கடலன்னையின் அலைகரங்கள் தொட்டு இயற்கை எழில் வனப்போடு நின்றிருக்கும் குஜராத்தில் தான் வையகத்தையே நடுங்க வைத்த நிகழ்வு நடைபெற்றது.
தேசப்பிதா காந்தியைத். தந்த மாநிலத்தில் தான் தேசத்தை நடுங்க வைக்க நிலமும் நடுங்கியது. குடியரசுத் தினமான 2001ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 26ஆம் நாள் குஜராத்தின் கட்ச் பகுதியிலுள்ள காந்தி தாம் நகரிலுள்ள மாருதி ஹோட்டலில் 4வது மாடியில் இயேசுவை தெய்வமாக ஏற்று இறைபணியை இன்முகத்துடன் ஆற்றிவரும் நாற்பது நற்செய்திப் பணியாளர்கள் தங்கள் காலையுணவை அப்பொழுது தான் முடித்தனர். கட்ச்... 50 சதவீதம் வசதிமிக்க செல்வம் கொழிக்கும் பூமி, 50 சதவீதம் வறட்சி மிக்க இடம். அதில் புஞ் நகர் இந்தியாவின் மேற்குப் பகுதியில் கடைசி நகரம். வைர வியாபாரிகள் நிறைந்த இடம். குஜராத்தை சந்திக்கும் பணி பற்றி கலந்துரையாட திட்டம் வகுத்திட ஜனவரி 25 முதல் 27 வரை நடைபெற்ற முகாமில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்தும் வந்தவர்கள் இந்த நாற்பது பேர்.
காலையுணவிற்குப் பின் இரண்டாம் கூட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாவதாக இருந்தது. ஆனால் சரியாக 8.46ல் மூன்று விமானங்கள் பூமியில் சத்தம் போட்டு ஓடுவது போல் காதைப் பிளக்கும் சத்தம் கேட்டது. கட்டடம் ஆடியது. ஆம் பூமி நடுங்கியது. கட்டடங்கள் இடிந்தன. 306ஆம் அறையிலிருந்து நற்பணியாளர்கள் சுவரைப் பற்றியபடி சுவரில் சாய்ந்து நின்று, “இயேசுவே இயேசுவே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! என ஜெயித்துக் கொண்டிருந்தனர். கண் எதிரே 307 ஆம் எண் அறை விழுகிறது. 100 வினாடிகள் நீடித்த இந்த பூகம்பம் L (எல்) அலை பூகம்பமாம். அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டிகள் கலைந்து விழுவது போல, மணல் வீடுகள் நொறுங்கிச் சதைவது போல் பலமாடிக் கட்டிடங்கள் கண் எதிரே இடிந்து சரிந்தன. பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப் போயிற்று.
திருமறையில், பவுல் “பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத் தக்கதாக எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள் மேல் நம்பிக்கையாயிராமல் மரித்தோரை எழுப்புகிற தேவன் மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயத்திருந்தோம். (1 கொரி 1:8,9) என்ற வாசகத்தின் படியே நற்செய்திப் பணியாளர்கள் தங்கள் நம்பிக்கையை தேவன் மேலேயே வைத்தனர். தாங்கள் ஏதோ லிப்டில் இறங்குவது போல் ஓர் உணர்வு. கீழே இருந்த மூன்று மாடிகள் நொறுங்கிப் புதைய அதன் மேலே 4 வது மாடி உட்கார்ந்தது. கண்ணாடி ஜன்னலை உடைத்து, அதன் வழியே சிறிது கூட காயமின்றி நாற்பது நற்பணியாளர்களும் வெளியே வந்தனர். 2 கொரி 1:10ல் “அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார்? என பவுல் தொடர்ந்து கூறுவது போல், இவர்களை மரணத்தினின்று கர்த்தர் காப்பாற்றினார்.
