ஜான் ஸ்டாட் (1921-2011) ஒரு புகழ்பெற்ற பிரசங்கியார், ஆசிரியர், சிந்தனையாளர், இறையியலாளர் மற்றும் எழுத்தாளர். அவர் இங்கிலாந்தில் வாழ்ந்தார், ஆனால் உலகத்திற்கே ஆசீர்வாதமாக இருந்தார். அவரது வாழ்க்கை பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது மற்றும் இளைஞர்களை சிறந்த தலைவர்கள் ஆக்குவதற்காக தனது வாழ்க்கையை தாமாகவே முன்வந்து அர்ப்பணித்துள்ளார். அவர் எழுதிய புத்தகங்கள் வேதாகமத்தைக் குறித்த தெளிவையும், சரியான விளக்கங்களையும் மற்றும் நமது சூழலுக்கு ஏற்ற வகையிலும் பயனுள்ளதாக காணப்படுகிறது. தேவன் தன்னை ஊழியத்தில் அழைத்த விதத்தையும் தான் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற தேவ கட்டளையையும் குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பகிர்ந்துக் கொண்டார். தேவன் ஒரு குறிப்பிட்ட மூலோபாய (செயல்நெறி) நோக்கத்திற்காக ஒரு நபரை அழைக்கும் போது, அவர்களிடம் ஒரு மேலான பரிசுத்தத்தையும் அர்ப்பணிப்பையும் எதிர்பார்க்கிறார்.
1) சட்டப்படி சரியே:
"எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது" (1 கொரிந்தியர் 10:23) என்பதாக பவுல் நினைக்கிறார். ஜான் ஸ்டாட் ஒரு சாதாரண மனிதர் மற்றும் ஒரு சீஷர், அவர் திருமணம் செய்து கொள்ள எல்லா உரிமைகளையும் பெற்றவர். இருப்பினும், தேவன் அவர் திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை என்பதான ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தார்.
2) தார்மீக ரீதியாக சரியே:
திருமணமாகாத ஒரு இளைஞன் திருமணம் செய்வது என்பது தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் சரியானது தானே. ஆயினும்கூட, தேவன் அவரை அழைத்த நோக்கத்தை உணர்ந்தவராய் ஜான் ஸ்டாட் அதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது.
3) தேவ நோக்கத்தின்படி சரியில்லையே:
திருமணம் சட்டப்படி மற்றும் தார்மீக ரீதியாக அனைவருக்கும் சர்வசாதாரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஜான் ஸ்டாட்டிற்கு அவர் ஊழியத்திற்கான அழைப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதால் அது தேவனால் அனுமதிக்கப்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தேவனின் உன்னத நோக்கத்தின்படி வாழ்வதைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது நோக்கத்தை இழந்து சீஷராக இருக்க வேண்டும். ஒரு தடகள வீரர் அவர் விரும்பியதை சாப்பிடலாம், ஆனால் அது அவர் பந்தயத்திற்குள் கலந்து கொண்டு வெற்றி பெற முடியுமா என்றால் சந்தேகமே. அதுபோல, ஒரு சிப்பாய் உள்நாட்டு விவகாரங்களில் ஈடுபடலாம் அல்லது ஆடம்பரமான ஆடைகளை அணியலாம், ஆனால் அவர் அந்த வேலைக்கு எந்த நோக்கத்திற்காக சேர்க்கப்பட்டாரோ அதை செய்வது தானே உன்னதம்.
சில சமயங்களில், தேவன் நம்மை ஒரு பெரிய நோக்கத்திற்காக அழைக்கிறார் எனில், இதற்கு அதிக அளவு அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் தேவைப்படும் மற்றும் சட்டரீதியாக அல்லது தார்மீக ரீதியாக அனுமதிக்கப்பட்ட பல விஷயங்களை கூட (தியாகம்) கைவிட வேண்டும். ஏனென்றால், மனிதகுல வரலாற்றில் தேவனுக்கு பணி செய்ய அவருடைய கருவிகள் தேவை. அவரின் அழைப்பைக் கேட்டு தன்னை அர்ப்பணிக்க விரும்புவோர் மட்டுமே தேவனால் பயன்படுத்த முடியும். யோசேப்பு, தாவீது, தானியேல், எரேமியா, எலியா ஆகியோர் தேவனால் பயன்படுத்தப்பட தங்களின் அன்றாட வாழ்வை விட்டுவிட வேண்டியிருந்தது.
நான் தேவனுடைய நோக்கமறிந்து அதை என் வாழ்வில் கடைப்பிடிக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran