ஒரு தம்பதியினர் தங்கள் ஆண்டு நிறைவு நாள் (Anniversary) விழாவை கொண்டாடினர். தங்களை தேவன் திருமண ஒப்பந்தத்தில் இதுவரை நலமாய் நடத்தி வந்த விசுவாசத்திற்காக அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு, மதிய உணவு விருந்துடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அவர்கள் பல நண்பர்களை அழைத்திருந்தார்கள். இறைச்சியும் கறியையும் சேர்த்து சமைக்கப்படும் ஒரு சிறப்பான உணவு பிரியாணி. விருந்து மிக விமரிசையாக சம்பிரமமான பிரியாணியுடன் வழங்கப்பட்டது, அனைவரும் மகிழ்ச்சியோடு தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். ஆனாலும் அநேக நண்பர்கள் அந்த பிரியாணியை நினைவு கூர்ந்தனர், அதற்காக அத்தம்பதியினருக்கு நன்றி தெரிவித்தனர். அதில் ஒரு சிலரே அக்கொண்டாட்டம் தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நடந்தது என்பதை புரிந்துகொண்டு தம்பதியரை வாழ்த்தினர்.
உலகில் புற விஷயங்கள் அல்லது அற்ப விஷயங்கள் கொண்டாடப்படும் போது அதன் முக்கியமான கரு அல்லது முக்கிய பகுதி அல்லது மையம் புறக்கணிக்கப்படுவது வருத்தமான விஷயமாக இருக்கிறது. மேலே நடந்த சம்பவத்தில், கொண்டாட்டத்திற்கு காரணமான ‘கடவுளின் உண்மை தன்மையைக் கொண்டாடுவது’ விரைவில் மறந்து விட்டது. இரண்டாவது விஷயம் என்னவெனில், அதில் பரிமாறப்பட்ட உணவு மாத்திரமே நினைவில் இருந்தது.
இன்று கிறிஸ்தவ மண்டலத்திலும் இதே போன்ற விஷயங்களைக் காணலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்ற மரபுகளின் குப்பைகளில் மறைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் சாண்டா கிளாஸ் தான் முக்கியத்துவம் பெறுகிறார். பின்னர் உற்சாகமான பிறப்பை பற்றிய பாடல்கள் மற்றும் இசைக்காக கொண்டாடப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அலங்காரங்கள் பார்ப்பதற்கு கண்களை கவரும் விதமாகவும் விருந்தினர்களை மகிழ்விக்கும் விதமாகவும் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, கேக்குகள் இல்லாத கிறிஸ்துமஸ் முழுமையடையாது, எனவே சிறந்த கேக்குகள் சுடப்படுகின்றன அல்லது பேக்கரியில் இருந்து வாங்கப்படுகின்றன.
கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. முக்கியமான கிறிஸ்தவ போதனை மரபுகளால் மறைக்கப்படுகிறது. இந்த காலங்களில் முயல் (Easter Bunny) முக்கியமானது. (இது மேற்கத்திய கலாச்சாரங்களில் மிக பிரபலம்) முயல் வேடமிட்டு கூடை நிறைய வண்ணங்கள் தீட்டப்பட்ட முட்டைகளையும் சாக்லேட்டுகளையும் கொண்டு வந்து குழந்தைகளுக்கு அளிப்பர். மர துகள்களால் ஆன முட்டைகளும் பயன்படுத்தினர். இப்போது அலுமனிய படலத்தால் மூடப்பட்ட சாக்லேட் முட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
கிறிஸ்தவ போதனையானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தார், பரிசுத்தத்துடன் ஊழியம் செய்தார், நீதியின் நிமித்தம் துன்பப்பட்டார், பொல்லாத மனுக்குலத்தால் சிலுவையில் அறையப்பட்டார், மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தார். அவர் ஜீவிக்கிறார், அவரை விசுவாசிப்பவர்களை மன்னித்து வாழ்வளிக்க இன்றும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். கிறிஸ்துவின் உயிர்ந்தெழுந்த பண்டிகையை மகிழ்ச்சியுடனும், சமாதானத்துடனும் மற்றும் நம்பிக்கையுடனும், அதன் முக்கியத்துவம் அறிந்தவர்களாகவும் கொண்டாடுவோம்.
உயிர்த்தெழுதல் பண்டிகையை நான் எவ்வளவு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன்? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J. N. Manokaran