கர்த்தராகிய இயேசு தொடர் முயற்சி அல்லது துடுக்குத்தனமான ஜெபம் பற்றி ஒரு உவமையைக் கற்பித்தார் (லூக்கா 11:5-8).
ஒரு சிறிய அறை:
பொதுவாக, முழு குடும்பமும் ஒரு அறை வீட்டில் வசித்து வந்தனர். இன்றும்கூட ஆசியாவின் பல கிராமப்புறப் பகுதிகளில் ஒரு அறை மட்டும் உள்ள குடும்பங்கள் இருக்கின்றன. சில நேரங்களில், ஒரே அறையில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை என மனிதர்களோடு விலங்குகளும் வசிப்பதுண்டு. நடுராத்திரியில் ஒரு மனிதன் எழுந்தால், அவனோடு சேர்ந்து மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட முழு குடும்பமும் எழுந்திருக்கும்.
விருந்தினர் வருகை:
நடு இரவில் விருந்தினராக ஒரு நண்பர் வருகிறார். அவருக்கு நன்கு விருந்தோம்பல் செய்ய அவ்வீட்டின் தலைவர் விரும்பினார், ஆனால் அவருக்கு வழங்கிட ரொட்டியோ அல்லது உணவோ இல்லை. அவர் தனது விருந்தினரை எப்படியாவது கௌரவிக்க விரும்புகிறார், அருகில் இருக்கும் மற்றொரு நண்பரிடம் உதவி கேட்க நினைக்கிறார்.
நட்பின் வேண்டுகோள்:
விருந்தினருக்காக, அந்த நபர் நடுராத்திரியில் தனது நண்பர் வீட்டுக் கதவை தட்டி தன் குரலைச் சற்று உயர்த்தி கூப்பிடுகிறார். ஒருவேளை அந்த நபர் எழ விரும்பவில்லை என்றாலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் அவரை எழுப்புவார்கள் அல்லவா.
வெட்கமற்ற கோரிக்கை:
தனது விருந்தினரின் பொருட்டு, அவர் அநாகரிகமாக நடந்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். பதில் வரும் வரை கேட்டுக்கொண்டே இருந்தார். ஆம், இதை வெட்கமின்றி கேட்பது எனலாம், தன் நண்பன் தவற மாட்டார் என்றும் நன்கு உதவுபவர் (விருந்தளிப்பவர்) என்றும் அவன் அறிந்திருந்தான்.
குறிப்பிட்ட கோரிக்கை:
அந்த நபருக்கு மூன்று ரொட்டிகள் வேண்டுமென்று ஒரு குறிப்பிட்ட கோரிக்கை இருந்தது. பல நேரங்களில், நமது ஜெபங்களும் நமக்குத் தெரிந்த மதிப்பீடுகள் அல்லது பட்ஜெட் அல்லது தெளிவற்றவை மட்டுமே.
கோரிக்கைக்கான பதில்:
அந்த அண்டை வீட்டுக்காரர் உறவின் அடிப்படையில் மட்டும் பதிலளிக்கவில்லை, ஆனால் ஒரு நெருக்கமான உறவை உறுதிப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான கோரிக்கையின் நிமித்தம் பதிலளித்தார். அந்த நபர் மூன்று ரொட்டிகள் மட்டுமல்ல, அவர் விரும்பிய அனைத்தையும் பெற்றார். ஒருவேளை மூன்றிற்கு மேல், அதோடு இணைத்து வெண்ணெய் மற்றும் ஜாம் அல்லது கறி சேர்த்து இருக்கலாம். அந்த நண்பர் பெருந்தன்மையுடன் இருந்தார். ஆம், நாமும் ஜெபங்களில் நமக்கு அத்தியாவசிய தேவைகளை தொடர்ந்து கேட்காமல் விடுகிறோம், ஆனாலும் நம் தேவன் நமக்கு தேவையானது இன்னதென்று அறிந்து அதை தருவதில் தாராள மனம் படைத்தவராக இருக்கிறார்.
மனிதனின் தொடர் முயற்சி:
நாம் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறாரா? தேவன் நம் ஜெபத்திற்கு பதிலளிக்க தொடர் முயற்சி (பிடிவாதம்) அவசியமா? மனிதனின் தொடர் தொல்லை தேவ விருப்பத்தையும் திட்டத்தையும் மாற்ற முடியாது. இருப்பினும், இது ஒரு நபரை விசுவாசம், நன்றியுணர்வுடன் சார்ந்திருத்தல் மற்றும் தேவனின் தாராள மனப்பான்மையை அனுபவிக்க ஒரு நபரை மாற்றுகிறது.
தேவனுடனான எனது உறவை நான் துடுக்குத்தனமான ஜெபங்களின் மூலம் கொண்டாடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்