18:9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;
18:10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
18:11 அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
18:12 கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:
18:13 இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய் தேவனைச் சேவிக்குபடி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள்.
18:14 பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.
18:15 இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
18:16 அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான்.
18:17 அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை
18:18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.