ஆபிரகாமின் ஜெபங்கள்

ஜெபம் என்பது தேவனுடனான உறவை பலப்படுத்தும் ஒரு ஆவிக்குரிய பயிற்சி.  தேவனிடம் மக்களின் ஜெபங்கள் அறிவுரையும் போதனையும் கொண்டவை.  ஜெபத்தை பற்றி கொஞ்சம் அதிகமேனும் நாம் புரிந்துகொள்ள ஆபிரகாமின் ஜெபம்  நமக்கு உதவும்.

 1) தனக்கான ஜெபம்:

 தனக்கு குழந்தை இல்லை என்று ஆபிரகாம் தேவனிடம் புகார் செய்தான் (ஆதியாகமம் 15: 3). ஆனால் கர்த்தர் ஆபிரகாமிற்கு ஒரு மகனைப் பற்றி பதிலளிக்கவில்லை, ஆனால் வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை  மணலைப் போலவும் எண்ணற்றதாக இருக்கும் என்றார் (ஆதியாகமம் 15: 5; 22:17).  ஆவிக்குரிய சந்ததியினரை நட்சத்திரங்களுடன் ஒப்பிடலாம் அவர்கள் யாரெனில் விசுவாசத்தின் சந்ததியினர்.  அவருடைய சரீர பிரகாரமான சந்ததியினர் மணலைப் போன்றவர்கள் அவர்கள் யாரெனில் இஸ்ரவேல் தேசத்தின் மக்கள்.

 2) இஸ்மவேலுக்கான ஜெபம்:

 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்

(ஆதியாகமம் 17:20) என்றார்.

 3) லோத்திற்கான ஜெபம்:

தேவன் சோதோம் பட்டணங்களை நியாயத்தீர்க்கும்போது, தேவன் ஆபிரகாமின் ஜெபத்தை நினைத்து, லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி  அனுப்பிவிட்டார் (ஆதியாகமம் 19:29). இது சோதோம் நகரத்திற்கான ஜெபம், இது பரிந்துரையின் அடிப்படையில் இருக்கலாம் அல்லது அது லோத்துக்கான ஒரு குறிப்பிட்ட ஜெபமாகவும் இருக்கலாம்.

 4) சோதோமுக்கான ஜெபம்:

ஆபிரகாம் அந்த பட்டணத்தின் முதல் பரிந்துரையாளன். அவனுடைய பரிந்துரை தேவனுடைய நீதியையும், தீர்ப்பையும் மற்றும்  இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது.  ஆம், தேவன் நீதிமான்களையும் பொல்லாதவர்களையும் ஒன்றாக அழிக்கக்கூடாது என்று அவன் கவலைப்பட்டான். அந்த நகரத்தில் பத்து நீதிமான்கள் இருந்தால் நகரத்தை அழிக்க மாட்டேன் என்று தேவனும்  உறுதியளித்திருந்தார் (ஆதியாகமம் 18: 22-33).

 5) அபிமெலேக்கிற்கான ஜெபம்:

சாராளை தீய நோக்கத்துடன் அழைத்துச் சென்றதற்காக தேவன் அபிமெலேக்கைக் கண்டித்தார்.  பின்னர் ஆபிரகாம் அபிமெலேக்கையும் அவருடைய குடும்பத்தினரையும் குணப்படுத்த ஜெபித்தான் (ஆதியாகமம் 20:17; சங்கீதம் 105: 15).

இதில் வியக்கத்தக்கது என்னவெனில்  ஆபிரகாம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என ஜெபித்தான், அவனுடைய  மகன்களுக்காக ஜெபித்தான்,  எப்போதும் பின்வாங்கிக் கொண்டிருக்கும் உறவினான லோத்தை காப்பாற்றி விடுவிக்க ஜெபித்தான், பொல்லாத  சோதோம் பட்டணத்திற்காகவும் அவனுக்குத் தீங்கு செய்த எதிரியான அபிமெலேக்கிற்காகவும்  பரிந்துபேசி ஜெபித்தான்.

 ஆபிரகாம் போல் நாமும் தேவனிடம் வெவ்வேறு விதமான ஜெப விண்ணப்பங்களை வைக்கிறோமா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்

T. Job Anbalagan


Read more