தாவீது தேவனின் இருதயத்திற்கு ஏற்றவனாக இருந்தான். இருப்பினும், அவன் பல முறை தவறு செய்திருந்தான், தேவ நியமனங்களை மீறினவனாக இருந்தான். அவன் என்ன நியாயப்பிரமாணத்தைப் பற்றி அறியாதவனா அல்லது தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவனா?
1) மக்கள் தொகை கணக்கெடுப்பு:
தாவீது யோவாபுக்கு இஸ்ரவேலின் மக்கள்தொகையை இலக்கம் பார்க்கும்படிக்கு கட்டளையிட்டான். இருப்பினும், யோவாப் விரும்பவில்லை, அதைச் செய்ய வேண்டாம் என்று தாவீதிடம் கேட்டுக் கொண்டான். ஆனாலும், தாவீதின் உத்தரவு வென்றது. இதன் விளைவாக எழுபதினாயிரம் பேர் இறந்தனர் (2 சாமுவேல் 24). ஆம் யாத்திராகமம் 30:12 சொல்வது என்னவென்றால்; "நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்".
2) உடன்படிக்கைப் பெட்டி:
தாவீதிற்கு சரியான திட்டமிடல் மற்றும் ஆயத்தம் இல்லாமல் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவர முயன்றான். லேவியர்கள் மட்டுமே உடன்படிக்கைப் பெட்டியைத் தங்கள் தோளில் சுமக்க வேண்டும். ஆனால் தாவீது பெட்டியை ஒரு வண்டியில் கொண்டு வந்தான். மாடுகள் மிரண்ட போது ஊசா பெட்டி விழுந்து விடுமோ என நினைத்து அதை பிடித்தான், அங்கேயே மடிந்தான்.
3) திருமணம்:
வேதாகமம் ஒருதார மணத்தைக் கற்பிக்கிறது. இருப்பினும், தாவீது பல மனைவிகளை மணந்தான். மேலும், அவன் உரியாவின் மனைவியான பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தான். போதாத குறைக்கு உரியாவையும் கொன்றான். தாவீது பத்துக் கட்டளைகளில் குறைந்தது மூன்றையாவது தெளிவாக மீறினான். அவன் இச்சித்தான், விபச்சாரம் செய்தான், கொலை செய்தான்.
4) குழந்தை வளர்ப்பு:
மோசே கற்பித்த பிள்ளை வளர்ப்பு முறைகளை தாவீது பின்பற்றவில்லை. "நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி…" (உபாகமம் 6:7).
5) பிரமாணத்தை போதிப்பவர்கள் இல்லை:
தாவீது இஸ்ரவேல் தேசத்தை அரசியல் ரீதியாக ஒரு சக்தி வாய்ந்த ராஜ்யமாக வளர்த்தான். இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், இசைக்கலைஞர்களையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான் (1 நாளாகமம் 23,24, 25). அவன் ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டுவதற்கான பொருட்களையும் சேகரித்தான், பின்னர் அவனது மகன் சாலொமோனால் கட்டப்பட்டது. "இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்" (1 நாளாகமம் 22:14). ஆம், இன்றும் பல தலைவர்கள் (ஊழியர்கள்) கட்டிடங்களை எழுப்புகிறார்கள், இசைக்கலைஞர்களை ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் வேதாகமத்தைக் கற்பிப்பது இல்லை.
நான் சிரத்தையுடன் தேவ நியமனங்களைக் கற்றுக் கொள்கிறேனா? மற்றும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறேனா? சிந்திப்போமா
Author: Rev. Dr. J .N. மனோகரன்