வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகளாக இஸ்ரவேலர்களுக்கு தேவன் மன்னாவை வழங்கினார். வனாந்தரத்தில் அலைந்து திரிந்த இஸ்ரவேலர்களின் சராசரி எண்ணிக்கை 30 லட்சம் என நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 4,500 டன் மன்னா தேவைப்பட்டது. தேவன் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளாக சுமார் 65,700,000 டன் மன்னாவை வழங்கினார்.
தேவனின் முன்னேற்பாடு:
தேவன் அவர்களுக்கு நாற்பது வருடங்கள் சமச்சீரான உணவாக மன்னாவைக் கொடுத்தார். கூடுதலாக, தேவன் அவர்களின் கூடாரங்களுக்கு வந்த காடைகளை வழங்குகிறார். பாறையிலிருந்து வழிந்தோடும் நீர் அவர்களை வளர்த்தது. நாற்பது வருட பயணத்திற்கு, அதுவும் வனாந்தரத்தில், வலிமையையும் சகிப்புத்தன்மையையும் தரும் சரியான ஊட்டச்சத்து தேவைப்பட்டது.
வானத்தின் கதவுகள்:
மன்னா தெய்வீக ஏற்பாடாக இருந்தது (சங்கீதம் 78:24-25). இஸ்ரவேலர்களுக்கு வழங்க தேவன் பரலோகத்தின் கதவுகளைத் திறந்தார். இது எந்த மனித மூலத்திலிருந்தோ அல்லது கேட்டரிங் நிறுவனத்திலிருந்தோ (சமையல் ஒப்பந்ததாரர்கள்) அல்ல.
மன்னா மழை:
வடக்காற்று வனாந்தரத்தின் மேற்பரப்பை சுத்தம் செய்ததாகவும், பின்னர் மன்னா மழை பெய்ததாகவும் யூத வல்லுனர்கள் கூறுகின்றனர். இது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. மண் அல்லது தூசியால் மன்னா மாசுபடவில்லை.
ஏராளமாய் தாராளமாய்:
இது மிகுதியாக இருந்தது மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஓய்வுநாளில் சாப்பிடுவதற்கு இரட்டிப்பாக இருந்தது. இஸ்ரவேலர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கான உணவிற்கு எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களால் அதை பதுக்கி வைக்க முடியாது, புழுக்கள் அதை உண்ணும். அன்றன்று உள்ள நாளுக்கான ஆகாரம் அன்றன்று போதுமானது. ஆண்டவரின் ஜெபமான; "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" (மத்தேயு 6:11) என்பது வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் அனுபவத்தைக் குறிக்கிறது.
விளக்கம்:
அது இரவில் விழுந்தது, பெய்திருந்த பனி காலையில் நீங்கினபின், வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது (யாத்திராகமம் 16:31; எண்ண்கமம்:11:7). சுவையை நல்ல உயர்தர கிரீம் அல்லது எண்ணெய் கேக் அல்லது வெண்ணெய் கேக் என்று விவரிக்கலாம்.
ஜீவ அப்பம்:
கர்த்தராகிய இயேசு வனாந்தரத்தில் 5000 பேருக்கும் மேலாக உணவளித்து மன்னாவின் அற்புதத்தை மீண்டும் செய்தார். கர்த்தராகிய இயேசு தம்மை "வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்" (யோவான் 6:32, 33, 35, 48, 51).
மறைவான மன்னா:
"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது" (வெளிப்படுத்தின விசேஷம் 2:17).
நான் அன்றன்றைக்கான உணவை தேவன் அருளுகிறார் என்ற விசுவாசத்தோடு பெறுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்