மீண்டும் சிறந்தது

சொற்றொடர் முழக்கங்கள் (slogans) தங்களது சொந்த தேசம், நாட்டின் கலாச்சாரம் அல்லது மதத்தை மீண்டும் சிறப்பாக மாற்ற விரும்புகின்றன. சில நேரங்களில் இவை அரசியல் கூட்டங்களின் முழக்கமாகவும் பயன்படுகின்றன. பெரும்பாலும் இவை ஒரு குறிப்பிட்ட குழுவின் எதிராகவே அமைகின்றன. இந்த "மீண்டும் சிறப்பாக" இல்லாமைக்கு காரணமாக இடம்பெயர்ந்தவர்கள், சிறுபான்மை மதத்தினர், ஏழைகள் மற்றும் கீழ் ஜாதியினர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. வீழ்ந்துபோன மனித குலத்திற்கு மகத்துவத்திற்கான விருப்பம் எப்போதும் இருந்து கொண்டே வருகிறது.

பெயரை உருவாக்குதல்:
நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு பிறகு, நோவாவின் சந்ததிகள் பெருகினார்கள். அவர்கள் சினார் நாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். ஒரே மொழியைக் கொண்டு, அவர்கள் ஒருமித்தராயும், தொழில்நுட்ப ரீதியாகவும் மிகுந்த முன்னேற்றம் பெற முடிந்தது. இந்த நிலையில், அவர்கள் வானங்களை எட்டும் அளவுக்கு ஒரு கோபுரத்துடன் ஒரு நகரத்தை கட்ட விரும்பினர். இது ஒரு வகையான பொய்யான தெய்வபக்தி தோற்றமும், பூமியின் பிற பகுதிகளுக்கு பரவாமல் இருக்கவும், எதிர்கால வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறவும் அவர்கள் கொண்டிருந்த விருப்பமாகும். இந்தக் கலகத்தனமான நோக்கத்துடன், அவர்கள் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க விரும்பினர் (ஆதியாகமம் 11:4). தேவன் இதற்கு தண்டனையாக அவர்களது மொழிகளை குழப்பினார் மற்றும் அவர்களை பூமியெங்கும் சிதறவிட்டார்.

தேவனின் பரிசு:
பாபேல் நகர மக்கள் ஒரு பெரிய பெயரை அடைய விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக குழுவாக செயல்பட்டதால், அவர்களின் மனித முயற்சிகள் தோல்வியடைந்தன. எனினும், தேவன் ஆபிரகாமை அழைத்து, வாக்குறுதி செய்து உடன்படிக்கை செய்தார்; “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம் 12:2). இது தேவனின் கிருபையால் கிடைக்கும் ஒரு பரிசு; மனித முயற்சியால் அல்ல.

தேவனின் எதிர்பார்ப்பு:
ஆபிரகாம் தன் பிள்ளைகளையும் சந்ததியினரையும் தேவனுடைய வழிகளில் நடக்கவும், நீதியையும் நியாயத்தையும் செயல்படுத்தவும் கட்டளையிட வேண்டும் என்று தேவன் எதிர்பார்த்தார் (ஆதியாகமம் 18:19). இவ்வாறு நடந்தால், அவரது சந்ததிகள் ஒரு பெரிய தேசமாக மாறுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் விரும்பியவாறு வாழவில்லை. இருப்பினும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததிகளாக, நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் கிறிஸ்துவை பின்பற்றாதவர்கள் கூட கடவுளுக்கு மகிமை சேர்க்கும் அளவுக்கு வாழ வேண்டும் (மத்தேயு 5:16).

பின்னோக்கி போகிறோமா?:
ஒரு தேசத்தை மீண்டும் மகத்துவம் வாய்ந்ததாக மாற்றுவது என்பது பழைய சிறந்த நாட்களுக்குத் திரும்புவது போலக் கூறப்படுகிறது. ஆனால் ஆச்சரியமாக, அத்தகைய ஒரு காலம் எப்போதும் இருந்ததில்லை, அது ஒரு கட்டுக்கதை அல்லது கணிப்பே தவிர வேறு எதுவும் அல்ல. வரலாறில் எதையாவது திரும்பிப் பார்க்கவேண்டுமானால், உண்மையான மகத்தான காலம் என்பது மனிதனின் வீழ்ச்சிக்கு முந்தைய ஏதேன் தோட்டத்தில் இருந்த காலமே ஆகும் (ஆதியாகமம் 3).

மகத்துவம் என்பது ஆண்டவரை அறிந்து, அவருடைய நியாயச்சட்டத்தை புரிந்து, விசுவாசத்தின் மூலமாக கீழ்ப்படிவதினால் தான் கிடைக்கிறது என்பதை நான் உணருகிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran