மக்கள் ஒரு பார்வை பார்ப்பதன் மூலம் கூட விஷயத்தை வெளிப்படுத்த முடியும். பெற்றோரின் கண்டிப்பான பார்வை ஒரு குழந்தையை சரியாய் நடக்க வைக்கும். ஆம், ஒரு பார்வை போதும். கர்த்தர் பேதுருவைப் பார்த்தார், அது அவனுடைய வாழ்க்கையை மாற்றியது. "அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்" (லூக்கா 22:61-62). கர்த்தர் பேதுருவிடமிருந்து அனுதாபத்தைத் தேடுகிறாரா? இல்லை. பேதுரு வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர தேவனின் அந்த பார்வை போதுமானதாக இருந்தது.
கோபமான பார்வையல்ல:
தேவனின் கோபமான கண்டனத்திற்கு பேதுரு தகுதியானவர் என்றாலும், கர்த்தர் பேதுரு மீது கோபப்படவில்லை. சாத்தானால் பேதுரு சோதிக்கப்படுவான் என்று முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டான், அதனால் அவன் கவனமாக இருக்க வேண்டும்; ஆனால் பேதுரு தன்னைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருந்தான் (லூக்கா 22:31-34).
ஏளனமான தோற்றம் அல்ல:
"நீங்கள் தோல்வியடைவீர்கள் என்று நான் சொல்லவில்லையா?" என கர்த்தர் பேதுருவை கேலி செய்யவில்லை. ஆம், பேதுரு எச்சரிக்கைக்கு செவிசாய்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தவறிவிட்டான்.
குற்றப்படுத்தும் பார்வையல்ல:
பேதுருவை நரகத்திற்கு அனுப்ப கர்த்தர் அவனிடம் திரும்பவில்லை, அதற்காக பார்க்கைவில்லை. மனிதர்களுக்கு முன்பாக அவர் நாமத்தை மறுப்பவர்கள், பரிசுத்த பிதாவின் முன்னிலையில் கர்த்தர் அவர்களுடைய நாமத்தை மறுதலிப்பார். ஆனாலும், கர்த்தர் பேதுருவுக்கு மனந்திரும்புவதற்கான வாய்ப்பைக் கொடுக்க விரும்பினார் (மத்தேயு 10:33).
அன்பின் பார்வை:
பேதுருவை மன்னித்து அரவணைக்க ஆவலாக இருந்த அன்பை ஆண்டவர் காட்டினார். ஆம், கலிலேயா கடற்கரையில் பேதுருவுக்கும் உடனிருந்து பின் வாங்கியவர்களுக்கும் தேவன் காலை உணவை தயார் செய்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது (யோவான் 21:12-19).
கரிசனையான பார்வை:
கர்த்தர் பேதுருவைப் பற்றி அக்கறையுடன் இருந்தார். நிச்சயமாக, அவன் குற்ற உணர்ச்சியுடன் இருப்பான்; அதனால் பேதுரு தற்கொலை செய்துகொள்வது போன்ற எந்த தவறான அல்லது முட்டாள்தனமான செயலையும் செய்யக்கூடாது என்று கரிசனை கொண்டார் . கர்த்தர் மன்னிக்கவும், இன்னும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கவும், அழைப்பு மற்றும் நோக்கத்திற்காக தன்னை மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை பேதுரு புரிந்து கொள்ள வேண்டும் என்பதான அக்கறை அது.
இரக்கமான பார்வை:
ஆண்டவர் அனுதாபத்துடனும், இரக்கத்துடனும், கருணையுடனும் பார்த்தார். அந்த நேரத்தில் பேதுரு அனுபவித்த வேதனை அவருக்குத் தெரியும். விரோதமான சூழ்நிலையில், வெறுப்பு நிறைந்த மக்கள் மத்தியில், அவர் கொல்லப்பட்ட இடத்தில், பேதுரு மறுதலித்தான். இது சாத்தானின் இரக்கமற்ற மற்றும் கடுமையான தாக்குதல். ஆனாலும் அவரது பார்வையில் புரிந்துக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான்; "என்ன வீழ்ந்துவிட்டீர்களா? அப்படியே இருக்க வேண்டியதில்லை; முடியும் எழுந்திருங்கள்” என்பதே.
மீட்கும் பார்வை:
"நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்" (நீதிமொழிகள் 24:16). ஆம், அவர்கள் நீதிமான்கள் தான்; அவர்கள் விழுவதால் அல்ல, அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதால்.
நான் விழுந்தாலும் எழுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்