ஜனங்களால் தவறாக வழி நடத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். "குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே" (மத்தேயு 15:14). வருத்தம் என்னவெனில், இன்னும் சிலர், ஆலோசகர்கள் அல்லது அறிவுரையாளர்கள் அல்லது வழிகாட்டிகளை நம்பும் பலர் உள்ளனர்.
1) பரிதாபகரமான ஆலோசகர்கள்:
அகசியா ராஜாவின் வீழ்ச்சிக்குக் காரணம் அவன் ஆலோசகர்கள் கர்த்தருடைய வழியிலிருந்து அவனை வழிதவறச் செய்தனர். "அவன் ஆகாபின் குடும்பத்தைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்" (II நாளாகமம் 22:4). யோபின் நண்பர்கள் அவனைப் பார்த்து ஆறுதலளிக்க வந்தனர். ஆனால் இறுதியில் அவர்களின் ஆலோசனை அந்தோ பரிதாபமாகவும் ஆறுதலற்ற வகையிலும் இருந்தது (யோபு 16:2).
2) தீங்கு விளைவிக்கும் ஆலோசகர்கள்:
தாவீதின் குமாரன்களில் ஒருவன் அம்னோன், அவனுடைய நண்பன் யோனதாப். தாமார் மீது அம்னோனுக்கு ஒருவிதமான ஆசை இருப்பதை அறிந்ததும், தாமாரை கற்பழிக்கும்படி அம்னோனுக்கு பொல்லாத அறிவுரையை வழங்கினான். அம்னோன் அந்த ஆலோசனையை ஏற்ற முட்டாள் என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் பின்நாட்களில் இந்த இழிவான செயலுக்காக தாமாரின் சகோதரன் அப்சலோமால் கொல்லப்பட்டான் .
3) வன்மமான ஆலோசகர்கள்:
ஒருவரை அழிக்க நுண்ணறிவு வழங்கும் ஆலோசகர்கள் உள்ளனர். அகித்தோப்பேல் ஒரு மதிப்புமிக்க ஆலோசகராக இருந்தான், அவனுடைய வார்த்தைகள் தேவவாக்கு போல இருந்தன. அவன் பத்சேபாளின் உறவினன் மற்றும் தாவீதைக் கொன்று பழிவாங்க விரும்பினான். எனவே, தாவீதுக்கு எதிராக கலகம் செய்த அப்சலோமுக்கு அவன் ஒரு இராணுவ உத்தியைக் கொடுத்தான். இதையெல்லாம் அறிந்த "தாவீது, கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்" (2 சாமுவேல் 15:31).
4) பக்குவமற்ற ஆலோசகர்கள்:
முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை ரெகொபெயாம் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி, இஸ்ரவேல் தேசத்தை பிளவுபடுத்தினான் (I இராஜாக்கள் 12:8).
5) அற்புதமான ஆலோசகர்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை 'ஆலோசனைக் கர்த்தர்' என்று வேதாகமம் போதிக்கிறது (ஏசாயா 9:6). கர்த்தருடைய வார்த்தை நம்மை நித்தியத்திற்கு வழிநடத்தக்கூடிய தேவனுடைய அறிவுரைகளால் நிறைந்துள்ளது. பரிசுத்த ஆவியானவர் ஆறுதலளிப்பவர் மற்றும் ஆலோசகராக இருந்து நம்மை எல்லா சத்தியத்திலும் வழிநடத்துபவர். பொதுவாகவே, தேவபக்தியுள்ள தலைவர்கள் எப்போதும் சரியான அறிவுரையை வழங்குவார்கள்.
நான் கர்த்தருடைய ஆலோசனையின்படி நடந்து, துன்மார்க்கரின் ஆலோசனையை நிராகரிக்கக் கூடிய பாக்கியவானா? (சங்கீதம் 1:1-3)
Author : Rev. Dr. J. N. Manokaran