இன்றைய காலக் கட்டத்தில் சிறிய சிறிய காரியங்களுக்காவது எல்லரும் பொய் சொல்கிறதை நாம் காண்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பெரிய தேவமனிதர்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட பொய் சொல்வதை ஒரு தவறான காரியமாக எடுத்துக் கொள்வதில்லை. உங்களைப் பார்த்து யாராவது," நான் எந்த காலத்திலும் பொய் சொன்னதில்லை, இனிமேலும் ஒருக்காலும் பொய்சொல்ல மாட்டேன்" என்று சொன்னால் ஏற இறங்க அவர்களை பார்ப்போமல்லவா? கிறிஸ்தவர்களாகிய நாம் பொய் பேசலாமா? அல்லது பொய் பேசுவதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா?
எனக்கு பிடிக்காதகுறள்கள் பல உண்டு. அதில் ஒன்றுஎன்னவெனில்,
பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்கும்எனின்
ஒரு பொய்யினால் நன்மை உண்டாகுமெனில் அந்த பொய் பொய்யல்ல,அது உண்மைதான் என்பது இதன் பொருளாகிறது. கிறிஸ்தவ நோக்கில் இதனை ஏற்றுக்கொள்வது சற்று (எனக்கு மிகவும்) கடினமாக இருக்கிறது. நான் ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்த போது அந்த கம்பெனியின் மேலதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் செய்துமுடிக்க முடியாத ஒரு இலக்கை நிர்ணயித்து அதை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவர். ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் பொய் பேசாமல் அதாவது அந்த இலக்கை ஏற்றுக் கொள்ளாமல் தப்பிப்பது எனக்கு ஒரு தவிப்பாக இருந்தது. இது எனக்கு ஒரு பெரிய போராட்டமாகப் பட்டது. ஆகவே இதற்கு ஆலோசனை உதவி வேண்டி பிரபலமான ஒரு ஊழியரிடம் சென்றேன். ஆனால் அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அவர் கூறியதென்னவெனில், " நம் தேவன் சின்ன சின்ன பொய்களையெல்லாம் தவறாக நினைக்க மாட்டார்.ஆகவே வருத்தப்படாதீர்கள்" என்று சொன்னார். இன்றைய கால கட்டத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் பொய் பேசாமல் வாழ முடியுமா?
"சின்ன சின்ன தவறுகளும், சின்ன சின்ன பொய்களும் தான் வாழ்க்கையை சுவாராசியமாக்குகின்றன" என்று ஒருவர் சொன்னார். இது எந்தளவுக்கு உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். பல பெரிய பிரச்சனைகளுக்குக் காரணம் சின்ன சின்ன பொய்களும் தவறுகளும் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு பொய் சொன்னால் ஒராயிரம் பொய் சொல்ல வேண்டியதிருக்கும் என்பது நம் முன்னவர் வாக்கு. நாம் மேலே தொடர்ந்து வாசிப்பதற்கு முன் நம் தேவன் இக்காரியத்தில் எப்படிப்பட்டவர் என்பதை அறிவது மிக அவசியம்.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. -எண்ணாகமம் 23:19
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை - 1 சாமுவேல்15:29
பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை -சங்கீதம் 101:7
பொய்யுரையாத தேவன் - தீத்து1:3
எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் -எபிரெயர் 6:18
ஆம் நம்முடைய தேவன் பொய்யுரையாத தேவன். ஆகவேதான் அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவரைப்போல இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். ஆகவேதான் தேவன் நமக்கு எழுதிய கடிதமாகிய பரிசுத்த வேதாகமத்திலும் அதை எழுதி வைத்துள்ளார்.
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.- லேவியராகமம்19:11
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள் - கொலோசெயர்3:9
இதை வாசிக்கிற நீங்கள் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. இக்காலத்தில் இது சாத்தியமா? அட போங்கையா! என்று கூற நினைக்கலாம். ஆனால் பரிசுத்த வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது: ஆதலால், அவர்( இயேசு) தாமேசோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப் படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் (எபி.2:18).
அவர் நம்மைப் போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார் என்று எபிரெயர் 4ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர் இந்த பொய் ஆகிய சோதனையிலும் சோதிக்கப்பட்டு அதனை ஜெயித்தார். அவர் ஜெயித்தால் நாமும் ஜெயிக்க முடியும். நம்முடைய ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரே! பொய் சிறிதானாலும் அது பாவமே. தேவன் பொய்யை மட்டுமல்ல- பொய் பேசுகிறவர்களையும் வெறுக்கிறார். நாம் பொய் பேசும் போது அவர் மனம் துக்கமடைகிறது.ஆகவே நாம் இந்தக் காரியத்திலும் தேவனைப் போல மாற முயற்சி செய்வோம். தேவன் இப்படிப்பட்ட முயற்சிகளில் பிரியமாயிருக்கிறார்.
பலருக்குபொய்பேசுவது ஒரு தொற்று நோய்
பொய்பேசதவறாது அவர்கள் வாய்
உண்மையை உணர்ந்திடுவாய்
உலகிற்குஉரைத்திடுவாய்
வாய்மை காத்திடுவாய்
வேதமே மெய்
மற்றதெல்லாம் பொய்
சாத்தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் என்று நம் ஆண்டவர் இயேசு கூறினார். நாம் பொய் பேசுவோமாகில் நாம் யாருடைய பிள்ளைகளாக இருப்போம். நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். நாம் பொய் பேசாமலிருப்பதற்கு ஒரு எளிய பார்முலா இருக்கிறது. அது என்ன தெரியுமா? நாம் வழவழவென்று பேசாமல் நம்முடைய நாவை அடக்கினால் போதும். ஏனெனில் சொற்களின் மிகுதியினால் பாவமில்லாமற் போகாது என்று வேதாகமம் கூறுகிறது.பேசாதிருந்தால் மூடனும்ஞானியென்னப் படுவான் என்று நீதிமொழிகள் புத்தகம் கூறுகிறது. ஆகவே நாம் பொய்பேசுகிற காரியத்தில் குற்ற மனப்பான்மையை நீக்கி குற்றம் களைய முயலுவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
தேவனே! பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்- சங்கீதம் 119:29.
Author: Bro. Arputharaj Samuel