முக்கியக் கருத்து:
- தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டவன் சந்தோஷமடைவான்.
- தன் பாவங்களை மறைக்கிறவன் சஞ்சலமடைவான்.
முன்னுரை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது மலைப்பிரசங்கத்தில் "பாக்கியவான்கள்' யார் என்பதை பட்டியலிட்டு போதித்ததற்கு ஒப்பாக இந்த சங்கீதத்தில் தாவீது "பாக்கியவான் யார்' என்பதை போதித்திருக்கிறான். ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலிருந்து பாவம் என்னும் இருள் அகன்றுவிட்டால் அவன் / அவள் பாக்கியவான்களாவார்கள் என்பதே இந்த போதகங்களின் கருப்பொருள்.
1. பாவங்கள் மன்னிக்கப்பட்டவன் பாக்கியவான் (வச.1,2,5-7)
,
தனது பாவங்களை மனப்பூர்வமாக அறிக்கையிட்டு, மனந்திரும்பி தேவனிமிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்பவர்கள் மகிழ்ச்சியான மக்களாக இப்பூவுலகில் வாழ்வார்கள். பாவத்தின் குற்ற உணர்வு மனசாட்சியை பாரப்படுத்தி துன்பப்படுத்தாது.
"தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று. மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்' மாற்கு 1:15 ஆம் வசனத்தில் இயேசு, மனந்திரும்புகிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு பாத்திரராவார்கள் என்று பிரசங்கித்திருக்கிறார். ஆகவே, பாவம் மன்னிக்கப்பட மனந்திரும்புகிறவன் தேவனுடைய ராஜ்ஜியம் கொடுக்கும் சந்தோஷத்திற்கு உரியவனாகிறான்.
ஆகவே, பாவங்கள் மன்னிக்கப்பட, பக்தியுள்ள மனிதன் தேவனிடம் சகாயம் பெற்றுக்கொள்ள ஜெபம் செய்வான். தேவன் அவனுடைய பாவங்களை மன்னிக்கிறது மாத்திரமல்லாமல் வாழ்க்கையில் வரும் பல இன்னல்ளகளுக்கும் அவனை தப்புவித்துக் காக்கிறார் (வச.6,7).
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான்உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்று (மத்தேயு 11:28) ஆம் வசனத்தில் இயேசு ஆண்டவர் அழைக்கிறார்.
உலகத்தில் வரும் எல்லா பாரச்சுமைகளுக்கும் காரணம் "பாவம்' ஒன்றே இதை அகற்ற வல்லவர் மெய்த்தேவனாகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. எம்மதத்தினரும், எந்த ஜாதியினரும் தேவனிடம் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும்போது வாழ்க்கையின் பாரச்சுமை நீங்கி மனதில் சமாதானம் சந்தோஷமடைவார்கள்.
2. பாவத்தை மறைக்கிறவன் சஞ்சலப்படுவான் (வச.3,4,9,10)
பாவத்தை அறிக்கையிட்டு தேவனிடம் மன்னிப்பைப் பெறாமல் அதை தனக்குள் மூடி மறைக்கிறவன், பல வித குற்ற உணர்வுகளால் மனவுளைச்சலுக்கு ஆளாகிறான். அது அவன் மன நிம்மதியையும் சரீர சுகத்தையும் கெடுத்து, இரவும் பகலும் ஒரு மனிதனை வாதிக்கும் (வச.3,4).
ஆகவே புத்தியில்லாத ஒரு முரட்டு குதிரையைப் போல ஒரு மனிதன் தனது பாவத்தை விட மனதில்லாமல் இருக்கக்கூடாது என்று (வச.9) இல் தாவீது ஆலோசனை கூறுகிறான். இவ்விதமாக பாவத்திலே ஜீவித்து துன்மார்க்க வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தால் அநேக வேதனைகள் அடைய நேரிடும் என்றும் (வச.10) இல் எச்சரிக்கிறான்.
"ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: ... உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்' என்று எபிரெயர் 3:7,8 வசனங்களில் எபிரெயருக்கு எழுதின அப்போஸ்தலன் புதிய ஏற்பாட்டு சபை விசுவாசிகளையும்
எச்சரித்துள்ளான்.
3. கர்த்தரால் போதிக்கப்படும் நீதிமான் (வச.8,10,11)
கர்த்தரிடம் பாவ மன்னிப்பைப் பெற்ற ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என்ற சத்தியத்தை ரோமர் 4:5-8 வரை உள்ள வசனங்களிலும் கர்த்தர் மேலுள்ள விசுவாசத்தினாலே இந்த பாக்கியத்தைப் பெறுகிறான் என்று ரோமர் 5:1 ஆம் வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் கூறி இருக்கிறான். இப்படி நீதிமானாக்கப்பட்ட ஒரு தேவபிள்ளையை கர்த்தர் போதித்து வழி நடத்த ஆரம்பிக்கிறார். தேவ கிருபை அவனை எப்போதும் சூழ்ந்துகொள்ளும். செம்மையான இருதயம் அவனுக்குள் உண்டாகி விடுவதால் அவன் எப்போதும் களிகூறுவான்.
Author: Rev. Dr. R. Samuel