முக்கியக் கருத்து
- தேவனுக்கு உண்மையாயிருப்பதால் தேவ மனிதனுக்கு சத்துருக்கள் தரும் துன்பம்.
- தேவமனிதனுடைய அசையா நம்பிக்கை துன்பத்தின் மத்தியிலும் வெளிப்படுதல்.
- தேவ மனிதனை துன்புறுத்தும் துன்மார்க்கன்மேல் திரும்பும் தேவ கோபாக்கினை.
முன்னுரை
தேவனுக்கு உண்மையாயிருப்பதினிமித்தம் பகைக்கப்படும் ஒரு தேவ மனிதனின் நிந்தைகள் கஷ்டங்களைக் குறித்து இந்த சங்கீதத்தில் பார்க்கிறோம். தாவீதின் சங்கீதமாக இது கருதப்பட்டாலும் தேவனுக்கு உண்மையாயிருந்த எரேமியா தீர்க்கதரிசியின் துன்பங்களுக்கும், மேசியா கிறிஸ்துவினுடைய வேதனைகளுக்கும் கூட ஒத்திருக்கிறது.
1. தாவீதின் துயரம் (வச.1-6)
வெள்ளத்தில் அமிழ்ந்து போவது போன்று, காரணமின்றி தன்னைப் பகைக்கிறவர்கள், செய்யாத குற்றத்தை தன் மேல் சுமத்துகிறவர்கள் ஏகமாய் பெருகி, பலத்து தன்னை சங்கரிக்க வருவதை தேவனிடம் அபயமிட்டு தனது இரட்சிப்புக்காக வேண்டுகிறான். அநேக வேளைகளில் விசுவாசிகளாகிய நமது வாழ்க்கையிலும் நாம் செய்யாத குற்றம் நம்மேல் சுமத்தப்பட்டு நாம் துன்பத்திற்குள்ளாக தள்ளப்படும் சூழ்நிலையில் கடந்து சென்றிருக்கலாம். தாவீதைப்போல, அப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனை நோக்கி அபயமிடுவது நமக்கு விடுதலையை நிச்சயம் தரும் என்பதை விசுவாசிக்கவேண்டும். அதே நேரத்தில், தாவீது தான் செய்த ஒருசில புத்தியீனமான காரியங்களையும் அறிக்கையிடத் தவறாதிருப்பதை (வச.5) இல் பார்க்கிறோம். தனது புத்தியீனத்தினிமித்தம் மற்ற தேவபிள்ளைகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று கருத்தாய் (வச.6) ஜெபிப்பதை பாருங்கள்.விசுவாசிகளாகிய நாம் காரணமின்றி பகைக்கப்பட்டாலும், நம்மில் ஏதேனும் சிறு குறையாவது உண்டா என்று ஆராய்ந்துஅறிக்கையிடுவது அவசியம்.
2. மேசியாவின் துயரம் (வச.7-12, 21)
தாவீது தனது துயரத்தை பட்டியலிடும் வேளையில் தீர்க்கதரிசன வார்த்தைகளாக மேசியா கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளின் துயரத்தை உரைத்திருக்கிறார். பிதாவாகிய தேவனிடம் இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த பக்தி வைராக்கியத்தினால் அவர் பிடிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, சிலுவையில் தொங்கியபோது அவருடைய தாகத்திற்கு கசப்பு கலந்த காடியைக் கொடுக்கப்பட்ட சம்பவங்களை இங்கே தாவீது படம்பிடித்துக் காட்டியிருப்பது, தாவீது ஒரு தீர்க்கதரிசி என்பதை வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் பக்தி வைராக்கியத்தைப்பற்றியும், தமது சொந்த ஜனங்களால் தள்ளப்பட்டதையும், கசப்பு கலந்த காடி கொடுக்கப்பட்டதையும் யோவான் 2:17, யோவான் 1:11, யோவான் 19:28,29 ஆம் வசனங்களில் வாசிக்கிறோம்.
