ஆபேலின் மாதிரி

காயீனுக்குப் பிறகு உலகில் பிறந்த இரண்டாவது மகன் ஆபேல். அவனது வாழ்க்கை என்பது பெற்றோருக்கு கடமைப்பட்ட மகனாக இருந்திருக்கும்.  ஆதாமும் ஏவாளும் ஒரு நல்ல பெற்றோராக இருக்க கற்க வேண்டியிருந்தது, அதே சமயம் பெற்றோருக்கு மரியாதை கொடுப்பதும் கீழ்ப்படிவதும் குழந்தைகளின் கடமையாக இருந்தது, ஆனால் இப்படி தான் வாழ வேண்டும் என்பதற்கான நியமனங்கள் எழுதப்படவில்லை. ஆனால் அவர்களின் இருதயங்களில் உணர்த்துதல் இருந்தது. காயீனின் வழிகள் விரும்பும்படி இல்லாத போதும் ஆபேல் தனது சகோதரனை நேசித்திருப்பான். காயீன் தன்னை கொலை செய்திடுவான் என்று தெரியாமல் ஆசையாக அவனை நம்பி பின்சென்றான் ஆபேல். அவன் ஒரு மேய்ப்பனாக இருந்தான், அநேகமாக அவனுக்கான பணியில் அவன் நேர்த்தியானவனாக இருந்தான். காயீன் ஒரு விவசாயியாக (தோட்ட வேலை செய்பவனாக) தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​ஆபேல் ஒரு மேய்ப்பனாக (விலங்குகளை பராமரிப்பவனாக) தேர்வு செய்தான்.

இரண்டு வகையான மதம்:

உண்மையில், காயீனும் ஆபேலும் இரண்டு வகையான மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.  காயீன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மதத்தை அதாவது;  அவர்களின் சொந்த செயல்கள் அல்லது பணிகளைப் பொறுத்து, தேவன் தங்களுக்கு பதில் செய்ய வேண்டும் என்று கோருவது; மேலும் அவர்களுக்கென்று சொந்த சடங்குகள் மற்றும் பலிகளை உருவாக்கிக் கொள்வது எனப் போன்றதைப்  பிரதிநிதித்துவப்படுத்தினான். இதற்கு நேர்மாறாக, ஆபேல் மனிதர்களிடம் தேவன் கோரும் மற்றும் எதிர்பார்க்கும் ஆவிக்குரிய ஜீவியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினான்.

1) ஆராதனையில் மாதிரி:

மனிதர்கள் வாழவும் தேவனை மகிமைப்படுத்தவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் (ஏசாயா 43:7). ஆபேல் தேவனோடு ஒரு உறவைக் கொண்டிருக்கவும், அவரை ஆராதிப்பதையும் தேர்ந்தெடுத்தான்.  ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிகரோடு இருந்த ஆவிக்குரிய அனுபவங்களையும், ஏதேன் தோட்டத்தில் இருந்த வாழ்க்கையைப் பற்றியும் பிள்ளைகளோடு பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும். அதையெல்லாம் கேட்ட ஆபேல் தனது பெற்றோருக்கு கிடைத்த மற்றும் இழந்த அந்த வாழ்க்கைக்கு ஏங்கியிருக்க வேண்டும்.

2) தியாகப்பலியின் மாதிரி:

ஆட்டுக்குட்டி கர்த்தருக்குப் பொருத்தமான பலியாக இருக்கும் என்பதை ஆபேல் புரிந்துகொண்டான்.  மனிதகுலத்திற்காக எதிர்காலத்தில் மரிக்கபோகும் தேவ ஆட்டுக்குட்டியை எதிர்பார்த்து, விசுவாசத்தில் அவன் செய்த பலிக்காக அவன் பாராட்டப்படுகிறான். மேலும் அவனுடைய தியாகப்பலி அவருக்குப் பிரியமாக இருந்ததால் தேவன் அதை ஏற்றுக்கொண்டார் (எபிரெயர் 11:4).

3) நீதியில் மாதிரி:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆபேலைப் பாராட்டினார். அவன் நீதிமான் என்று அழைக்கப்படுகிறான்.   வேதத்தில், நீதிமான் என்பது தேவ பார்வையில் சரியானதைச் செய்பவன்.  ஆபேலின் வாழ்க்கை, தேவனோடும் மற்றவர்களோடும் அவனுக்கு இருக்கும் உறவு தேவனுக்கு பிரியமானதாக  காணப்பட்டது (மத்தேயு 23:35).  காயீன் ஆபேலை நீதிமான் என்பதற்காகக் கொலையும் செய்தான் (I யோவான் 3:12).

ஆராதனை, தியாகப்பலி மற்றும் நீதியில் நான் ஆபேலைப் பின்பற்றுகிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download