சில கலாச்சாரங்களில் உள்ள பழக்க வழக்கங்கள் அல்லது வாழ்க்கை முறைகள் தேவனுடைய கண்ணோட்டத்தில் சரியற்றது, அதாவது அதை ஏற்றுக் கொள்ளவோ மற்றும் அங்கீகரிக்கவோ முடியாது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு சமூகம் உள்ளது, அவர்களின் வாழ்வாதாரம் திருடுவது ஆகும். அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பொதுவாக ஆடு, கோழி, முட்டை, நெல், கடையில் திருடுதல் என ஈடுபடுவதுண்டு. மேலும் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து திருடவும் திட்டமிட்டனர். இப்படியிருக்கும் போது, அவர்களுக்கு மத்தியில் ஊழியம் செய்ய ஒரு கிறிஸ்தவ சுவிசேஷகர் சென்றார். அங்கு அவர் ஒரு மனிதனுடன் நட்பு கொண்டார் மற்றும் ஒரு வேதாகமத்தையும் படிக்க கொடுத்தார்.
அந்த மனிதனும் எப்போதாவது வேதாகமத்தைப் படிப்பதுண்டு; அப்படி படிக்கும் போது ஒருநாள் பத்து கட்டளைகள் அவர் கண்ணில்பட அதை படித்தார், பயந்து போனார். அதில் 'களவு செய்யாதிருப்பாயாக' என்ற கட்டளை அவரைத் தொட்டது. அவர் குழப்பமடைந்து, பதற்றமடைந்தார், உடனடியாக சுவிசேஷகரைக் காணச் சென்றார். “ஐயா, என்னால் இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியாது. இது ஒரு ஆபத்தான புத்தகம்", என்றார். அப்போது குழப்பமடைந்த சுவிசேஷகர் அவரிடம் ஏன் எனக் கேட்டார்? அதற்கு அவர்; இந்த புத்தகத்தில் களவு செய்யக்கூடாது என இருக்கிறது, ஆனால் திருடுவது எனது தொழில் மற்றும் அதுவே எங்கள் வாழ்வாதாரம். எங்கள் சமூகம் முழுவதும் இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. எங்களால் மாற்ற முடியாது, தயவுசெய்து இந்த புத்தகத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ஐயா என்றார். அவரது கலாச்சாரம் மற்றும் மரபுகளின் படி, திருடுவது என்பது சரியானது மற்றும் மரியாதைக்குரியது. சுவிசேஷகர் அவரிடம் சரி நீங்கள் திருடாமல் வாழ எவ்வளவு தேவை என்பதாகக் கேட்டார். “ஒரு நாளைக்கு பத்து ரூபாய்” என்றார். நீங்கள் திருடாமலே அந்தத் தொகையை தேவனால் கொடுக்க முடியும் என்று விளக்கினார். அதுமாத்திரமல்ல வேதாகமத்தை எடுத்துச் செல்லும்படியும் சுவிசேஷகர் வலியுறுத்தினார். அவரும் சுவிசேஷகரிடம் பேசி முடித்துவிட்டு சைக்கிளில் கொஞ்ச தூரம் சென்றபோது, வழியில் ஒரு புதருக்குள் காகிதம் ஒன்று வண்ணத்துப் பூச்சியைப் போல படபடப்பதைக் கண்டார். அதனருகில் சென்று சைக்கிளை நிறுத்தி விட்டு பார்த்தால் அது ஒரு பத்து ரூபாய் நோட்டு.
அதைக் கண்டு ஆச்சரியப்பட்டவர் அதை எடுத்துக் கொண்டு சுவிசேஷகரிடம் ஓடினார். "ஐயா உண்மையாகவே உங்கள் கடவுள் பெரியவர்; இங்கே பாருங்கள், இன்றைய தேவைக்கான பணம் என்னிடம் இருக்கிறது"; என்றார். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக அநுதின தேவைக்காக திருடாமலே தேவனிடமிருந்து தேவைகள் சந்திக்கப்பட்டது. அவர் ஆண்டவரை தன் வாழ்வில் ஏற்க முடிந்தது, அவரது வாழ்க்கையும் மாற்றம் பெற்றது. மிஷன் ஏஜென்சி கொடுத்த கடனில் நேர்மையான சிறு வியாபாரி ஆனார். அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரின் உறவினர்கள் மற்றும் முழு கிராமமும் தேவனை அறிந்து கொண்டனர். அவரது கிராமத்தில் ஒரு சபைக் கட்டப்பட்டது, மேலும் அவர் அந்த புதிய சபையில் முக்கிய பங்கை வகித்தார். ஒரு காலத்தில் மற்றவர்களிடம் இருந்து கொள்ளையடித்தவர், இப்போது மற்றவர்களுக்கு தாராளமாக உதவி செய்யுமளவு வளர்ந்து பெருகினார். ஆம், நற்செய்தி கலாச்சாரங்களை நல்லது கெட்டதை சீர்தூக்கி பார்க்கச் செய்கிறது மற்றும் கலாச்சாரத்தில் ஒரு மாற்றத்தை அளிக்கிறது.
நற்செய்தி என்னை மாற்றிவிட்டதா அல்லது நான் கலாச்சாரத்தை மாற்றிவிட்டேனா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்