யோவான் திருமுழுக்குநர் தம் சீடர் இருவருடன் நின்று கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் இயேசு நடந்து வந்தார். இயேசுவைப் பார்த்த யோவான், “*இதோ, தெய்வ ஆட்டுக்குட்டி'' என்றார். உடனே சீடர் இருவரும் இயேசுவிற்குப் பின் சென்றனர்.
இயேசு, “உங்களுக்கு என்ன வேண்டும்? என கேட்க சீடர்கள், “ரபீ நீர் எங்கு தங்கியிருக்கிறீர்?' என வினவினர்.
“வந்து பாருங்கள்!” அமைதியான பதில், அன்றையதினம் அவரோடு தங்கிய சீடருள் ஒருவர் பெயர் அந்திரேயா. அவர்தம் சகோதரன் சீமோனை கண்டு, “மேசியாவைக் கண்டோம்” என்று கூற சீமோனும் இயேசுவை சந்திக்க வந்தார். இயேசு சீமோனை உற்றுப் பார்த்து, “யோவானுடைய மகனாகிய சீமோனே நீ கேபா எனப்படுவாய்'' என்றார். (பேதுரு என்பது கிரேக்கச் சொல், “கேபா” என்பது எபிரேயச் சொல் இரண்டிற்கும் பொருள் கற்பாறை எனப்படும்)
மறுநாள் கலிலேயா நாட்டிற்குத் திரும்ப நினைத்தார். பிலிப்பு என்பவரையும் தம்முடன் அழைத்துக் கொண்டார். பிலிப்பு, நாத்தான்வேல் என்பவரைக் கண்டு பேசினார்.
"மோசேயின் நீதிச்சட்டத்திலும், இறைவாக்குரைப் போராலும் கூறப்பட்டவரைக் கண்டோம். அவர்தான் நாசரேத்தூரார் இயேசு!”
"நாசரேத்திலிருந்து நன்மை வரக் கூடுமா?” நாத்தான்லேவின் வினாவில் ஆச்சரியமும் இருந்தது.
"நீரே வந்து பாரும்:”
நாத்தான் வேல் பிலிப்புவுடன் சேர்ந்து இயேசுவைக் காண வந்தார். நாத்தானைக் கண்ட இயேசு, “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார்.
நாத்தான் இயேசுவை நோக்கி, 'என்னை உமக்கு எப்படித் தெரியும்? என வினவ
பிலிப்பு உன்னை அழைக்கும் முன் நீ அத்தி மரத்தின் கீழ் இருக்கும்போது உன்னைப் பார்த்தேன்'”
ரபி! நீரே மேசியா!” வியப்பினால் கூவினார். நாத்தான்வேல் கலிலேயோ நாட்டிற்குத் திரும்பி வந்த அனைத்து மக்களையும் கடவுளின் பக்கம் திருப்பினார். தொழுகைக் கூடங்களில் (சிற்றாலயங்கள்) எல்லாம் போதனை செய்து வந்தார்.
கலிலேயா நாட்டிலே கானா என்னும் ஊரில் ஒரு திருமணம். இயேசுவும், அவருடைய சீடர்களும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இயேசுவின் தாயும் அங்கிருந்தாள். திருமண விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டார் முகத்திலே கலக்கம்! திராட்க்ஷை ரசம் தீர்ந்து போயிற்று. நடந்ததை அறிந்த மணமகன் தடுமாறினான். "தன் திருமணத்தில் இப்படியொரு மாபெரும் குறையா?” அவன் உள்ளம் கலங்கியது.
நம் நாட்டில் பாயாசம் போன்று திராட்ஷை ரசம் அந்நாட்டு விருந்தில் முக்கியமான ஒன்று. திராட்க்ஷை ரசம் தீர்ந்து போனது என்றால் அதைப் போல கெளரவக் குறைச்சலான காரியம் வேறில்லை. எனவே திருமண வீட்டார் திகைத்தனர். மரியாளை அணுகினர். விவரம் அறிந்த மரியாள் தன் மகனை நெருங்கினார்.
திருமண விருந்திற்கு திராட்க்ஷை ரசம் தீர்ந்து போயிற்று!” என்றவர் தன் மகனை நோக்கிப் பார்த்தார். தாயின் கருணைக் கண்களை கருணாகரனாம் இயேசுவின் கண்கள் நோக்க, “அம்மா! என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
அன்னையோ! பணியாளரிடம் இயேசு உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள் என்றாள்.
பணியாளர்கள் பக்தியுடன் இயேசுவின் முன் நிற்க, அங்கிருந்த 6 பெரிய கற்சாடிகளைக் காட்டி, “இவற்றில் நீர் நிரப்புங்கள்” என்றார். பணியாளர் அவ்வண்ணமே செய்தனர். "இதை மொண்டு பந்தி விசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள்'” என்றார்.
இறையோசை என ஒலித்தகுரல் பணியாளர்களை அப்படியே கீழ்ப்படிய வைத்தது. பந்தி விசாரிப்புக்காரன் பளபளப்பாக நல்ல நிறத்துடன் தோன்றும் திராட்க்ஷை ரசத்தை ருசி பார்த்தான். அற்புதமான ருசி! ௮வனால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. மணவாளனை அழைத்தான். “எல்லோரும் உயர்ந்த ரசத்தை முதலில் பரிமாறுவார்கள். கடைசியில் தறம் குறைந்த ரசமே கிடைக்கும். நீரோ உயர்ந்த ருசி மிகுந்த ரசத்தை இதுவரை வைத்திருந்தீரே! எனப் புகழ்ந்தான்.
