யாக்கோபு மூலம் ராகேலுக்கு குழந்தைகள் பிறப்பதற்கு முன்பதாகவே லேயாளுக்கு குழந்தைகள் இருந்தது. அதனால் விரக்தியடைந்த ராகேல் யாக்கோபிடம்; "எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்" என்றாள் (ஆதியாகமம் 30:1). அதற்கு அவன்; "நான் தேவனோ?" என்றான் (ஆதியாகமம் 30:2). உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், யாக்கோபும் அதே அளவு விரக்தியோடு தான் இருந்தான். பொதுவாகவே குடும்பங்களில் வாழ்க்கைத் துணைவர்களிடையே இதுபோன்ற மோதல் அல்லது உரையாடல்கள் வருவதுண்டு. அனைத்து மனிதர்களுக்குமே சரீரம், சமூகம், உளவியல், உணர்வு, மனம், ஆவிக்குரிய வாழ்வு என எல்லாவற்றிலும் தேவை என்பது உண்டு. மனிதர்களாகிய அனைவருமே மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள். திருமணத்தில் வாழ்க்கைத் துணைவர்கள் சுமை தாங்குபவர்களாகவும், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல நேரங்களில் தோல்விகள் ஏற்படுகின்றன. ஆக இந்தத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவர், தேவைகளைச் சந்திக்கும் ஆதாரம் யார்? ஆம், தேவனை ஆதாரமாகப் பார்ப்பதற்குப் பதிலாக, வாழ்க்கைத் துணைவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்று தங்கள் துணையையே எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காதபோது விரக்தி, கோபம், கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகள் கூட தொடங்கும்.
லேயாளின் விஷயத்தில் பார்ப்போமேயானால், லேயாள் அவளது கணவனால் நேசிக்கப்படவில்லை, ஆனால் தேவன் அவளின் கர்ப்பத்தை ஆசீர்வதித்து அடுத்தடுத்து பிள்ளைகளை அளித்தார். அப்படி நான்காவதாக குமாரன் பிறந்தபோது, “இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” என்று அவனுக்கு யூதா என பெயரிட்டாள் (ஆதியாகமம் 29:31,35). யாக்கோபு அவளை நேசித்தாலும் நேசிக்காவிட்டாலும், தேவன் அவளை நேசித்ததாலும், ஆசீர்வதித்ததாலும், அவள் தொடர்ந்து கர்த்தரைத் துதிப்பாள் என்பது அவளுடைய கூற்று. அவள் யாக்கோபிற்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள், அதனால் அந்த உறவில் அவளுடைய நிலை மாறப் போவதில்லை. அவளுக்கு ஆறுதலையும் அதிக குழந்தைகளையும் கொடுத்த பரலோகத்தின் தேவனை நோக்கிப் பார்த்தாள்.
ஆம், நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே சந்திக்க முடியும். கணவனைக் கடவுளாகக் கருதி, அவர்களிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சமாரியப் பெண் தனது வெவ்வேறு துணைவர்களால் ஆறு முறை தன் தேவைகள் சந்திக்கப்படுமா என்று எண்ணினாள், ஆனால் அனைத்துமே தோல்வியில் முடிந்தது (யோவான் 4:18). வாழ்க்கைத் துணைவர்கள் எல்லாத் தேவைகளையும் வழங்கும் தெய்வங்கள் அல்ல என்பதை முதலில் நினைவில் வைப்போம்.
முன்பை விட விவாகரத்துகள் அதிகம் என்பதில் ஆச்சரியமில்லை. எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வது நமக்கும் மற்றவர்களுக்கும் சமாதானத்தை விளைவிக்கும். வாழ்க்கைத் துணையால் தேவைகள் நிறைவேறாதபோது தேவன் தம் கிருபையை வழங்குவார். வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமைய அவருடைய கிருபை வெளிப்படும்.
என் எதிர்பார்ப்பு தேவனிடம் இருக்கிறதா அல்லது மனிதர்களிடமா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்