வெளிப்படுத்தின விசேஷம் 14-  விளக்கவுரை


அதிகாரம்- 14

சீயோன் மலையில் 1,44,000 பேர்
The 1,44,000 on Mount Zion
சீயோன் மலையின்மேல் … 1,44,000 பேரையும் நிற்கக்கண்டேன். ( வச 1)

சில முக்கிய கடைசிகால நிகழ்வுகள் யோவானுக்கு தரிசனமாக காண்பிக்கபபட்டதை இந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம். முதலாவது, சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவோடு 1,44,000 பேர் நிற்கிறார்கள். இரண்டாவது, உபத்திரவ காலத்து இரத்த சாட்சிகளின் எண்ணிக்கை நிறைவடைந்து தேவனிடம் சேர்க்கப்படுகிறார்கள். மூன்றாவது, அந்திகிறிஸ்துவின் முத்திரை தரித்தவர்கள் தேவகோபாக்கினையின் ஆலையில் மிதிக்கப்பட்டு அழிவை சந்திக்கிறார்கள்.

வச 1: சீயோன் மலை என்பது தேவனுடைய நகரம். பரலோகத்தின் தலை நகரம். எருசலேமின் மத்திய பகுதி; சங்கீதம் 48: 1,2. 65: 1. ரோமர் 11: 26. எபி 12: 22
அங்கே ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவோடு 1,44,000 பேர் நின்றிருந்தார்கள்.

வச 2- 5- இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
• பிதாவின் நாமம் எழுதப்பட்டவர்கள் (வச 1)வெளி 3:12 – ஜெயங்கொண்ட கிறிஸ்தவர்கள்
• புதுப்பாட்டு பாடுகிறவர்கள் (வச 2,3) ஏசாயா 35: 10 – மீட்கப்பட்டவர்கள்
• மாசில்லாதவர்கள் (வச 4,5)எபே 5: 27, 2 கொரி 11: 2
- முதற்பலன்களாக வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களின் கூட்டத்திலிருந்து முதல்தரமான பரிசுத்த குணமும், புறஜாதி தெய்வங்களால் கறைபடாதவர்களும்( உபாகமம் 12:2-3, 2 கொரி 6: 16, 17.) மேலான அர்ப்பணிப்பும் செய்தவர்கள். ஸ்திரீகளால் கறைபடாதவர்கள், கற்புள்ளவர்கள் என்று 4ஆம் வசனத்தில் சொல்லப்பட்டது திருமணபந்தத்தால் கறைபடுவதாகவும் கற்பை இழப்பதாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.  எபிரேயர் 13: 4. மேலும், இந்த பரிசுத்தவான்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருப்பார்கள். கலாத்தியர் 3: 28. இக்கருத்துக்களை மனதில் கொண்டு வசனம் 4 விளங்கிக்கொள்ளப்படவேண்டும்.

யார் இவர்கள்?
• 1,44,000 என்ற குறிப்பிட்ட எண்ணிக்கை கூறப்பட்டுள்ளதால் யார் இவர்கள் என்று அறிய ஓர் ஆவல் எழும்புகிறது.
• இவர்களை சிலர் முத்திரிக்கப்பட்ட யூதர்கள் (வெளி 7) என்றும்,வேறு சிலர் இவர்களை முழுநேர  ஊழியர்கள் என்றும் விளக்கமளிக்கிறார்கள்.
• விளக்கங்கள் எப்படி இருந்தாலும், இவர்கள் தங்கள் பரிசுத்தத்திலும், அர்ப்பணிப்பிலும், சுத்திகரிப்பிலும் முதல் தரமானவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
- நாம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலும், கர்த்தரின் சேவையிலும் அதிக அர்ப்பணிப்போடு ஈடுபட்டால் அதற்கேற்ற பலனை கர்த்தர் நமக்கு அருளுவார். அவருடைய ராஜ்ஜியத்தில் முதன்மையான இடத்தை கொடுப்பார். வெளி; 22: 12
                
வச 6- 13- மூன்று தூதர்கள பறந்து வந்து சில முக்கிய அறிவிப்புகளைக் கொடுக்கிறார்கள்.
 
1. வச 6,7 : முதலாம் தூதன், கடைசியாக நித்திய சுவிசேஷம் எல்லா தேசங்களுக்கும் அறிவிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி, தேவனுக்கு பயப்படும்படி உற்சாகப்படுத்துகிறான.; மற்றும், தேவ நியாயத்தீர்ப்பு சமீபமாகிவிட்டதைக் கூறி எச்சரிக்கிறான்.

2. வச 8  : இரண்டாம் தூதன், பாபிலோன் என்ற விழுந்துபோன சபையின் முடிவை அறிவிக்கிறான். 
புறஜாதிமார்க்கங்களுடன் கலந்து, ஆவிக்குரிய வேசித்தனத்தில் ஈடுபட்டு அவற்றின் தவறான போதகங்களை சகல தேச மக்களுக்கும் அளித்த சபை வீழ்த்தப்பட்டது.        
 
3. வச 9- 13 : மூன்றாம் தூதன், தேவ ஜனம் இரத்த சாட்சியாக மரிப்பதாயினும், மிருகத்தின் முத்திரையை தரித்துக்கொள்ளாமல், நரகாக்கினைக்குத் தப்பித்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறான்.          
கர்த்தருக்குள் மரிக்கிறவர்களுக்கோ நித்திய இளைப்பாறுதல் உண்டென்ற ஆறுதல் வார்த்தைகளையும் உச்சரிப்பவனாக இந்த தூதன் காணப்பட்டான்.

இதன் பிறகு இரண்டுவிதமான அறுவடைகள் பூமியில் நடந்து முடிவதை யோவான் தரிசனத்திலே காண்கிறான்.
1. வச 14- 16:  மனுஷகுமாரன் செய்யும் அறுவடை - இரத்தசாட்சிகளின் எண்ணிக்கை நிறைவடைந்ததால் மனுஷகுமாரன் மேகங்கள்மேல் வந்து இரத்தசாட்சியாக மரித்த பரிசுத்தவான்களை தமது அறுவடையாக அவருடைய களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்வார்.  மத் 24: 29- 31

2. வச 17- 20:  தேவ கோபாக்கினையின் அறுவடை – அந்திகிறிஸ்துவின் முத்திரையை தரித்துக் கொண்டவர்கள் தேவ கோபாக்கினையின் ஆலையில் போடப்பட்டு மிதிக்கப்படுவார்கள். சாவு எண்ணிக்கை பெரிதாயிருக்கும் என்பதை குறிக்கும்வகையில் பெருத்த இரத்தவெள்ளம் புறப்பட்டு வருவது எழுதப்பட்டுள்ளது. யோவேல் 3: 12- 14

Author: Rev. Dr. R. Samuel 


Author: Rev. Dr. R. Samuel