மணமகன் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தியது. நடந்ததை அறிந்த அவன் உள்ளம் இறைமகன் இயேசுவுக்கு எண்ணிலடங்கா நன்றிதனை சமர்ப்பித்தது.
யூதர்களின் பஸ்கா பண்டிகை வந்தது. எனவே இயேசு சீடர்களுடன் எருசலேமுக்குச் சென்றார்.
எருசலேம் தேவாலயம் - கி, மு. 1000ல் சாலமொன் அரசனால் விலையுயர்ந்த கேதுரு மரம், பொன் இவற்றால் கட்டப்பட்டது. இஸ்ரவேலர் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபோது கி. மு. 587 ல் அழிக்கப்பட்டது. கி. மு. 516 ல் செருபாபேல் தலைமையின் கீழ் இரண்டாம் திருக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. கி. மு. 167ல் சீரியர்களால் இக்கோவில் தீட்டுப்படுத்தப்பட்டு இதன் ஒரு பகுதி அழிக்கப்பட்டது. பின் கி. மு, 98 மகா ஏரோது யூதர்களின் அபிமானத்தை சம்பாதிப்பதற்காக பொன்னினாலும், பளிங்குனாலும் ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டினான். இதைக் கட்டிமுடிக்க 46 ஆண்டுகள் ஆயின. இந்த மூன்றாம் தேவாலய வளாகம் கடைகள் நிரம்பியதாக இருந்தது. பலிப் பொருளான ஆடு, மாடு, புறா அனைத்தும் அநியாய விலைக்கு விற்கப்பட்டன. பலிப் பொருட்கள் அனைத்தும் அங்குதான் வாங்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. வேறு எங்காவது வாங்கிவரும் விலங்குகளுக்கு ஆசாரியர்களால் குறை கூறப்பட்டு, மலிவான விலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதிக விலைக்கு ஆலயக் கடைகளில் வேறு விலங்குகள் வாங்கிவரக் கட்டாயப்படுத்தினர்.
ஆலயத்திற்குள் கடைவைத்திருப்பவர்கள் ஆசாரியர்களுக்கு உறவினர்களாக இருந்தபடியால் யாரும் எதிர் பேச முடியவில்லை. ரோம நாணயத்தை ஆலயத்தில் காணிக்கைபோட முடியாது. ஆலயத்திற்கென தனி நாணயம் இருந்தது. காசுக் கடைக்காரர்களிடம் ரோம நாணயத்தைக் கொடுத்து, ஆலய நாணயம் வாங்கும் போது காசுக் கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடித்தார்கள்.
ஆலயத்திற்கு வருகை தந்த இயேசுவால் இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கயிற்றினால் ஒரு சாட்டையைச் செய்து வியாபாரிகள் அனைவரையும் திருக்கோவிலுக்கு வெளியே துரத்தினார். காசுக்காரரின் பலகைகளைக் கவிழ்த்தினார். புறா விற்பவர்களைப் பார்த்து "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள். என் தந்தையாரின் வீட்டை வாணிகஞ் செய்யும் நிலையமாக்க வேண்டாம்”! என எச்சரித்தார். விரட்டப்பட்டவர்கள் ஆத்திரம், அவமானம், கோபம். அடைந்தாலும் இயேசுவை எதிர்க்க முடியவில்லை. இயேசுவும் அவர்களை விரட்டினாலும் ஒருவரையும் அடிக்கவில்லை. அடுத்து அவர் கண்களின் பார்வை, சொல்லில் இருந்த கம்பீரமும், ஆணையும் அனைவரையும் திகைக்க வைத்தது.
நடந்ததை அறிந்த ஆசாரியர் கூட்டம் அடக்க வொண்ணா ஆத்திரம்கொண்டது. அன்றே இயேசுவை தம் ஜென்ம விரோதியாகக் கருத ஆரம்பித்தனர்.
ஒருநாள் இரவு நிக்கொதேமு என்பவர் இயேசுவைத் தேடி வந்தார். இயேசுவுடன் அளாவளாவி மகிழ்ந்தார்.
ரபி! நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பது எங்களுக்குத் தெரியும் கடவுள் தன்னோடு இருந்தால் அன்றி ஒருவனாலும் நீர் செய்யும் பெரிய செயல்களைச் செய்ய முடியாது!”
ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காண முடியாது! இயேசுவின் சொற்கள் நிக்கொதேமுவைத் திகைக்க வைத்தன.
வயதான பின் ஒருவன் தன் தாயின் வயிற்றில் இரண்டாம் முறை நுழைந்து பிறக்க முடியுமா? என்றான்.
மறுபடியும் பிறத்தல் என்றால் நமது பாவங்களை கடவுளிடம் அறிக்கையிட்டு பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுதல். அதன்பின் கடவுளுக்கு உகந்தபடி வாழ்தல் - இருவரது உரையாடலும் நீண்டு கொண்டே சென்றது ஒருவாறு மனத்தெளிவு பெற்று இயேசுவிடமிருந்து விடை பெற்று சென்றார் நிக்கொதேமு.
இதன் தொடர்ச்சி சர்வேசுவரனும், சமாரியப் பெண்ணும்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.