நேபுகாத்நேச்சாரின் முட்டாள்தனத்தையும் மற்றும் அவனுக்கு தீர்மானித்திருந்த தண்டனையைப் பற்றியும் வெளிப்படுத்த தேவன் கிருபையுள்ளவராக இருந்தார். நேபுகாத்நேச்சார் ஓய்வெடுக்கையில், அவன் ஒரு கனவு கண்டான் (தானியேல் 4:18-27). நேபுகாத்நேச்சார் கனவில் பார்த்த மரம் பெரியதாகவும், பச்சையாகவும், செழிப்பாகவும் இருந்தது. தோட்டக்காரன் அல்லது ஒரு தேவதூதன் மரத்தின் தலைவிதியை விளக்கினான். அது வெட்டப்பட்டது, அதன் அழகு, அளவு மற்றும் வலிமையை இழந்தது. மரம் ஒரு மனிதனைக் குறிக்கிறது. வெட்டப்பட்ட மரத்தைப் போல, இந்த மனிதனுக்கு ஒரு மிருகத்தின் இதயம் கொடுக்கப்படும். மனிதன் கட்டுப்படுத்தப்படுவான் அல்லது பாதுகாக்கப்படுவான், சுதந்திரமாக இருக்க மாட்டான். அப்போது உன்னதமானவர் முழு பூமியின் இறையாண்மையுள்ள ஆட்சியாளர் என்பதை மனிதன் உணர வேண்டும்.
பாபிலோனின் ஞானிகள் யாராலும் கனவை விளக்க முடியாததால், அவர்கள் தானியேலை வரவழைத்தார்கள். கனவின் விளக்கத்தை அறிவிக்கும்படி நேபுகாத்நேச்சார் தானியேலைக் கேட்டுக் கொண்டான். கனவைக் கேட்டு தானியேல் அதிர்ச்சியடைந்தான். உண்மையைச் சொல்லப்போனால், கனவின் விளக்கத்தைக் குறித்து தானியேல் சிறிது பதட்டமடைந்தான். அவனின் தயக்கத்தை உணர்ந்த நேபுகாத்நேச்சார் அவனிடம் தயக்கமில்லாமல் விளக்கத்தைக் கூறும்படி கேட்டான்.
நாத்தான் தாவீதை நோக்கி; "நீயே அந்த மனுஷன்" (2 சாமுவேல் 12:7) என்றானே அதுபோல தானியேலும் நேபுகாத்நேச்சரை நோக்கி; "அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தான்" (தானியேல் 4:22) என்றான். தானியேல் நேபுகாத்நேச்சாரை எதிர்கொள்கிறான்; முதலாவதாக, அவன் பாவங்களிலிருந்து விடுபட வேண்டும், அதாவது மனந்திரும்ப வேண்டும். இரண்டாவதாக, அவன் நீதியைப் பின்பற்ற வேண்டும். மூன்றாவதாக, ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவதற்கும், அவர்களிடம் தாராளமாக நடந்து கொள்வதற்கும் மனந்திரும்புதல் சான்றாக இருக்க வேண்டும். நான்காவதாக, இப்படியெல்லாம் நடந்து கொள்ளும்போது, ஒருவேளை கர்த்தர் உங்கள் செழிப்பை நீட்டிப்பார், அவமானத்திற்கு ஆளாக வேண்டிய அவசியமில்லை. நினிவேயின் ராஜா யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனம் மாறியதுபோல், நேபுகாத்நேச்சாரும் மனந்திரும்பியிருக்க வேண்டும் (யோனா 3).
நேபுகாத்நேச்சார் மனந்திரும்புவதற்கு பன்னிரெண்டு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது ஆனாலும் மனந்திரும்பவில்லை. தொங்கும் தோட்டங்கள் உட்பட பெரிய நகரமான பாபிலோனைப் பற்றி அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டிருந்தபோது, அவன் கனவில் வந்த அதே வார்த்தைகளைக் கொண்ட குரலைக் கேட்டான். "ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று" (தானியேல் 4:31). பின்பு அவன் கிமு 582 முதல் கிமு 575 வரை போன்ட்ரோபி என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டான்; பாதிக்கப்பட்ட நபர் தன்னை ஒரு மாடாக அல்லது ஒரு எருதாக நம்புவார்கள். அவர்கள் மாடு அல்லது எருது போல் வாழ முயற்சி செய்வார்கள்; நான்கு கால்களில் நடப்பது, புல் சாப்பிடுவது, அடிக்கடி பேசுவதை நிறுத்துவது, மூச்சிரைப்பது மற்றும் பசுக்கள் அல்லது எருதுகளின் கூட்டங்களில் சேருவது என காணப்படுவார்கள்.
என்னுடைய சாதனைகளைப் பற்றி நான் பெருமைப்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்