முக்கியக் கருத்து
- உன்னதமான தேவனுடைய மறைவிலிருக்கிறவனுக்கு எந்த பொல்லாப்பும் நேரிடாது.
- சர்வ வல்ல தேவனுடைய நிழலிலிருக்கிறவர்களுக்குக் கர்த்தர் முழுப்பாதுகாப்பையும் அளிக்கிறார்.
- ஆபத்து நேரிட்டாலும், தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவனைக் கர்த்தர் தப்புவிப்பார்.
முன்னுரை
- இஸ்ரவேல் மக்களை வனாந்திர யாத்திரையில் வழிநடத்த அவர்களுக்கு தேவனுடைய முழுபாதுகாப்பு அவசியமாயிருந்தது. வனாந்திர யாத்திரை பயங்கரங்கள் நிறைந்த பாதையாகவும், வாழ்வாதாரமே இல்லாத வழியாகவும் இருந்ததால் இவையெல்லாவற்றையும் தேவன் கொடுப்பார் என்ற விசுவாச அறிக்கை செய்து பாடிய பாடல். மோசே எழுதியிருக்கலாம் என்பது ஒரு கருத்து.
- இந்த உலகத்தில் வாழ்க்கையென்னும் யாத்திரை செய்யும் கிறிஸ்தவ சபைக்கும் விசுவாசிகளுக்கும் தேவன் முழுப்பாதுகாப்பையும் அளிப்பார் என்ற நம்பிக்கையை இந்த சங்கீதம் கொடுக்கிறது.
(வச.1,2) - உன்னதமானவர், சர்வ வல்லவர் என்று இந்த சங்கீதத்திலுள்ள நாமங்கள் கர்த்தருடைய வெவ்வெறு பாதுகாப்பை விளக்குகின்றன. "உன்னதமானவர்' என்பது நாம் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளைவிட அவர் பெரியவர் (ஆதி.14:19) என்றும், "சர்வ வல்லவர்' என்பது நமக்கு எதிராக வரும் எல்லா சத்துருக்களையும் அழிக்க வல்லவர் (யாத்.6:3)என்றும் குறிக்கிறது. இப்படிப்பட்ட கர்த்தரை "என் அடைக்கலம்', "என் கோட்டை' என்றெல்லாம் அழைப்பது ஒவ்வொருவரும்அவர் மேல் தனக்கென வைக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
"தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்'. ஆபகூக் 2:4, எபிரெயர் 10:38.
(வச.3-13) - உன்னதமான தேவன் தம்மை நம்பும் பக்தர்களுக்கு,விசுவாசிகளுக்கு ஏழுவித பாதுகாப்பை உலக வாழ்க்கையில் கொடுக்கிறார் என்று இந்த சங்கீதம் உறுதியளிக்கிறது.
1. (வச.3,4) வேட்டையாட வரும் எதிராளியினின்று தப்புவிக்க கேடகமாகவும், பரிசையாகவும் தேவன் தமது சத்திய வசனத்தை கொடுத்து பாதுகாக்கிறார்.
மனித எதிரிகள், பிசாசாகிய எதிரி இவற்றினின்று தேவன் நம்மை தப்புவிக்கிறார்.
உபாகமம் 33:29, எபேசியர் 6:10-18
2. (வச.5) - பகலிலும் இரவிலும் வரும் எல்லாவித பயங்கரங்களுக்கும் தப்புக்க கர்த்தர் நம்முடனே இருப்பார்.
வனாந்திரத்தில் இஸ்ரவேலர் மக்களை பாதுகாக்க பகலில் மேக ஸ்தம்பமாகவும், இரவில் அக்கினித் தூணாகவும் கூடவே வழிநடந்து பாதுகாத்தார். ஒவ்வொரு விசுவாசியையும் அப்படியே பாதுகாப்பார்.
யாத்.13:21,22; 2 தீமோத்.1:7
3. (வச.6) - பலவித கொள்ளை நோயினால் அநேகர் தாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட கொள்ளை நோயினின்று நம் கர்த்தர் பாதுகாக்க வல்லவர். வனாந்திரத்தில் தேவன் இஸ்ரவேலரை பாதுகாத்தார். நாமும் அதற்காக ஜெபித்துக்கொள்ளவேண்டும். அப்பொழுது நம்மையும் பாதுகாப்பார். ஏசாயா 53:4,5.
4. (வச.7,8) - எகிப்து தேசத்தில் கர்த்தர் எகிப்தியரை வாதித்தார். பலவித கொடிய சரீர உபாதைகளாலும், தலைச்சன் பிள்ளைகளை சங்கரித்துத் தண்டித்தார். இஸ்ரவேலர் இவற்றை கண்ணால் கண்டார்கள். தங்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அதுபோல, இந்த உலகத்திலும்கூட தேவன் துன்மார்க்கன் மேல் பல தண்டனைகளை அனுப்பி பல சேதங்கள் நடப்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். நம் தேவன் தமது மக்களை அந்த சேதங்களினின்று பாதுகாக்க வல்லவர்.
5. (வச.9,10) - உண்மையான விசுவாசிகளுக்கு தேவனுடைய அனுமதியின்றி ஒரு பொல்லாப்பும் வராது. கஷ்டமான நேரங்கள் வராது என்பதல்ல. ஆனால், கர்த்தர் நமக்கு சம்பவிக்கிற அனைத்தையும் அவரை அடைக்கலமாக கொண்டிருக்கிற வரையில் அவற்றை நன்மைக்காகவே மாற்றுவார். இஸ்ரவேல் மக்களுக்கு வனாந்திரத்தில் இதை கர்த்தர் நிரூபித்தார். நமக்கும் செயல்படுத்துவார் ரோமர் 8:28.
6. (வச.11,12) - நமக்கு வழியில் வரும் ஆபத்துகள், விபத்துகள் இவற்றினின்று பாதுகாக்க கர்த்தர் தமது தூதர்களுக்கு கட்டளை கொடுத்து நம்முடன் அனுப்புவார். மிகாவேல், காபிரியேல் போன்ற தலைமை தூதர்களையும் தேவன் தானியேல், பேதுரு போன்ற பக்தர்களுக்காக கட்டளை கொடுத்து அனுப்பியதை வாசிக்கிறோம். பூமியதிர்ச்சிகள், வெள்ளம், குண்டு வெடிப்பு போன்ற எதிர்பாராத சேதங்களினின்றும் தேவ தூதர்கள் தேவ ஊழியர்களையும், விசுவாசிகளையும் பாதுகாத்த நாட்கள் ஏராளம் உண்டு. நம்மையும் பாதுகாக்க எப்போதும் தூதர்கள் நம்முடன் உண்டு என்பதை விசுவாசிக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சோதிக்க சாத்தான் பயன்படுத்திய வேதவாக்குத்தத்தம் இது என்பதை நாம் மறக்கக்கூடாது. தேவ தூதர்களைப்போல சில வேளைகளில் மனிதர்களின் மூலம் தேவ ஆலோசனையையும், தேவபாதுகாப்பையும் கர்த்தர் கொடுத்து நாம் தவறான முடிவுகள் எடுக்காதபடி, தவறான பாதையில் செல்லாதபடி, விபத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி கர்த்தர் தமது மக்களுக்குச் செய்த அற்புத சாட்சிகளும் ஏராளம் உண்டு. எபிரெயர் 1:14, மத்தேயு 18:10
7. (வச.13) - கொடிய விலங்குகளுக்கும் கர்த்தர் தமது மக்களை பாதுகாப்பார். வனாந்திரத்தில் இஸ்ரவேலரை தேள்களுக்கும், கொடிய விலங்குகளுக்கும் பாதுகாத்தார், தானியேலை சிங்கக்கெபியில் பாதுகாத்தார். பவுலை மெலித்தா தீவிலே விஷப்பூச்சியாகிய சர்ப்பத்திற்கு தப்புவித்தார். சாது சுந்தர்சிங் பலமுறை காட்டில் புலி, சிங்கங்களால் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டார். இதுபோன்ற அநேக சாட்சிகள் உண்டு. உங்களையும் என்னையும், இவ்விதமாக பாதுகாப்பார். தானியேல் 6:22, அப்.28:1-6
(வச.14-16) - இப்படிப்பட்ட பாதுகாப்பு உண்மையான தேவனிடமிருந்து பெற விசுவாசிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?
1. அவரை அறிந்து அவர்மேல் வாஞ்சையாயிருக்கவேண்டும் (14) யோவான் 8:32.
2. ஆபத்தில் விசுவாசத்துடன் தைரியமாக அவரை நோக்கிக்கூப்பிட வேண்டும் (15) எரேமியா 33:3. அப்போது அவருடைய இரட்சிப்பையும், விடுதலையையும் கொடுத்து மகிழ்ச்சி நிறைந்த நாட்களால் நம்மை திருப்திபடுத்துவார் (16).எரேமியா 33:6, எபேசியர் 1:3.
Author: Rev. Dr. R. Samuel