வெளியே வந்த 40 நற்பணியாளர்களில் ஒருவரான சாமுவேல்ராஜ் மனமோ “தன் குடும்பம் என்னவாயிற்று? என்ற எண்ணத்தில் கலங்கித் தவித்தது. இங்கிருந்து வீட்டுக்கு 2 கி.மீ தூரம் தாமதிக்க முடியுமா என்ன? சைக்களில் சென்றார் என்பதை விட பறந்தார் என்றே கூறலாம். ஆங்காங்கு இடிந்தும், சரிந்தும் நின்று கொண்டிருந்தது கட்டடம். அவரைப் பார்த்த அண்டை வீட்டார், “பூகம்பம் வரவும் நாங்கள் வேகமாக வந்தோம் உங்க மனைவியைக் கூப்பிட்டோம், அவர்கள் வரவில்லை?” என அங்கலாய்த்தனர் கலக்கத்தோடு. கட்டடத்தை நோக்கி முன்னேறினார்.
ஜெபா, மெல்பா என்ற தனது இரு பிள்ளைகளையும் அணைத்தபடி அவரது மனைவி கிறிஸ்டி மேரி மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார். தேவாதி தேவனுக்கு நன்றி செலுத்தினார்.
“ஏம்மா! எல்லாரும் வெளியே ஓடி வந்திருக்காங்களே! நீங்க மூணு பேரும் ஏன் வரலை?
“பூகம்பம் வந்தவுடன் என்னவென்று முதல்ல எங்களுக்குப் புரியவிலை. மேலே வைத்திருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்தது. பீரோ ஆடியது, ஃபேன் விழுந்தது. நம்ப பிள்ளைங்க இரண்டு பேரையும் என் இரண்டு பக்கத்திலும் அணைச்சு வைச்சு கட்டிலில் உட்கார்ந்திட்டேன். ஜெபம் பண்ணிட்டே இருந்தேன். கட்டடமே ஆடும் போது இரண்டு பிள்ளைகளையும் தூக்கிகிட்டு வரவோ அல்லது கையைப் பிடித்து கூட்டிக்கிட்டு வேகமாக வரவோ முடியுமென்ற நம்பிக்கையில்லை! இயேசப்பா தான் காப்பாற்ற முடியுமென்ற நம்பிக்கை வந்தது. அவர் கரத்தில் எங்களை ஒப்படைச்சு ஜெபிச்சுகிட்டு இருந்தோம். பூகம்பம் நிக்கவும் நிதானமாக இறங்கி வர்றோம்! மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் கிறிஸ்டி.
நடுரோட்டிலேயே நால்வருமே தேவாதி தேவனைத் துதித்தனர். பல கோடி நன்றிகளை சமர்ப்பித்தனர். கோழி தன் குஞ்சுகளை தம் செட்டைக்குள் வைத்து பாதுகாப்பது போல் காத்த கர்த்தரின் கருணையை எண்ணி துதித்தனர்.
எதிர்பாராத விதமாக இயற்கைப் பேரழிவுகள் மத்தியிலும் அவரை நோக்கிக் கூப்பிடும் போது அற்புதமாய்க் காப்பாற்ற வல்ல ஆண்டவர் தான் இயேசு கிறிஸ்து. இவ்வுலகையும், சகல உயிரினங்களையும் படைத்தவர் அவர் தான். அவரால் படைக்கப்பட்ட ஆதாம் என்ற மனிதனும், ஏவாள் என்ற மனுஷியும் பாவத்தில் வீழ்ந்த போது, அவர்கள் மூலம் உருவான மனுக்குலம் அனைத்தின் மீதும் பாவம் சுமந்தது. அவர்கள் பாவிகளானார்கள். பாவத்தைச் செய்தார்கள். நரகத்திற்குரியவர்களாக வாழ்ந்தார்கள். கொடுமையான நரகத்தினின்று அவர்களை மீட்டெடுக்க கடவுளே மனிதனாக இவ்வுலகில் வந்து பிறந்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இன்றும் வாழ்கிறார்.
இயேசு கிறிஸ்துவை உங்கள் உள்ளக் கோவிலில் தெய்வமாக வைத்து வணங்கி, வருவீர்களானால் இவ்வுலக வாழ்வில் சந்தோஷம், சமாதானம் பெறலாம். மறுமையில் சொர்க்க வாழ்வை அடையலாம்.
இந்த உண்மைச் சம்பவம் விடுதலைப் புறா என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.