பல ஆவணங்கள் வரலாற்றில் மீட்டெடுக்க முடியாதபடி கொட்டப்படுகின்றன. சில நேரங்களில், அவை மீட்டெடுக்கப்படுகின்றன. ஆம், நம் அன்பின் பிரயாசத்தை தேவன் மறப்பதில்லை (எபிரெயர் 6:10). அப்படி தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற இப்படிப்பட்ட நினைவுகள் அல்லது ஆவணங்களை தேவன் பயன்படுத்துகிறார். யோசேப்புடன் இருந்த கைதி நண்பன் அவனை இரண்டு ஆண்டுகளாக மறந்துவிட்டான். ஆனாலும் தேவன் யோசேப்பு மற்றும் இஸ்ரவேலின் வரலாற்றை மாற்றியமைக்க நினைவு கூர்தலை கொடுத்து அவனுக்கு உதவினார் (ஆதியாகமம் 40:23; 41:9). எஸ்தர் ராணியின் வரலாற்றில் நடந்த சம்பவமும் பழைய காலவர்த்தமானங்களை ராஜா அறிந்து கொண்ட போது பிரதிபலிக்கப்பட்ட சம்பவமே (எஸ்தர் 6).
1) ராஜாவுக்கு நித்திரையில்லை:
அகாஸ்வேரு அரசனால் தூங்க முடியவில்லை. ராத்திரியிலே ராஜாவுக்கு தூக்கம் வராமல் இருந்தபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. அதில் வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவைக் கொல்லத் திட்டமிட்ட செய்தியும் மொர்தெகாய் ராஜாவின் உயிரைக் காப்பாற்றிய தகவலும் அதில் இருந்தது, மொர்தெகாய் அதற்காக கௌரவிக்கப்படவில்லை அல்லது வெகுமதி அளிக்கப்படவில்லை என்பதையும் ராஜா அறிந்தான். விடியற்காலையில் ராஜா மொர்தெகாயை கௌரவிக்க தீர்மானித்தான்.
2) ஆமானுக்கு எச்சரிக்கை:
மொர்தெகாய் மற்றும் பேரரசின் 127 மாகாணங்களில் உள்ள அனைத்து யூத மக்களையும் கொல்ல சதி செய்த ஆமான் அரண்மனைக்கு வந்தான். அவன் மொர்தெகாயை தான் உருவாக்கிய தூக்கு மேடையில் தூக்கிலிடுவதைப் பற்றி பேச விரும்பினான். இருப்பினும், ராஜா மரியாதை செய்ய விரும்பும் ஒரு நபர் எப்படி நடத்தப்படுவார் என்று ராஜா கேட்டான். ஆமான் தன்னை தான் ராஜா கௌரவிக்க போகிறார் என்று நினைத்தான்; "ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும். அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்". மொர்தெகாய்க்கு அதைச் செய்யும்படி ராஜா ஆமானுக்குக் கட்டளையிட்டார். இது (இந்த ஆச்சரியம்) ஆமானுக்கு தேவன் கொடுத்த எச்சரிக்கை.
3) மொர்தெகாய்க்கான பலன்:
மொர்தெகாய்க்கான வெகுமதி அந்த நேரத்தில் மறுக்கப்பட்டது. ஒருவேளை, ராஜா தனக்கு வெகுமதி அளிக்காததால் மொர்தெகாய் வருத்தப்பட்டிருக்கலாம். "கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்" (சங்கீதம் 75:6-7).
4) ஆண்டவர் நியமித்த நேரம்:
மொர்தெகாய் தன்னையும், எஸ்தர் ராணியையும், பேரரசு முழுவதும் சிதறிக் கிடந்த யூத தேசத்தையும் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தான். அவனது திட்டம் வெற்றியடையுமா என்பது அவனுக்கு ஒரு பதட்டமான தருணம்? ஒரு மறக்கமுடியாத செயலை உயிரற்ற ஆவணத்தைக் கொண்டு நினைவுப்படுத்தி தேவன் பதிலளிக்கிறார், அதுவும் ஆமானைக் கொண்டே வெகுமதியளித்து நிறைவேற்றுகிறார். யூதர்களின் பாதுகாப்பிற்காகப் போராடும் மொர்தெகாயின் தீர்மானத்திற்கு இது ஒரு உறுதி.
மரித்து போன என் சூழ்நிலைகளை உயிர்த்தெழுப்ப தேவ வல்லமையால் முடியும் என நான் நம்பலாமா?
Author: Rev. Dr. J. N. Manokaran