மனிதர்களுக்கான ஆயத்தம்

நகரில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் சுமார் இருபது அற்புதமான வீடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு செல்ல வழியே இல்லை! சாலை என்றால் வரைபடத்தில்தான்; நிஜத்தில் வெறும் குழி, கல்லு மட்டுமே. மின்சாரம் வரும், போகும் அதனால் ஒவ்வொருவரும் பெரிய பெரிய ஜெனரேட்டர் வாங்கி வீட்டை சிறிய மின்நிலையமாக மாற்றியுள்ளனர். தண்ணீர் வசதியும் இல்லை; கடின நீரை குடிநீராக மாற்ற தனித்தனி சுத்திகரிப்பு எந்திரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் வேலை செய்து கொண்டே இருக்கின்றன. வடிகால் அமைப்பு இல்லாததால், மழை பெய்தால் வீடுகள் மாசுநீரால் சூழப்பட்ட “தீவு வீடுகள்” ஆகி விடுகின்றன. முதலில் ஒருவர் ஒரு வீடு கட்டுகிறார்; உடனே மற்றவர்கள், “அவர் கட்டினாரே, நாமும் கட்டலாம்!” என்று பின்தொடர்கிறார்கள். இவ்வாறே வீடுகள் பல உருவாகின்றன. பின்னர் மெதுவாக சாலை வரலாம், தண்ணீர் வரலாம், மின்சாரம் சீராகலாம், வடிகால் கூட ஒருநாள் வரும்! எந்த திட்டமிடலும் இல்லாமல், “நடக்கட்டும், நடப்பதைப் பார்க்கலாம்” என்ற மனநிலையில் எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறது. அதற்கிடையில் மக்கள்; கோடீஸ்வரர்களே ஆனாலும்  அடிப்படை வசதிகளுக்காக தவித்து வாழ்கிறார்கள்!

தேவனின் திட்டமும் ஆயத்தமும்:
சிருஷ்டிப்பு காரியத்துக்கு எந்த மனிதரும் சாட்சியாக இல்லை. தேவன் யோபை நோக்கி, “நான் பூமியின் அஸ்திவாரத்தை அமைத்தபோது நீ எங்கே இருந்தாய்?” என்று கேட்டார் (யோபு 38:4). தமது படைப்புக் கிரியையை மோசேக்கு வெளிப்படுத்த தேவன் கிருபை செய்தார் (ஆதியாகமம் 1). ஆதாமும் ஏவாளும் வசிக்கச் சிறந்ததாக இருக்கும்படி தேவன் திட்டமிட்டு பூமியை முழுமையாக ஆயத்தப்படுத்தினார். தேவன் மனிதரை முதலில் படைத்து, பிறகு அவர்களுக்கு தேவையானதைச் சரிசெய்யவில்லை. எல்லாம் மிக நேர்த்தியாய் ஆயத்தம் செய்யும் தேவனவர்.

ஆரம்பம்:
ஆரம்பத்தில், அல்லது ஆரம்பத்தின் தொடக்கத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். இதுவே முழு படைப்பின் சுருக்கமான விளக்கமாகும் (ஆதியாகமம் 1:1).

படைப்பின் ஒழுங்கு:
ஆறு நாட்களிலும் தேவன் படைப்பையும் பிரித்தலையும் செய்து, ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை கொடுத்தார்.
முதல் நாளில், கர்த்தர் கூறினார்: “ஒளி உண்டாகட்டும்”, ஒளி உண்டானது. அது இருளிலிருந்து பிரிக்கப்பட்டது (ஆதியாகமம் 1:4, 7, 9-10, 14, 21, 25-26). இரண்டாம் நாளில், மேலுள்ள நீரையும் கீழுள்ள நீரையும் பிரித்தார். மூன்றாம் நாளில், நிலத்தையும் கடலையும் பிரித்தார். நான்காம் நாளில், பகலும் இரவும் ஆட்சி செய்ய சூரியன், சந்திரன், நட்சத்திரங்களையும் படைத்தார். ஐந்தாம் நாளில், கடலில் வாழும் ஜீவிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் இரண்டு தனித்த இனங்களாகப் படைத்தார். ஆறாம் நாளில், நிலத்தில் வாழும் மிருகங்களிலிருந்து மனிதரை தனித்துப் பிரித்துப் படைத்தார்.

சுகமான சூழல்:
பொருள்களையும், பிற உயிர்களையும் படைத்த பின் தேவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார். மனிதருக்கான தேவனுடைய அன்பும், நிலைத்திருக்கும் சூழலையும் உருவாக்கிய அவர் செயலும், தேவனின் நுணுக்கமான திட்டத்தையும் மகத்தான நல்ல நோக்கத்தையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

மனிதகுலத்திற்கான தேவனின் திட்டத்தையும் நோக்கத்தையும் நான் உணர்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran