கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில், நெடு நாளாய்ப் பிசாசுகள் பிடித்த ஒரு மனிதன் இருந்தான். அவன் ஆடைகளை அணியவில்லை, வீட்டில் வசிக்கவில்லை, கல்லறைகளுக்கு மத்தியில் தங்கி வந்தான். வாழ்வோ சக மனிதர்களோடான ஐக்கியமோ அவன் விருப்பமாக காணப்படாமல் மரணத்தை விரும்புகிறவனாக இருந்தான். அவனுக்கு ஒரு அபார வலிமை இருந்தது, அவனால் இரும்புச் சங்கிலிகளை கூட உடைக்க முடியும். தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு வதைத்துக் கொண்டு அழுது புலம்புவதே அவனின் அன்றாட நிகழ்வாக இருந்தது. அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை (லூக்கா 8:26-39; மாற்கு 5:1-20).
இப்படியாக பிசாசு பிடித்திருந்த நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து அற்புதமாக விடுவிக்கப்பட்டான். அதற்குப் பின்பு, ஒரு சாதாரண மனிதனாக, வஸ்திரம் தரித்து தெளிவான புத்தியோடு கூட கர்த்தராகிய இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்தான். இந்த காட்சி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. ஏன்?
1) அமர்ந்திருந்தல்:
விடுவிக்கப்பட்ட மனிதன் அங்குமிங்கும் ஓடாத படி ஓரிடத்தில் உட்கார முடியும். அவன் சரியான இடத்தில் தேவ சமூகத்தில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருந்தான். பேய் பிடித்த மனிதனைப் பார்த்து மக்கள் பயப்படவில்லை, ஆனால் அமைதியாக எவ்வித ஆர்ப்பாட்டமின்றி உட்கார்ந்திருக்கும் போது பயந்தார்கள். ஆம், இந்த மனிதன் மார்த்தாளைப் போலல்லாமல், சமாதானத்தையும் ஞானத்தையும் பெறுவதற்காக அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்த மரியாளைப் போன்றவன் (லூக்கா 10:42).
2) வஸ்திரம்:
வெட்க உணர்வு இல்லாதவன், வஸ்திரம் தரித்திருந்தான். கர்த்தர் இரட்சிப்பின் வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, நீதியின் சால்வையை தரித்தார் (ஏசாயா 61:10). அவன் ஆடையின்றி சுற்றித் திரிந்தபோது அந்த திரளான ஜனங்கள் பயப்படவில்லை, இப்போது சாதாரணமாக உடையணிந்த மனிதரைப் பார்த்து பயப்படுகிறார்கள். இப்போது மாறிய மனிதன் வெட்கக்கேடான செயல்களைச் செய்ய மாட்டான், ஆனால் மரியாதைக்குரிய செயல்களைச் செய்வான்.
3) தெளிந்த புத்தி:
அழுக்கு, கொடூரம், கெட்ட சிந்தை, அழிவுகரமான எண்ணங்களால் நிரம்பியிருந்த மனம் அமைதி, அன்பு, மகிழ்ச்சி போன்ற எண்ணங்களால் புதுப்பிக்கப்பட்டது. அவனால் தெளிவாக சிந்தித்து சரியானதை தெரிவு செய்ய முடியும். பின்பதாக அவன் ஆண்டவரின் சீஷனாக இருப்பதை தெரிந்தெடுத்தான். கோணலான அல்லது மாறுபாடான மனதைக் கொண்ட திரளான ஜனங்கள் குணமடைந்த மனிதனையோ அல்லது கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுவதற்கான அவனது விருப்பத்தையோ பாராட்ட முடியவில்லை.
திரளான ஜனங்கள் அனைவரும் கர்த்தராகிய இயேசுவை வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்களோடு கொண்டிருப்பதற்குப் பதிலாக, பிசாசு குடிக்கொண்டிருந்த மனிதனை தங்கள் மத்தியில் வைத்துக் கொள்ள விருப்பம் கொண்டனர்.
எனக்கு எதையும் சரியாக செய்யும் சிந்தை இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்