விசுவாசிகள் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆம், அப்படி பிரித்தெடுக்கப்பட்டவர்கள் காலேபைப் போலவே வேறே ஆவி உடையவர்களாக இருக்கிறார்கள். காலேப் தேவனை உத்தமமாய் பின்பற்றியவன் என வேதாகமத்தில் ஐந்து முறை திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது (எண்ணாகமம் 32:12, உபாகமம் 1:36, யோசுவா 14:8-9, 14). காலேப் வேறொரு ஆவியை உடையவனாயிருந்தான். இது வேறுபட்ட அணுகுமுறை, விருப்பம், உலகக் கண்ணோட்டம் ஆகியவற்றைக் குறிக்கும் (எண்ணாகமம் 14:24,30)
1) விசுவாச அடிப்படையிலான தரிசனம்:
காலேப் தனது நாற்பது ஆண்டுகளை எகிப்தில் அடிமையாகக் கழித்தவன். அவன் நல்ல உடல் திறன் கொண்டவன், கடுமையான அடிமைத்தனத்தையும், அதிக வேலைப்பளுவையும் தாங்க கூடிய மனிதனாக இருந்தான். மேலும் தேவன் தம் மக்களுக்கு செய்த அற்புதங்களை அவன் கண்டான். தேவன் மீதான விசுவாசம் அவனுக்கு எதிர்காலத்திற்கான புதிய தரிசனத்தை அளித்தது.
2) வாக்குத்தத்தின் மீதான விசுவாசம்:
எகிப்தில் அடிமைப்பட்டிருந்த தன் ஜனங்களை மீட்பதில் தேவன் கொண்டிருந்த அன்பையும் உண்மைத்தன்மையையும் காலேப் உணர்ந்ததால் தனக்கு அவர் அளித்த வாக்கையும் நிறைவேற்ற வல்லவர் என்பதை நம்ப முடிந்தது. வாக்களிக்கப்பட்ட தேசத்தை வழங்குவதற்கு தேவன் உண்மையுள்ளவராகவும் கிருபையுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை காலேப் விசுவாசித்தான். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மனித திறனை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, அது தேவனின் தாராள மனப்பான்மையைக் காண்பிக்கின்றது.
3) ஜெயம் கொள்ளும் ஆவி:
ஒரு உளவாளியாக, அவன் வெற்றிக்கான ஆவியைக் கொண்டிருந்தான். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று அதை கண்டு, அதனை சுதந்தரிக்க முடியும் என்று வாதிட்டதன் மூலம், காலேப் ஆபத்துக்களை சந்திக்கத் தயாராக இருந்தான், தடைகளை கண்டும் அஞ்சவில்லை, மரண பயமும் அவனுக்கு இல்லை.
4) சாத்தியக்கூறு அணுகுமுறை:
இஸ்ரவேல் தேசத்தை சொந்தமாக்க முடியும் என்று காலேப் வெளிப்படுத்தினான். ஆம், வேவு பார்க்க சென்ற உளவாளிகளில் பத்து பேர் அவநம்பிக்கை மனப்பான்மையுடனும் மற்றும் தோல்வி மனப்பான்மையுடனும் ஒரு எதிர்மறை சிந்தையுடன் அணுகினார்கள்; ஆனால் அதே சமயம் காலேப் நம்பிக்கையும், சுதந்தரிக்கும் வாய்ப்பும் மற்றும் வெற்றி பெறும் சிந்தையின் அணுகுமுறையும் கொண்டவனாகக் காணப்பட்டான்.
5) விசுவாசத்தைக் காத்துக் கொள்ளல்:
காலேப் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் தரித்திருந்தான். உடனிருந்த பத்துபேர் தேசத்தை அளக்கச் சென்று மடிந்ததையும், அவனது உறவினர்கள் அவிசுவாசத்தாலும் கலகம் செய்ததாலும் மரித்து போனதையும் காலேப் கண்டான். இருப்பினும் காலேப் தேவன் மேல்கொண்ட விசுவாசத்தைக் காத்துக் கொண்டான்.
6) சத்தியத்திற்காக நிற்றல்:
யோசுவாவுடன் இணைந்து காலேப் சத்தியத்திற்காக நின்றான். அவன் போலியான அறிக்கைகளை உருவாக்கவும் இல்லை; அதே சமயம் அவர்களின் ஆய்வின் போது கலந்து பேசியவர்களின் அவதானிப்புகளின் விளக்கத்தை பொய்யாக்கவும் இல்லை.
7) மரண பயம் இல்லை:
இஸ்ரவேல் புத்திரர்கள் காலேப் மற்றும் யோசுவா மீது கல்லெறிய விரும்பினர், ஆனாலும் இருவரும் தங்கள் அறிக்கையை மாற்றவில்லை (எண்ணாகமம் 14:10). இரண்டு உளவாளிகள், அநேகமாக மோசே மற்றும் ஒரு சில தலைவர்கள், பத்து உளவாளிகளால் தூண்டிவிடப்பட்ட முழு சபைக்கும் எதிராக உறுதியாக நின்றார்கள்.
காலேபைப் போல எனக்கும் வித்தியாசமான (வேறே) ஆவி இருக்கிறதா?
Author: Rev. Dr. J. N. Manokara