நாற்பது ஆண்டுகளாக மோசே ஆடுகளை மேய்த்து வந்தான். ஆடு கூட அவனுடையது அல்ல, அது அவனுடைய மாமனார் எத்திரோவின் மந்தை. பார்வோனின் மகளின் வளர்ப்பு மகனுக்கு எதுவும் சொந்தமில்லை. அவன் ஆடுகளை ஓரேபுக்கு கொண்டு வந்தான், அதுதான் சீனாய் என்று அழைக்கப்பட்டது. மோசே இஸ்ரவேலரை இந்த மலைக்கு அழைத்துச் செல்வான் (யாத்திராகமம் 3:1-3).
அற்புதமான காட்சி:
ஆடுகளை பராமரிக்கும் தனது வழக்கமான கடமையில் மோசே இருந்தான். இருப்பினும், அவன் ஒரு ஈர்க்கும் படியான காட்சியைக் கண்டான். முதலில், கர்த்தருடைய தூதனானவர் தோன்றியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, முட்செடி எரியும் ஆனால் வெந்து போகாது. அத்தகைய பாலைவனங்களில் முட்செடி நெருப்பால் எரிவது ஒரு பொதுவான விஷயம் தான், ஆனால் அது எரிந்து கருகாமல் போனதுதான் ஆச்சரியம்.
வெந்து போகவில்லை:
முட்செடி எரிந்து கொண்டிருந்தது, வெடிப்பு இல்லை, வெப்பத்தால் இலைகள் சுருண்டு போகவில்லை, கிளைகள் கருகவில்லை, புதர் சாம்பலாகி விழவும் இல்லை.
இஸ்ரவேலின் அடையாளம்:
சில வேதாகம அறிஞர்கள் எரியும் முட்செடி இஸ்ரவேலின் அடையாளமாக விளக்குகிறார்கள். ஆம், இஸ்ரவேலர்கள் துன்பத்தை அனுபவித்தாலும் அழிந்து போகவில்லை, ஏனெனில் தேவன் அவர்கள் நடுவில் இருந்தார்.
சபையின் அடையாளம்:
சில அறிஞர்கள் எரியும் முட்செடி சபையின் அடையாளம் என்று நினைக்கிறார்கள். ஆம், சபைகள் எவ்வளவு துன்புறுத்தப்பட்டாலும், வெறுக்கப்பட்டாலும், வேட்டையாடப்பட்டாலும், நொறுக்கப்பட்டாலும் சபை ஒருநாளும் அழிந்து போவதில்லை. கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபைக்கு எதிராக பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது (மத்தேயு 16:18).
சிலுவையின் உருவகம்:
முட்செடியை விவரிக்கப் பயன்படுத்தப்படும் எபிரேய வார்த்தையானது, 'ஒட்டுவது அல்லது குத்துவது,' முட்செடி அல்லது முட்புதர் என்று பொருள்படும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முட்களால் முடிசூட்டப்பட்டார், தேவனின் நியாயத்தீர்ப்பின் அக்கினியைத் தாங்கினார், ஆனால் அதில் வெந்து போகாமல், மீண்டும் உயிர்த்தெழுந்தார்.
பரிசுத்த தேவன்:
தேவன் மோசேக்கு அவருடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தினார். முதன்முறையாக, பரிசுத்தம் என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மோசே தேவனுடன் உரையாடியபோது, அவர் மோசேக்கு தன்னுடைய பல பண்புகளை வெளிப்படுத்தினார்; ஆம், தேவன் சிருஷ்டிகர், அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், வாக்குத்தத்தை நிறைவேற்றுபவர், இருக்கிறவராகவே இருக்கிறவர், இறையாண்மை தேவன், அருட்பணியாளர், நீதியுள்ள நியாயாதிபதி, சர்வ வல்லமையுள்ளவர், சர்வ ஞானி மற்றும் சர்வ வியாபி.
தனிப்பட்ட நாமம்:
தேவன் தன்னை 'நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்று வெளிப்படுத்தினார்.
இளவரசனிலிருந்து மேய்ப்பன்:
மோசே ஒரு இளவரசனிலிருந்து இஸ்ரவேல் தேசத்தின் மேய்ப்பனாகவும் ஊழியனாகவும் மாறினார்.
நான் மேய்ப்பனாகவும் ஊழியக்காரனாகவும் மாறிவிட்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்