பரலோக பாடகர் குழு
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு பாடல்களும் மற்றும் இசையும் முக்கியம். வேதாகமத்தில் பாடலுக்கான மிகப்பெரிய புத்தகம் சங்கீதம் எனலாம். மேலும் ‘மோசேயின் பாடல்’, 'தெபோராவின் பாடல்’, 'சாலொமோனின் பாடல்,’ ‘ஆட்டுக்குட்டியினாவரின் பாடல்' என்பதாக பல பிரபலமான பாடல்கள் உள்ளன. செயின்ட் அகஸ்டின் என்பவர் மேற்கத்திய உலகக் கண்ணோட்டத்தில் அதற்கான இசையை அறிமுகப்படுத்தினார். இசையின் சாராம்சம் என்பது கணித எண்களே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தம்முடைய சீஷர்களுடன் இணைந்து ஸ்தோத்திர பாடல் பாடியதாக மத்தேயு 26:30; மாற்கு 14:26 போன்றவற்றில் பதிவாகியுள்ளது. ஒருவேளை அவர்கள் சங்கீதம் 114-118 ஐ பாடியிருக்கலாம்.
பரலோக பாடகர் குழு இயேசு கிறிஸ்து பிறந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக எவ்வளவு ஆனந்தமாக பாடல் பாடுகிறார்கள் என லூக்கா விவரிக்கிறார். "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்" (லூக்கா 2:14).
1) தேவனுக்கு மகிமை:
பாடல்கள் பாடுவது என்பது தேவனை ஆராதிப்பதையும் அவரை மகிமைப்படுத்துவதையும் குறிக்கும். அதிலும் ஆராதனை என்பது நம்மை முழுமையாக அர்ப்பணிப்பது அதாவது ஆராதனையின் வாயிலாக அவருடைய அன்பை எண்ணிப் போற்றுவதும், அவருடைய மகிமையையும் கனத்தையும் வணங்குவதும், அவர் வெற்றிச் சிறந்ததையும் மற்றும் அவரின் கிருபையையும் எண்ணிப் போற்றுவதும் ஒரு சிறந்த ஆராதனை எனலாம். தேவதூதர்களின் பாடல் குழு உன்னதத்தில் இருக்கும் தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் அளித்து வருகின்றனர்.
2) மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்:
சமாதான பிரபு அளித்துள்ள சமாதானத்தின் காரணமாகவும் பூமியில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் காணப்படுகின்றது. இயேசுவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் தேவனுக்கும் பாவமுள்ள மனிதகுலத்திற்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டு வரும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அவரின் பிறப்பு இருக்கின்றது. இரட்சிப்பிற்கான ஒரு தேடலும் அல்லது ஆர்வமும் மற்றும் தேவனுடனான ஒப்புரவாகுதலும் மனுக்குலத்திற்கான சமாதானமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ஈவாக வழங்கப்படுகிறது.
3) கொண்டாட்டம்:
கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தில், ஆராதனை என்பதே கொண்டாட்டம் தான், உபவாசம் கூட ஆராதனைதான். தேவனுடைய கிருபை, அவரின் அன்பு என எண்ணி துதிப்பதும் மற்றும் பாவத்தையும், சாத்தானையும், மரணத்தையும் அவர் ஜெயித்ததற்கான போற்றுதல்குரிய கொண்டாட்டமாக ஆராதனை காணப்படுகின்றது.
4) நற்செய்தி:
சுவிசேஷம் என்ற ஒரு மிகப்பெரிய நற்செய்தி உள்ளது. அது தேவதூதர்களால் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இது கர்த்தராகிய இயேசுவாலும் அறிவிக்கப்பட்டது, தொடர்ந்து அப்போஸ்தலர்கள் மற்றும் அவருடைய ஊழியர்களால் அறிவிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது.
தேவதூதர்களால் முதன்முதலில் அளிக்கப்பட்ட செய்தியைப் போலதான் இன்றும் இருக்கின்றது. அன்று தேவதூதர்கள் பாடிய பாடலை இன்றும் உலகத்திற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நாம் மீண்டும் மீண்டும் பாட வேண்டியது அவசியமே. ஏனென்றால் கிறிஸ்தவ சமூகமே பாடல் சமூகம்தானே.
விடுதலையையும், இரட்சிப்பையும் மற்றும் மகிழ்ச்சியளிக்கும் பாடல்களை நான் பாடுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran