ஆவிக்குரிய பெருமை ஆபத்தானது, அவர்கள் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்றும், மற்றவர்களை விட தாங்கள் தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்றும், மற்றவர்களை விட அதிக உரிமைகள்/சலுகைகள் தங்களுக்கு இருப்பதாகவும் நினைப்பார்கள்.
1) பரிசேயர்கள்:
பரிசேயர்கள், மத உயரடுக்கினர், மோசேயின் பிரமாணத்தை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும் என தீவிரமாக செயல்படுத்துபவர்கள். வரலாற்றில் எந்தக் காலத்திலும் அவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டவில்லை. இருப்பினும், அவர்கள் தங்களை சாதாரண மக்களுடன் ஒப்பிட்டு, தங்கள் ஆவிக்குரிய சாதனைகளில் பெருமிதம் கொள்கிறார்கள் (லூக்கா 18:9-14). தாங்கள் துன்மார்க்கர்கள் அல்லது கொள்ளையர்கள் அல்லது விபச்சாரிகள் அல்லது வரி வசூலிப்பவர்கள் அல்ல என்றும்; ஆனால் மற்ற ஆண்களையும் பெண்களையும் விட ஆவிக்குரிய வாழ்வில் உயர்ந்தவர்கள் என பரிசேயர்கள் கருதினர். எனவே, தங்களின் ஜெபத்தைக் கேட்க தேவன் கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். பரிசேயர் எந்த மாற்றமும் இல்லாமல் தேவன் சமூகத்தில் இருந்து திரும்பிச் சென்றான், அதே நேரத்தில் தாழ்மையான பாவி நீதிமானாகத் திரும்பினான். மற்றவர்களை இழிவாகப் பார்ப்பது ஆவிக்குரிய பெருமையின் வெளிப்பாடு.
2) உசியா:
உசியா ராஜா தனது சேனையின் வெற்றி தன்னை ஒரு ஆவிக்குரியவனாக ஆக்கியது என்று நினைத்தான், அவன் ஒரு ஆசாரியனைப் போல நடந்து கொண்டான். லேவியர்களும் ஆசாரியர்களும் மட்டுமே உள்ளே நுழைந்து ஊழியம் செய்ய முடியும் இடமான கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். தேவன் உசியாவை தொழுநோயால் தாக்கினார் (2 நாளாகமம் 26:19).
3) எலியா:
மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவனான எலியா, தான் மட்டுமே விசுவாசி என்று கூறினான். அவனது ஆவிக்குரிய பெருமை மற்ற விசுவாசிகளை அங்கீகரிக்க மறுத்தது. தேவன் அவனை அதில் திருத்த வேண்டியிருந்தது, "பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்" (1 இராஜாக்கள் 19:18). எலியா ஒபதியாவின் விசுவாசத்தை அங்கீகரிக்கவில்லை; ஆம், ஒபதியாவால் மறைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்ட நூறு தீர்க்கதரிசிகளை எலியா அங்கீகரிக்கவில்லை (1 இராஜாக்கள் 18:13).
4) சீஷர்கள்:
ஆவிக்குரியப் பெருமிதத்தில் இருந்த சீஷர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் யாரோ பிசாசுகளைத் துரத்துவதைக் கண்டு வியப்படைந்தனர். "இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்" (லூக்கா 9:49-50).
நாம் அங்கீகரிக்க மறுத்த ஏராளமான மக்கள் பரலோகத்தில் இருப்பதைக் கண்டு நாம் அனைவரும் ஒருநாள் ஆச்சரியப்படுவோம். ஆவிக்குரியப் பெருமை என்பது பரிசுத்தம் அல்லது மதப் பெருமை அல்லது வேதாகமத்தைப் பற்றிய அறிவின் காரணமாக இருக்கலாம். ஆவிக்குரிய ரீதியில் பெருமை கொண்டவர்கள் உட்பட என அனைத்து பெருமைகளுக்கும் தேவன் எதிரானவர். ஆம், பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.
என் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நான் தாழ்மையுடன் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்