3. துயரத்திலும் தேவனை சார்ந்திருத்தல் (வச.13-20)
"ஆனாலும், கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; ...' (வச.13) என்ற ஜெபமே ஒரு விசுவாசியின் மகா பெரிய பெலனும் வெற்றியை ஈட்டித்தருவதுமாயிருக்கிறது. தேவ மனிதனுக்கு வரும் நிந்தை அவமானங்கள் அவனை வீழ்த்தக் கூடிய சக்தியுடையதல்ல.
"... நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே' என்று எபிரெயர் 10:32 இல் அப்போஸ்தலன் எழுதியிருக்கிறான். தன்மேல் வந்த ஜலப்பிரவாகம் நிரந்தரமாக தன்னை அமிழ்த்திப் போடாதபடி (வச.15) அவை விடுவிக்கப்படக்கூடிய தற்காலிக சோதனைக்காகவே தேவமனிதனுக்கு (வச.16,17) தேவனால் மாற்றப்படுகிறது. தேவமனிதனுக்கோ அவன்மேல் பரிதாபப்படவும், தேற்றவும், தூக்கிவிடவும் வேறு எந்த மனிதரும் உதவ முன்வராத சூழ்நிலையில் கர்த்தர் ஒருவரே தமது மகா வல்லமையினால் காத்துக்கொண்டார் என்ற சாட்சியை (வச.19,20) இல் தாவீது சொல்வதை பார்க்கிறோம்.
தேவ ஜனமே, உன்னை மகா தீங்கினின்று விடுவிக்க யாருமில்லையே என்று கலங்காதே! நீ நம்பும் தேவன் உன்னை எல்லா நிந்தைக்கும் துயரத்தினின்றும் காக்க மகா பெலன் கொண்டவராயிருக்கிறார்.
"மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, ... கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் ... கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, ... கொண்டிருக்கிற மனுஷன் பாக்கிவான்' (எரேமியா 17:5-7).
4. தேவ மனிதனை வஞ்சித்தவனின்மேல் ஆக்கினை (வச.22-28)
தேவ மனிதனாகிய தாவீதை எதிர்த்து வஞ்சித்தவர்களும், தாவீதின் குமாரனாகிய மேசியா கிறிஸ்துவை வஞ்சித்தவர்களின் முடிவையும் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். தாவீதை எதிர்த்துப் போராடிய மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர் எல்லாம் மடங்கடிக்கப்பட்டுப் போனார்கள். தாவீதை வஞ்சித்து அழிக்க நினைத்த அவனுடைய சொந்த வீட்டாரான சவுல் ராஜாவும், அப்சலோமும் பரிதாபமாக யுத்தத்தில் மாண்டுபோனார்கள். மேசியா கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த யூதாசும் நான்றுகொண்டு செத்தான். தேவ ஜனமே, உனக்கு விரோதமாக எழும் வஞ்சகர்கள் அனைவருடைய முடியும் அப்படியேதான் இருக்கும். "அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; ...' என்று வச.25 இல் ஏறெடுக்கப்பட்ட தேவ மனிதன் ஜெபம் உறுதிசெய்யப்பட்டதை குறித்து அப்போஸ்தலர் 1:16-26 ஆம் வசனம் வரை வாசிக்கும்போது தெரிந்துகொள்ளுகிறோம்.
5. தேவ மனிதனின் பொருத்தனையும் தேவனுக்குத் துதியும் (வச.29-36)
இவ்விதமாக வருத்தப்பட்ட நானோ தேவனுடைய இரட்சிப்பினால் உயர்த்தப்பட்டதினிமித்தம் அவரை பாட்டினால் துதித்து, ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். "கர்த்தர் எளியவர்களின் ஜெபத்தைக் கேட்கிறார்' (வச.33) ஆகவே, வானமும் பூமியும்கூட அவரைத் துதிக்கக்கடவது என்று பூரிப்பாக முழங்குகிறார் தாவீது. தேவ ஜனம், அவருடைய ஊழியர்கள் தேவ நகரத்தை மீண்டும் முற்றிலும் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்ற தீர்க்கதரிசன வார்த்தைகளோடு தாவீது இந்த சங்கீதத்தை முடிப்பது தேவ ஜனமாகிய விசுவாசிகளுக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையின் பெலன் கொடுக்கிறது.
Author: Rev. Dr. R. Samuel