சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்று என்ற தேவ அழைப்பை குரோஷியாவில் உள்ள சபை எவ்வாறு அப்பியாசப்படுத்தியது? (மத்தேயு 16:24-26)
இது இணையத்திலிருந்து ஒரு பகுதி:
குரோஷிய பாரம்பரியத்தின் படி, ஒரு ஜோடி திருமணம் செய்து கொள்ளும்போது, போதகர் அவர்கள் சரியான நபரைக் கண்டுபிடித்ததாகச் சொல்லவில்லை. மாறாக! அதற்கு பதிலாக, அவர் அவர்களிடம்: "உங்கள் சிலுவையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள், இது அன்பிற்கான சிலுவை, அதை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும், சிலுவையை கை விடுவதற்கு அல்ல, இது ஒரு புதையல்." ஹெர்சகோவினாவில், சிலுவை மிகப்பெரிய அன்பைக் குறிக்கிறது, சிலுவை என்பது குடும்பத்தின் புதையல்.
மணமகனும், மணமகளும் தங்கள் திருமண நாளில் சபைக்குள் நுழைகிறார்கள், அவர்கள் தங்களுடன் ஒரு சிலுவையை எடுத்துச் செல்கிறார்கள். போதகர் சிலுவையை ஆசீர்வதிக்கிறார்; மணமகள் தனது வலது கையை சிலுவையின் மீது வைக்கிறார் மற்றும் மணமகன் தனது கையை அவள் கைகள் மீது வைக்கிறார், இதனால் இரண்டு கைகளும் சிலுவையின் மீது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன; திருச்சபையின் சடங்குகளின்படி, ஒருவருக்கொருவர் மரணம் வரை உண்மையாக இருக்க வேண்டும், சந்தோஷத்திலும் துக்கத்திலும், நோய் மற்றும் ஆரோக்கியத்திலும் எல்லா நிலையிலும் உடன் இருக்க வேண்டும் என்று சத்தியங்களை பரிமாறிக் கொள்ளும்போது போதகர் தனது சால்வையைக் கொண்டு அவர்களின் கைகளை மூடுகிறார். பின்னர் மணமக்கள் சிலுவையை முத்தமிடுகிறார்கள். திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள்; இம்மணமக்களில் ஒருவர் மற்றவரை விட்டு விட்டால், அவர் கிறிஸ்துவை சிலுவையிலே விட்டுவிடுகிறார் என்பதை புரிந்துகொள்கிறார்கள்.
தம்பதிகள் சிலுவையை தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து மரியாதைக்குரிய இடத்தில் வைக்கிறார்கள். அது எப்போதும் சத்தியத்தை நினைவுபடுத்துவதாகவும், குடும்ப ஜெபம் செய்யும் இடமாகவும் இருக்கும். இக்கட்டான சமயங்களில், குடும்பம் வழக்கறிஞரிடமோ அல்லது மனநல மருத்துவரிடமோ செல்லாமல், இயேசு கிறிஸ்துவின் உதவியைத் தேடி சிலுவையின் முன் ஒன்றாக மண்டியிடுகிறது. கணவனும் மனைவியும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் சிலுவையை முத்தமிடவும், முதலில் இயேசுவுக்கு நன்றி செலுத்தாமல், அவருடைய மன்னிப்பை நாடாமல் இரவு படுக்கைக்கு செல்ல கூடாது எனவும் கற்றுக்கொடுப்பார்கள். ஆக, இயேசு தம்முடைய கரங்களில் அவர்களைப் பிடித்திருக்கிறார், பயப்பட ஒன்றுமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.
என் குடும்ப வாழ்க்கை கிறிஸ்துவை மையமாக கொண்டதா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்