தேவபக்தியில் சிறந்தவள்;
இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாளை எடுத்துக் கொள்வோம். யோசேப்புக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறார். இளமையின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் கன்னிப்பெண். திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் அவள் நெஞ்சத்தில் எத்தனை கனவுகளோ? இந்நிலையில் தேவதூதுதன் அவளிடத்தில் வந்து நின்று,லூ 1:28 “அருள் மிகப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று கூறிய போது,இந்த வார்த்தைகளால் மரியாள் கலங்கி,இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ?’ என்று சிந்தித்தாள். ஏன்? தேவதூதனைப் பார்த்ததே அற்புதம். “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்று வேதம் கூறுகிறது. எனவே மரியாள் இருதயத்தில் பரிசுத்தம் காத்தவர். வாழ்த்துதலை கேட்டு ஏன் கலங்க வேண்டும்? வரலாறு அறிந்தவர் மரியாள். மோசேக்கு தேவன் காட்சி கொடுத்தார். எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை கானானுக்கு வழிநடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. யாத் 3:1-17. கிதியோன் தரிசனம் பெற்றார். மீதியானியரை வென்று,இஸ்ரவேலைக் காப்பாற்றும் (நியா 6:12-16) பொறுப்பு வழங்கப்பட்டது. தேவ வழி நடத்துதலை அறிந்தவர். எனவே தான் கலங்கினார். தேவதூதன்,“ உன்னதமான தேவகுமாரனை பெற்றெடுப்பாய்” என்று கூறியபோது,“இது எப்படியாகும்?” என தன் சந்தேகத்தை முன்வைத்தார். “தேவனால் எல்லாம் கூடும்” என தெரிவித்தவுடன். “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது.” என்று தன்னை அர்ப்பணித்தார். தாய்மையடைந்ததை 3 மாதங்கள் வேண்டுமானால் மறைக்க முடியும். அதற்குப்பின் அனைவருக்கும் தெரியவரும். ஒரு பெண்,திருமணத்திற்கு முன் கர்ப்பம் தரித்தால்,நிச்சயிக்கப்பட்ட கணவன் அவளை ஏற்றுக் கொள்வானா? அப்படிப்பட்டவர்களை ஊருக்கு வெளியே தள்ளி கல்லெறிந்து கொலை செய்வார்கள். இதையெல்லாம் அறிந்திருந்தும்,ஆண்டவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என விசுவாசித்து கர்த்தரின் கட்டளைக்கு அடிபணிந்தார் மரியாள்.
நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த போது கலியோ நாட்டிலுள்ள நாசரேத்திலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமிற்கு பயணம் செய்கிறார்கள். சரியான வாகன வசதிகள் இல்லாத காலம். கோவேறு கழுதை மேல் பயணம். பாதை சமவெளியா? மலைப்பாங்கான பிரதேசம். தேவகுமாரனைப் பெற்றெடுக்க சத்திரம் கூட கிடைக்கவில்லை. எத்தனை அலைச்சல்! எத்தனை தவிப்பு! இறுதியில் மாடடையும் குடிலில்,குளிர்ந்த சூழலில் (லூக்கா 2:7) திருமைந்தனை பெற்றெடுத்தார். அதன் பின்பாவது நிம்மதி கிடைத்ததா? ஏரோதுக்கு பயந்து,பிள்ளையைத் தூக்கிக் கொண்டு எகிப்துக்குப் போக வேண்டியிருந்தது. இத்தனையும் சகிக்க காரணம் ;காத்தாதி கர்த்தரைச் சார்ந்து கொண்ட பக்தியே. கடவுளைத் தேடுவதில்,அவர் புகழ் பாடுவதில் ஆராதனைகளில் கலந்து கொள்வதில் பெண்கள் முன்னனியில் இருப்பதை நாம் காணலாம்.
