தாவீது ஒரு சிறந்த போர்வீரன்; அவன் முதலில் கோலியாத்தை ஜெயித்தான், அந்த வெற்றிக்குப் பின் பல வெற்றிகளைக் கண்டான். அவன் மான் போல் ஓடுகிறான், வெண்கல வில்லை உடைக்கிறான், எதிரிகள் அவனுக்கு முன்பாக முடங்குகிறார்கள், சத்துருக்கள் அவனுக்குக் கீழ் அடங்குகிறார்கள் (சங்கீதம் 18:33,34,39,47). தாவீது தேவனைச் சார்ந்து இருந்தான், அவருக்கு எல்லாப் புகழும் கனத்தையும் கொடுத்தான். "உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்" (சங்கீதம் 18:29) என எழுதுகிறான்.
1) பயமுறுத்தும் எண்கள்:
தாவீதைப் பகைக்கிறவர்கள் அவன் தலைமயிரிலும் அதிகமாயிருந்தார்கள் (சங்கீதம் 69:4). " நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்" (நீதிமொழிகள் 28:1). "குதிரை கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும்" (யோபு 39:22). ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பயமுறுத்தும் எண்ணற்ற எதிரிகளை எதிர்கொள்வார்கள் ஆனால் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்.
2) பயமுறுத்தும் ஆயுதங்கள்:
தாவீதின் எதிரிகள் கோலியாத்தைப் போன்று மிரட்டும் அதிநவீன ஆயுதங்களை வைத்திருந்தனர். சாத்தான் தேவ ஜனங்களை அக்கினி அஸ்திரங்கள் மற்றும் பறக்கும் அம்புகளால் தாக்குகிறான் (எபேசியர் 6:16; சங்கீதம் 91:5).
3) வேகம் மற்றும் திறமை:
எதிரிகள் எண்ணிக்கையில் ஏராளமாக உள்ளனர் மற்றும் அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் மற்றும் கண்டிப்பானவர்கள்; நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள்.
4) உயரமான சுவர்கள்:
அரணான நகரங்களில் பெரிய சுவர்கள் இருந்தன: தாவீதின் காலத்தில் 20 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரம், 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அகலம். மதில் மேல் இருந்து குதிப்பது என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட செயலாகும், அது தேவ வல்லமையாலும் அவர் கிருபையாலும் மட்டுமே சாத்தியமாகும். பரிசுத்தவான்களுக்கு எதுவுமே பெரிய தடை இல்லை.
5) மதில் வீரர்கள்:
காவற்கோபுரங்கள் மதில் மேல் இருந்தன, அங்கு வீரர்கள் இரவும் பகலும் காவலில் இருந்தனர். அவர்களின் அம்புகள் கொடியதாக இருக்கலாம். சவுலின் படைவீரர்களுக்குத் தூக்கத்தைக் கொடுத்தது போல் தேவன் காவல் வீரர்களையும் தூங்க வைக்க முடியும் (1 சாமுவேல் 26:7).
6) அகழிகள்:
அத்தகைய கோட்டைகளைச் சுற்றி, முதலைகளுடன் அகழிகள் இருக்கலாம். தாவீது நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் என எதிரிகளின் மதில்களைக் கடக்க முடியும்.
7) மனப் போர்கள்:
சந்தேகம், பற்றாக்குறை, தேவனால் கைவிடப்பட்ட உணர்வு எனப் போன்றவற்றை சாத்தான் நிச்சயமாக விதைப்பான். தாவீது தேவனின் நாமத்தை அறிந்திருந்தான்; அவரது உறுதியான அன்பு மற்றும் அவரை நம்புவர்களை அவர் எப்படியும் விடுவிப்பார் என்பதையும் அறிந்திருந்தான் (சங்கீதம் 91:14-15).
அனைத்து விசுவாசிகளும் சாத்தான், அவனது பேய் சக்திகள் மற்றும் அநீதியின் கருவிகளாக இருக்கும் மக்களிடமிருந்து இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் (ரோமர் 6:13).
நான் தேவனால் மகிழ்ச்சியிலும் நம்பிக்கையிலும் துள்ளுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்