ஒரு தேவ பக்தியுள்ள தம்பதிகள் கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள். தாராள மனப்பான்மையும் விருந்தோம்பல் பண்பும் அவர்களுடைய கிறிஸ்தவ இயல்பு. நல்லது செய்வது, மற்றவர்களுக்கு உதவி செய்வது, மற்றவர்கள் முன்னேற உதவுவது, ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்துவது எனப் போன்ற நற்காரியங்கள் அவர்களுக்கு முதன்மையாக இருந்தது. அப்போது ஒரு சமயம் ஒரு விதவை உதவி கேட்டு அவர்களிடம் வந்தாள். தான் ஒடுக்கப்பட்டவள், ஏழை, பிள்ளைகளால் கைவிடப்பட்டவள் என்றாள், தனக்கு ஒரு வருமானம் தேவை அதனால் தொழில் தொடங்க உதவி தேவை என்று பாசாங்கு செய்தாள். அதுமட்டுமல்ல என்ன மாதிரியான தொழிலை செய்ய வேண்டும் என்ற யோசனையும் அவளிடம் இருந்தது, மேலும் தொழில் தொடங்குவதற்கு கடன் உதவி பெற அத்தம்பதியர் ஜாமீன் கையெழுத்து போட்டு அவளுக்கு உதவினார்கள். இப்படி அவள் வங்கிக் கடனைப் பெற்ற பிறகு, அந்த தேவ பக்தியுள்ள தம்பதிகளை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டு காணாமல் போனாள்.
அழுக்கான கந்தை:
அந்தத் தம்பதிகள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு கதறினர், தேவன் அவர்களிடம் பேசினார். மனித கண்ணோட்டத்தில் அனைத்து நீதியான செயல்களும் அழுக்கான கந்தை என ஏசாயா தீர்க்கதரிசி எச்சரித்ததை நினைவூட்டினார். "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது" (ஏசாயா 64:6).
நற்செயல்கள்:
தேவ பக்தியுள்ள தம்பதிகள் அனைவருக்கும், சாத்தியமான எல்லா வழிகளிலும் நன்மை செய்ய விரும்பினர். எல்லா நல்ல காரியங்களையும் செய்ய சீஷர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் தான் (2 தீமோத்தேயு 3:17). ஏழை விதவைக்கு உதவுவதும் நல்லது.
விதவைகளை விசாரித்தல்:
இரண்டாவது காரணம் யாக்கோபின் உபதேசம். விதவைகளை விசாரிப்பது அல்லது அவர்களைக் கவனிப்பது உண்மையான பக்தி தான் (யாக்கோபு 1:27). எனவே, அவளுக்கு உதவுவது தேவ சித்தம் என்று அவர்கள் நினைத்தார்கள். கர்த்தராகிய இயேசு தான் உபதேசித்ததை கேட்போருக்கு நினைவூட்டிய காரியம்; "அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை" (லூக்கா 4:25-26). எலியா அந்த விதவையைக் காப்பாற்றி அவள் தேவைகளை சந்திக்க வேண்டும் என்பது தேவ சித்தமாக இருந்தது.
யோசுவாவும் தவறு செய்துவிட்டார்:
கிபியோனியர்கள் தொலைதூர தேசத்திலிருந்து வரும் சோர்வுற்ற பயணிகளாக தங்களைக் காட்டிக் கொண்டனர். பூசணம் பூத்த ரொட்டியையும், தேய்ந்து போன செருப்புகளையும் ஆதாரமாகக் காட்டினார்கள். யோசுவா அவர்களை நம்பி, தேவ சித்தம் அறியாமல் சமாதான ஒப்பந்தம் செய்தார் (யோசுவா 9). தேவனால் நியாயந்தீர்க்கப்பட வேண்டியவர்கள் தண்டனையிலிருந்து தப்பினர், ஏனெனில் யோசுவா தனது சொந்த புத்திசாலித்தனத்தை நம்பியிருந்தார்.
பகுத்தறிதல்:
தேவ ஜனங்கள் சாத்தானின் கண்ணிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் தவறான பெருமையைக் கொடுத்து, நல்லதைச் செய்யத் தூண்டலாம், அப்படி நமக்கு தோன்றும் நீதி என்பது அழுக்கான துணிக்கு சமம், அது தேவ சித்தம், திட்டம் மற்றும் நோக்கத்தின்படி இருக்காது. மனிதக் கண்ணோட்டத்தில், அது நல்லதாகவும், ஒழுக்கமாகவும், சட்டப்பூர்வமாகவும் இருக்கும்; இருப்பினும், தேவனின் பார்வையில், அவை சரியானவை அல்ல.
தேவனுடைய நீதியான சித்தத்தைச் செய்ய நான் எப்பொழுதும் பகுத்தறிதலோடு இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்