல் எழுதுகிறார். தேவனுக்கென்று கால அட்டவணை உள்ளது, அவருடைய திட்டத்தில் அறுவடை நேரம் இருக்கிறது. அறுவடை செய்ய ஒரு பருவம் வரும். இருப்பினும், விதைப்பவர்கள் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது, நல்ல மற்றும் உண்மையுள்ள தேவனை நம்புவோம். நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது (கலாத்தியர் 6:9).
நித்திய ஈவுத்தொகையின் நம்பிக்கையுடன் நான் ஊழியத்தில் ஈடுபடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்