Author:Sis. வனஜா பால்ராஜ்
அன்பே உருவானவள் ;
“ஒருவனை அவன் தாய் ;தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்” (ஏசாயா 66:13) என்றும், “ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இறங்காமல் தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்றும் தேவாதி தேவனே கூறுகிறார். இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? ஆண்டவருக்கு அடுத்து நம்மை நேசிப்பவள் அன்னையே! அவளுடைய அன்பு விலையேற்றப்பட்டது. தன் பிள்ளைக்காக கணவனுக்காக எதையும் தியாகம் செய்வாள். உறவுகளைக் கட்டிக் காப்பதிலும் அவளே முதலிடம் பெறுவாள். ரூத் வரலாற்றிற்கு நம் சிந்தையைத் திருப்புவோம். எப்பிராத்தா என்றால் ‘செழிப்பான இடம்’ எனப் பொருள். பெத்லெகேம் என்றால் ‘அப்பத்தின் வீடு’ என்று அர்த்தம். தேசத்திலே பஞ்சம். பெத்லெகேம் ஊரானாகிய எலிமெலேக்கு தன் மனைவியாகிய நகோமியையும், மக்லோன், கிலியோன் என்ற இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு மோவாய் தேசத்திற்குப் போனான். எலிமெலேக் என்ற பெயருக்குப் பொருள். “என் தேவன் ராஜா”. பெயருக்கேற்றபடி தேவனை விசுவாசித்து, அப்பத்தின் வீட்டில் காத்திருக்க விருப்பமில்லை. அக்கரை பச்சையெனப் பறந்தான். ஆண்டவர் வெறுத்த மோவாபியரிலேயே தன் மகன்களுக்குப் பெண் எடுத்தனர். 10 ஆண்டுகள் அங்கிருந்தனர்.
எலிமெலேக்கு, மக்லோன், கிலியோன் மூவரும் மரித்தனர். இனிமையானவள் எனப் பொருள் தரும் பெயரையுடைய நகோமி, மாராள் என தன்னைக் கருதினாள். மாராள் என்பதற்கு கசந்தவள் எனப் பொருள். மனந்திரும்பினாள். தன் தேசம் செல்ல முடிவெடுத்தாள். இரு மருமக்களையும் அவர்கள் பிறந்த வீட்டிற்குச் சென்று மறுமணம் செய்து இன்புற்று வாழும்படி வாழ்த்தி அனுப்புகிறாள். ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டுச் சென்றுவிட்டாள். ரூத்தோ, தன் மாமியை விடாமல் பற்றிக் கொண்டாள். நகோமி கணவனுக்குக் கீழ்ப்படிந்து அந்நியநாடு சென்றாலும், ஆண்டவரை விடவில்லை. தேவபக்தியுடையவளாக, அன்புடையவளாக, தன் மருமக்களை நேசித்து வாழ்ந்திருக்கிறாள். ஆண்டவரைப் பற்றியும் மருமக்களிடம் கூறியிருக்கிறாள். அதன் விளைவு, மோவாபிய பெண்ணான ரூத் ஆண்டவரை இதய தெய்வமாக ஏற்று, “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என அறிக்கையிடுகிறாள். அவள் உள்ளம் அன்பால் நிறைந்திருந்தால்தான், தன் பெற்றோரிடம் சென்று, திருமணம் செய்து வாழவேண்டும் என முடிவெடுக்காமல் தன் கணவன், மகன்களை இழந்து ஆதரவற்றவளாக தன் தாய்நாடு திரும்பும் வயதான தன் மாமியைக் குறித்து கரிசனை கொள்கிறாள். ரூத் என்றால் சிநேகிதி எனப்பொருள். தன் பெயருக்கேற்றபடி வாழ்ந்தாள். “நான் உம்மைப் பின்பற்றாமல் திரும்பிப் போவதைக் குறித்து என்னோடே பேச வேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்.” என்று கூறுகிறாள். “மரணமே தவிர வேறொன்று நம்மைப் பிரிப்பதில்லை” என உறுதியாகக் கூறுகிறாள்.
