சங்கீதம் 10- விளக்கவுரை

முக்கிய கருத்து :

 - துன்மார்க்கரின் வெற்றி தற்காலிகமானது.
 - ஜெயமோ கர்த்தருடையது.

துன்மார்க்கனின் மாயையான வெற்றி

இந்த உலகில் அநியாயமும் அக்கிரமமும் பரவி வளர்ந்து வருகிறது. தேவனும் அதை தடுக்காததைப்போல் தோன்றுகிறது. ஆகவே, சங்கீதக்காரன் "ஏன் தூரமாய் நிற்கிறீர்?' என்று (வச.-1) அங்கலாய்க்கிறான். துன்மார்க்கன் தான் விரும்பிய வெற்றியை பெற்றதினால் அது தற்காலிகமானது, தேவனுக்குப் பிரியமற்றது என்பதை அறியாமல், பெருமை கொண்டு தேவனைத் தேடாமல் அசட்டை செய்கிறான் (வச.3-7). ஆனால் வேதம் கூறுகிறது, "ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ... அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, ...'  நீதிமொழிகள் 6:16-19. "... துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். ... ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்'  நீதிமொழிகள் 6:12-15.

துன்மார்க்கன் சிறுமையானவனைக் கொடூரமாய்த் துன்பப்படுத்தி ,வஞ்சகமான சூழ்ச்சிகளால் குற்றமற்றவர்களை தன் வலைக்குள் பிடித்துக்கொள்ளுகிறான். தேவன் அதை விசாரிக்கமாட்டார் என்று எண்ணம் கொள்கிறான். நான் அசைக்கப்படுவதில்லை என்றும் தனக்குள் நினைக்கிறான் என்று (வச.2,6,8-11,13)இல் வாசிக்கிறோம். உலக மாயை இன்பங்களாகிய போதை, களியாட்டுகளைக் காட்டி இளைஞர்களையும் படிப்பறிவற்றவர்களையும் ஏமாற்றி சமூக விரோதிகள் கெடுப்பதை இந்த நாட்களில் பார்க்கிறோம். அவர்களுடைய வாழ்க்கை சரீரத்திலும் ஆன்மாவிலும் நாசமடைகிறது. அப்படி மோசம் போகிறவர்களைச் சத்திய வேதம் பல வசனங்கள் மூலம் எச்சரிக்கிறது. 
"என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே' (நீதிமொழிகள் 1:10).
"சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் ... அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்'(2 தீமோத்தேயு 2:16,17).

தேவ ஜனத்தின் ஜெபம் அவசியம்

தேவன் துன்மார்க்கனை கவிழ்த்துப் போட்டு திக்கற்றவர்களுக்கும் சிறுமைப்பட்டவர்களுக்கும் சகாயம் செய்யும்படி சங்கீதக்காரன் (வச.12,15)-இல் ஜெபிப்பதை வாசிக்கிறோம். தேவ ஐனம், தேவன் பாவத்தையும் பயங்கரங்களையும் இவ்வுலகத்தைவிட்டு முற்றிலும் நீக்கும்படியாக ஜெபிக்க வேண்டும்.

"துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; ...'  (2 தெசலோனிக்கேயர் 3:2).

"நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், ... நாம் ... எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் பண்ணவேண்டும்' (1 தீமோத்தேயு 2:1,2).

ஜெயம் கர்த்தருடையதே

"கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார்'  (வச.16) ஆகவே, கர்த்தர் ஜெயமெடுத்து துன்மார்க்கனை அழிப்பார் (வச.17,18).

"பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்'என்று ஏசாயா 13:11 இலும்,
"... ஆட்டுக்குட்டியானவர் (இயேசு கிறிஸ்து) கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்' என்று வெளிப்படுத்தல் 17:14இலும் வாசித்து ஜெயம் கர்த்தருடையது என்று தெரிந்துகொள்ளுகிறோம்.

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download