காத்தின் ராஜாவாகிய ஆகிசு தாவீதையும் அவனது ஆட்களையும் சிக்லாகுக்கு அனுப்பினான். தாவீது தேவனின் கருவியாக இருப்பதற்குப் பதிலாக, ஒரு கூலிப்படையாக தன் தரத்தைத் தாழ்த்திக் கொண்டான். ஆப்பெக்கும் சிக்லாக்கும் இடையே உள்ள தூரத்தை கடக்க அவர்கள் ஒரு நாளைக்கு இருபத்தைந்து அல்லது முப்பது மைல்கள் அணிவகுத்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் சோர்வுடன் மூன்றாம் நாள் சிக்லாகுக்கு வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் வந்தடைவதற்குள் சிக்லாக்கு அமலேக்கியர்களால் கைப்பற்றப்பட்டது. அவனுடைய மனைவிகள், குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள், பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்து அக்கினியால் அந்த நகரத்தைச் சுட்டெரித்தனர்; ஆனால் ஒருவரையும் கொன்று போடவில்லை என்பது ஆச்சரியம் தான். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். அங்கிருந்த ஜனங்கள் தாவீது மீது மிகவும் கோபமடைந்தனர், தாவீதைக் கல்லெறிந்து கொல்வதைப் பற்றி தங்களுக்குள்ளே முணுமுணுத்தார்கள். அந்த நேரத்தில் தாவீதுக்கு தேவனைத் தவிர வேறு புகலிடம் இல்லை. ஆம், ஆண்டவருக்குள்ளாக தன்னை தானே திடப்படுத்திக் கொண்டான். அப்போது கர்த்தர் அவனுக்கு வாக்குத்தத்தைக் கொடுத்தார்; "அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்" (1 சாமுவேல் 30:8). தாவீது தன்னைக் கொல்ல நினைத்த தன் ஆட்களை நம்ப முடியுமா?
1) வாக்குத்தத்தில் விசுவாசம்:
தாவீது தனது ஆட்களை நம்ப முடியும், ஏனென்றால் அவனிடம் தேவ வாக்குத்தத்தம் உள்ளதே, அதை நம்ப முடியுமே.
2) மன்னிக்கும் விசுவாசம்:
தாங்கள் இழந்ததின் நிமித்தம் தான் கொலை நோக்கங்கள் கொண்டிருந்தனர் என்றும், கசப்பான வெறுப்பும் கொண்டிருந்தனர் என்பதை உணர்ந்தவனாய் தனது ஆட்களை தாவீது மன்னிக்க முடியும்.
3) மறக்கும் விசுவாசம்:
தாவீது தனது ஆட்களின் முட்டாள்தனமான, தேவையற்ற மற்றும் பாவச்செயலை மறப்பது என முடிவெடுத்தான், நேர்மறையானதைத் தேர்ந்தெடுத்தான்.
4) மீண்டும் நம்புவதற்கான விசுவாசம்:
தாவீது தேவன் மீது நம்பிக்கை கொண்டான், அவனுக்கான வாக்குத்தத்தங்கள் அவனுடைய ஆட்களை நம்புவதற்கு உதவியது. அவர்கள் விசுவாசமற்றவர்கள், அவர்கள் அவனுக்கு எதிராக மாறுவார்களா? தாவீது ஆகிசுக்கு எதிராகத் திரும்பலாம் என்று ஆகிசின் ஆட்கள் அஞ்சியது போல், தாவீதுக்கும் அதே பயம் இருக்குமா? (I சாமுவேல் 29:6-7). இந்தத் தடையை முறியடிக்க தாவீதுக்கு நம்பிக்கை இருந்தது.
5) பலவீனத்திலும் விசுவாசம்:
தாவீது 400 பேருடன் மட்டுமே பின்தொடர்ந்தான், ஏனெனில் அவனது வீரர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சோர்வடைந்தனர்.
6) வெற்றியடைய வைத்த விசுவாசம்:
அமலேக்கியனால் விட்டுச் செல்லப்பட்ட ஒரு எகிப்திய அடிமை, தாவீதை ஆற்றித் தேற்றி அவன் எதிரிகளுக்கு நேராக வழிநடத்தும்படியாய் தேவன் எகிப்தியன் மூலமாக தாவீதிற்கு இரக்கம் காட்டினார். தாவீது அனைத்தையும் மீட்டுக் கொண்டான்.
தாவீதைப் போல நான் தேவன் மீது விசுவாசம் வைத்து மற்றவர்களிடம் மன்னிப்பைக் காட்டுகிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran