வேதாகமம் எவ்வாறு வரையறுக்கப்பட்டு விவரிக்கப்பட வேண்டும்? மனித குலத்திற்கு தேவன் கொடுத்த வரத்தை விவரிக்க மனித வார்த்தைகள் போதுமானதாக இல்லை. மிக நீளமான பாடல் கொண்டது, (சங்கீதம் 119), அதன் கருப்பொருள் தேவ வார்த்தையின் அடிப்படையிலானது. இந்த சங்கீதத்தில், வேதத்தை விவரிக்க எட்டு எபிரேய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்த்தை அல்லது பதம் வேதாகமத்தின் பல அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
பிரமாணம்:
25 முறை பயன்படுத்தப்பட்ட தோரா என்ற எபிரேய வார்த்தை, கற்பித்தல் அல்லது இயக்குதல் என்பதிலிருந்து பெறப்பட்டது. இந்த வார்த்தைக்கு பிரமாணம் மற்றும் வெளிப்பாடு என்றும் பொருள். பிரமாணம் என்பது ஒரு கட்டளைக்கும் மற்றும் வேதத்தில் உள்ள கட்டளைகள் முழு தொகுப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பேசும் வார்த்தை:
24 முறை பயன்படுத்தப்பட்ட டபார் என்ற எபிரேய வார்த்தையின் பொருள் மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட பேச்சு அல்லது வார்த்தை ஆகும். அதாவது கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை.
சொல்:
இம்ரா என்ற எபிரேய வார்த்தை 19 முறை பயன்படுத்தப்படுகிறது. இது முந்தையதைப் போன்றது (டபார்) ஆனால் இது அனைத்து கட்டளைகள், வாக்குறுதிகள் மற்றும் பேச்சு வார்த்தைகளை உள்ளடக்கியதால் பயன்பாட்டில் பரந்ததாக உள்ளது.
தீர்ப்புகள்:
மிஸ்பாடிம் என்ற எபிரேய வார்த்தை 23 முறை பயன்படுத்தப்படுகிறது. தேவனின் பரிசுத்தமும், நீதியும், நியாயமும் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வார்த்தையின் அர்த்தம் தீர்மானித்தல், பகுத்தறிதல், தீர்ப்பளித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் முடிவெடுத்தல் ஆகும்.
சாட்சிகள்:
எடுட்/எடோட் என்ற எபிரேய வார்த்தை 23 முறை பயன்படுத்தப்படுகிறது. இது சாட்சி என்ற வார்த்தையைப் போன்றது. இதன் பொருள் உடன்படிக்கையின் விதிமுறைகளுக்கு விசுவாசமாக இருப்பதாகும். தேவன் தனது உடன்படிக்கைக்கு உண்மையாக இருக்கிறார், எதிர் தரப்பினர் கடமைகளை நிறைவேற்றாதபோதும் அவர் தன் கடமையை சரியாய் நிறைவேற்றுகிறார்.
கட்டளைகள்:
மிஸ்வா/மிஸ்வாட் என்ற எபிரேய வார்த்தை 22 முறை பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் உட்பட அனைத்து படைப்புகள் மீதும் தேவனின் இறையாண்மையான அதிகாரம் நேரடியான கட்டளைகள் அல்லது விதிகளை வழங்குவதைக் குறிக்கிறது.
சட்டத் திட்டங்கள்:
ஹுக்கிம் என்ற எபிரேய வார்த்தை 21 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. பொறித்தல் அல்லது செதுக்குதல் என்று பொருள்படும் வேர்ச்சொல்லில் இருந்து இந்த வார்த்தை பெறப்பட்டது. இது தேவனின் அதிகாரத்தையும் தேவ பிரமாணங்களின் மாறாத தன்மையையும் குறிக்கிறது.
நியமனங்கள்:
பிக்குடின் என்ற எபிரேய வார்த்தை 21 முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை ஒரு மேலாளர் அல்லது மேற்பார்வையாளரின் கருத்தை வழங்குகிறது, அவர் சூழலைக் கவனித்து, குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் குறிப்பிட்ட செயல் புள்ளிகளை வழங்குவதைக் குறிக்கிறது. ஒவ்வொரு செயல்முறையின் விவரம் மற்றும் விளைவு ஆகியவற்றில் தேவன் ஆர்வமாக உள்ளார்.
நான் வேதாகமத்தை நேசிக்கிறேனா, கற்றுக்கொள்கிறேனா, அதன்படி வாழ்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்