அன்பே உருவான ரூத் அநாதை போல் செல்லும் அத்தையின் மீது கொண்ட அளவற்ற அன்பு அவளை உயர்த்தியது. தேவபக்தியும், அன்பும் நிறைந்த அவள், எலிமெலேக்கின் உறவினரும், மிகுந்த செல்வந்தனுமான போவாஸின் மனைவியாகி, தாவீதின் தாத்தாவான ஓபேத்-ஐப் பெற்றெடுத்தாள். தாவீதின் வம்சத்தில் தான், நம் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தருமான நம் மீட்பர் இயேசுகிறிஸ்து பிறந்தார். இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையில் இடம் பெற்றாள் ரூத்.
Author:Sis. வனஜா பால்ராஜ்
விசுவாசத்தில் வல்லவள்:
(1சாமுவேல்) எப்பிராயீம் மலை நாட்டைச் சார்ந்த சோப்பீம்;என்னப்பட்ட ராமாதாயீம் ஊரானாகிய எல்;க்கானாவிற்கு இரு மனைவியர். ஒருத்தி அன்னாள். மற்றவள் பெனின்னாள். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தனர். அன்னாளுக்குப் பிள்ளை இல்லை. வருடந்தோரும் சீலோவில் கர்த்தருடய சந்நிதியில் வந்து பலியிடுவான். அச்சமயம், பென்னினாள் அன்னாளை மனமடிவாக்குவாள். ஏனென்றால் அன்னாளை எல்க்கான சிநேகித்தப்படியால் அவளை சிறப்பாய்க் கவனிப்பாள். பெனின்னாளின் வார்த்தைகளால் வேதனைப்பட்டு அன்னாள் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள். ஒரு நாள் ஆலயத்திற்குள் சென்று தன் மனப்பாரத்தையெல்லாம் தேவசந்நிதியில் ஊற்றினாள். தேவாதி தேவன் தனக்கு நல்ல பதில் தருவார் என விசுவாசித்து, புறப்பட்டுப்; போய் உணவருந்தினாள். அப்புறம் அவள் துக்க முகமாய் இருக்கவில்லை. அதுதான் விசுவாசம். கடுகு விதையளவு விசுவாசம் இருந்தாலே மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டுப் போ என்றால் அது போகும். (மத் 17:20) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். தேவன் தந்துவிட்டார் என விசுவாசித்தால், துக்கம்; மறைந்து போகும். மனமகிழ்ச்சி வந்துவிடும். “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்.” என்று (சங் 37:4) தாவீது கூறுவதை வேதத்தில் பார்க்கலாம்.
ஆண்டவர் அன்னாளின் கர்ப்பத்தைத் தொட்டார். சாமுவேலைப் பெற்றெடுத்தாள். தான் செய்த பொருத்தனைப்படி பிள்ளை பால் மறந்தும், ஆலயத்திலே பிள்ளையை ஒப்படைத்தாள். தேவனைத் துதித்து, ஆராதித்து, ஆனந்தித்தாள் ஒரு குடும்பத்தில் கணவன் புரியாத வியாதியில் கஷ்டப்பட்டார். அலோபதி வைத்தியம், நாட்டு வைத்தியம் என அனைத்தும் கைவிட்டபிறகும் அவருடைய மனைவி விசுவாசித்தாள், கர்த்தர் சுகப்படுத்துவார் என்று பரமன் பாதத்தைப் பற்றிப் பிடித்தாள். கணவர் சுகம் பெற்றார். கர்த்தருடைய ஊழியத்தையும் செய்தார்.
எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும், கொடிய வியாதியாக இருந்தாலும், சாவின் விளிம்பு வரை சென்றாலும், விசுவாசித்து வெற்றியை சுதந்திரிக்கும் பண்பு பெண்களிடம் உண்டு. ஆம்! அவர்கள் விசுவாச வனிதையர்!
Author:Sis. வனஜா பால்ராஜ்