பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் !

அவன் ஒரு 24 வயது வாலிபன்..
அவனது தகப்பன் ஒரு வெறிபிடித்த, விக்கிரக ஆராதனையிலும் பில்லிசூனிய மாந்திரீக வித்தையிலும் ஊறிப்போனவன்.. பாதுகாப்பற்று வளர்ந்த தன் பாலியப் பருவத்திலே, தனது சொந்த சகோதரர்கள் தன் கண்முன்னேயே துடிக்கத் துடிக்க மடியக் காண்கிறான் அவன்.. தகப்பனே தன் சொந்தப் பிள்ளைகளைத் தன் கையாலே நரபலி செலுத்திய கொடுமைகளைக் கண்டு வளர்கிறான் அந்த வாலிபன்..

ஊரிலுள்ள சகல உயர்ந்த மேடுகளிலும் பிசாசுகளுக்குப் பலிபீடம் கட்டிப் பலியிட்டு வந்த அந்தத் தகப்பனுக்கு மலைகளும் குன்றுகளும் போதாமல் போகவே, தேசத்தின் சகல பச்சையான மரங்களையும் தன் துணைக்கு அழைத்துக்கொண்டு, அவைகளையும் தன் தெய்வங்களின் கோயில்களாய் மாற்றிவிட்டான் அவன். இப்படி ஒரு சூழலில் வளர்ந்து ஆளாகிறான் அந்த வாலிபன்..

பிரச்சனைகளுக்குத் தலையான அந்தத் தகப்பன், தேசத்துக்கு அதிபதியாயிருந்தது, பிரச்சனைகளை இன்னும் உச்சத்துக்கு ஏற்றியது. திரும்பின திசையெங்கும், உள்ளவர்களையெல்லாம் பகைத்து, யுத்தத்தின் மேல் யுத்தமே அவனது நாளும் பொழுதுமாய்ப்போனது. 

தனக்கு ஆதரவாய் இருப்பானென்று பெரிய ராஜா  ஒருவனோடு அவன் செய்த உடன்படிக்கை, அவனுக்கே வினையாய் முடிய, அவனையே விழுங்க அவனது வாசல்வரை வந்துவிட்ட அந்த ராஜாவை சமாதானப்படுத்தித் திருப்பியனுப்ப தேவனுடைய ஆலயத்தின் பொன்னையும் வெள்ளியையும் அவன் அள்ளிஅள்ளிக் கொடுக்க, பெரும்படையோடு வந்தவனோ, இவனது ஜனத்தையும் வீட்டிலுள்ளவர்களையும் கூட சிறைப்பிடித்துப் போனான்..

இவை எல்லாவற்றையும் கண்டு பயந்து போன அவன், தன்னை எதிர்த்து ஜெயித்துக்கொண்டே போன அந்த ராஜாக்களின் தெய்வங்களே அவர்களது வெற்றிக்குக் காரணமென்று எடை போட்டு, "என் ராஜ்யத்தை எனக்குக் கொடுத்தால், நான் உன்னைச் சேவிப்பேன்.." என்று அந்தப் பிசாசுகளோடு உடன்படிக்கை செய்கிறான். ஆனால் அந்தத் தெய்வங்களும் அவனுக்கு எதிராக மாறவே, அவனது அந்த எதிர்பார்ப்பிலும் மண்விழுந்தது.

கடைசியாக அந்த வாலிபனின் தகப்பனான அந்த அரசன் தன்னையே தேவனாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு தேவனின் பரிசுத்த வீட்டுக்குள் நுழைந்து, அங்குள்ள விலையேறப்பெற்ற பாத்திரங்கள், பணிமுட்டுகளை எடுத்துத் தன் ராஜ்யத்தின் தலைநகரை மூலைக்குமூலை விக்கிரகங்களால் நிறைத்தான். அப்படியும் சூழ்நிலை மாறுவதாய் இல்லை. மாறாக, தேசத்தின் ஆவிக்குரிய, சமூக, பொருளாதார நிலை சீர்குலைந்து சின்னாபின்னமானது.

கடைசியாக, மரித்துப்போன அந்த மன்னனுக்குத் தன் முற்பிதாக்களின் கல்லறையிலும் இடமின்றி, நகரில் எங்கோ ஒரு மூலையில் அடக்கம்பண்ணப்பட்டான் அவன்...

இது ஒரு சீர்குலைந்த குடும்பத்தின், கோத்திரத்தின், சமுதாயத்தின், தேசத்தின் உடைந்து சிதைந்த சூழலில் வளர்ந்த வாலிபன் ஒருவனின் கதை!

24, 25 வருடங்களாகத் தன் தகப்பனின் அக்கிரமங்களை நேரில் கண்டு வந்த அந்த வாலிபன், கடைசியாக சின்னாபின்னமாகிக்கிடந்த அந்த தேசத்துக்குத் தன் தகப்பனுக்குப்பின் ராஜாவாகிறான். பொருளாதாரமும் சமுதாயமும் ஒழுக்கமும் ஒன்றுமில்லாமல் போன நிலையில், முழுவதும் அசுத்தமும் அருவருப்பும் மண்டிக்கிடந்த தலைநகரில் வாழ வருகிறான் அவன்.

தன் சகோதரர்கள் தீயிடப்பட்டு நரபலி செலுத்தப்பட்ட நிலையில் அவன் மட்டும் உயிரோடு தப்பியதே அதிசயத்திலும் அதிசயமாயிருந்தது! கதவுகள் உடைந்து தகர்ந்து உட்புறமெல்லாம் வாரி இறைந்து கிடந்த அசுத்தங்களே அங்கே தேவனுடைய ஆலயத்தின் மிச்சமீதியாயிருந்தது.

அப்படிப்பட்ட மயான மண்ணில் வளர்ந்த "எசேக்கியா" என்ற அந்த வாலிபனிடம் வளமையான ஆவிக்குரிய வாழ்வொன்றை எதிர்பார்ப்பது எப்படி? யூதாவின் கேடுகெட்ட ராஜாக்களின் வரிசையில் வந்த அவனது தகப்பனானவன் வேறு யாருமல்ல, "ஆகாஸ்" என்ற அரசனே !

அந்த ஆகாசும் ஆகாபும் சீரழித்துப்போட்ட அன்றைய இஸ்ரவேல் தேசத்தை இன்றைய நமது இந்திய தேசத்தின் நிலையோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்!

Author : Pr. Romilton



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download