ஒரு போதகர் சாலொமோன் மற்றும் தானியேல் போலவே தானும் புத்திசாலி என்று நினைத்தார். புத்தகம் படிக்கும் மற்ற தலைவர்களை கேலி செய்யும் பழக்கம் அவருக்கு இருந்தது. ஆகையால் அவருடைய சபையில் இருந்த இளைஞர்கள் புத்தகங்கள் வாசிக்கத் தயங்கினார்கள். இப்படி இருக்கும் போது கல்லூரியில் பயிலும் ஒரு இளம் பெண் தனக்கு நல்ல தெளிவு வர வேண்டும் என்பதற்காக போதகரிடம் கேள்விகள் கேட்பதுண்டு. அக்கேள்விகளுக்கு போதகர் சில சமயங்களில் பதில் சொல்வார், ஆனால் பல சமயங்களில் தவிர்க்க முயற்சிப்பார். ஒருநாள் போதகர் சபையில் பகிரங்கமாக "இந்தப் பெண்ணுக்கு சந்தேகம் என்ற பேய் பிடித்திருக்கிறது. அவள் விடுதலை பெற அனைவரும் ஜெபிப்போம்", என்றார். இந்தப் பெண் அதிக கேள்விகளைக் கேட்டதால், அவரால் சந்தேகங்களுக்கு பதிலளிக்க முடியாததால், அப்பெண்ணை குற்றம் சாட்டினார், அவதூறு செய்தார், பகிரங்கமாக அவமானப்படுத்தினார்.
ஞானத்தைக் கற்றுக்கொள்:
போதகர்களுக்கு (சபையின் தலைவர்களுக்கு) பவுல் ஒரு சிறந்த முன்மாதிரி. அவர் மரணத்தை நெருங்கிவிட்டார் என்பது உறுதியாக தெரிந்த போதிலும், புத்தகங்கள் மற்றும் தோற்சுருள்களையும் (பத்திரிகை அல்லது டைரி அல்லது குறிப்பேடு) கொண்டு வரும்படி அவர் திமோத்தேயுவிடம் கேட்டுக்கொண்டார் (2 தீமோத்தேயு 4:13). கிறிஸ்தவர்கள் பவுலைப் போல எப்போதுமே கற்பவர்களாக இருக்க வேண்டும்.
ஞானத்தைக் கற்பி:
போதகர்கள் அல்லது தலைவர்கள், மக்களின் தேடல்களுக்கு பதிலளிப்பவர்களாய் இருப்பது மிக அவசியம்; நன்கு கற்பவர்களாகவும், கவனித்து பதிலளிப்பவர்களாகவும், வழிநடத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். "ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்" (மல்கியா 2:7).
பணக்கார இளைஞன்:
ஒரு பணக்கார இளைஞன் நேர்மையான கேள்விகளுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்தான். கர்த்தர் அவனுக்குப் பதில் சொன்னார். ஆனாலும், அந்த இளைஞன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில்லை என்று முடிவு செய்தான். அதற்காக, ஆண்டவராகிய இயேசு அவனை சந்தேக பேய் என்றோ பிசாசு பிடித்தவன் என்றோ கண்டனம் செய்யவோ அல்லது பழித்துரைக்கவோ இல்லையே (லூக்கா 18:18-30).
தோமா:
மூடிய அறையில் உயிர்த்த ஆண்டவரை சந்திப்பதை அவன் தவறவிட்டான். அவன் சந்தேகப்பட்டவனாய், காயப்பட்ட கிறிஸ்துவைத் தொட்டு அனுபவித்தாலொழிய நான் நம்பமாட்டேன் என்றான். ஆண்டவர் மீண்டும் அவனுக்காக அதே அறையில் தோன்றி கிருபை புரிந்தார். அதற்காக கர்த்தராகிய இயேசு தோமாவை பேய் பிடித்ததாகக் கண்டனம் செய்யவில்லையே.
காரணத்துடன் ஆயத்தம்:
விசுவாசிகளை சாந்தமாக இருக்கும்படி பேதுரு அறிவுறுத்துகிறார், ஆனால் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கு பதில்களை வழங்க ஞானமாக இருக்க வேண்டும். "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" (1 பேதுரு 3:15).
பிசாசைக் கண்டுபிடித்தல்:
புதிய பேய்களைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, சபை தலைவர்கள் படிக்கவும், கற்றுக்கொள்ளவும், சிந்திக்கவும், நம் கண்காணிப்பில் உள்ள அனைவருக்கும் சரியாய் கற்பிக்க ஜெபிக்கவும் வேண்டும்.
மற்றவர்களின் உண்மையான கேள்விகளை தெளிவுபடுத்த நான் ஞானத்தை தேடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்