ஆடைகள் பழசானது

ஒரு நபர் தனது உடை அலமாரியைப் பார்த்து விரக்தியடைந்தார். ஏனெனில் தான் எத்தனை ஆடைகளை தான் வாங்குவது என திகைத்தார். பருவங்கள், சந்தர்ப்பங்கள், விழாக்கள் மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு என  வாங்கின சட்டைகள் அனைத்தும் மங்கியது, சிலது கிழிந்தன, மற்றவை ஆங்காங்கே ஓட்டை ஏற்பட்டது. அவற்றை வெளியே எறிய வேண்டியிருந்தது.  ஒரு நபரின் வாழ்நாளில், ஆண்கள் அல்லது பெண்களின் அனைத்து ஆடைகளும் பழையதாய்ப் போகும் என்பதே உண்மை. இருப்பினும், இஸ்ரவேல் புத்திரர் ஒரு அற்புதமான அதிசயத்தை அனுபவித்தனர்.  நாற்பது வருஷ வனாந்தரப் பயணத்தில் அவர்களுடைய ஆடைகள் கிழிந்து போகவும் இல்லை, அவர்களின் காலணிகள் பழையதாகப் போகவும் இல்லை (உபாகமம் 29:5).

கவலைப்படாதீர்கள்:  
சிறிதளவு அல்லது குறைந்த விசுவாசம் கொண்ட சீஷர்களை ஆண்டவர் கடிந்து கொண்டார்.  ஏனெனில் பரலோகத் தகப்பனை பற்றி எதுவும் அறியாதது போல் தங்கள் உணவு, தண்ணீர், உடை பற்றிக் கவலைப்பட்டார்கள்  (மத்தேயு 6:25-33). தேவன் தம்முடைய தெய்வீக ஐசுவரியத்தின்படி தம் பிள்ளைகளுக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்.  தேவன் இஸ்ரவேலர்களுக்கு செய்தது போல் புதியவற்றை வழங்கலாம் அல்லது பழையவற்றை ஆசீர்வதிக்கவும் முடியும்.  

தோலுறை:  
ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்தபோது, ​​அவர்கள் வெட்கப்பட்டு நிர்வாணமாக இருந்தனர்.   அவர்கள் ஒரு அத்தி மரத்தின் இலைகளிலிருந்து ஆடைகளைத் தைத்தார்கள் (ஆதியாகமம் 3:7).  இலைகள் காய்ந்து, அசௌகரியத்தையும் அரிப்புகளையும் உண்டாக்கும்.  அவர்களுக்கு தோல் ஆடையை அணிவிக்க தேவன் கிருபை புரிந்தார் (ஆதியாகமம் 3:21). ஸ்திரீயின் வித்திலிருந்து மேசியா மனிதகுலத்தை மீட்க வருவார் என்பதை விலங்குகளின் தோல் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு நினைவூட்டியது. 

ஆவிக்குரிய வஸ்திரம்:  
மிக முக்கியமான விஷயம், தேவன் தம்மை நம்புகிறவர்களுக்கு இரட்சிப்பின் வஸ்திரம், நீதியின் சால்வை மற்றும் துதியின் ஆடையைத் தருகிறார்  (ஏசாயா 61:10-11).

முறையற்ற உடை: 
பெரிய விருந்தின் உவமையில், நுழைவாயிலில் வழங்கப்பட்ட திருமண ஆடை இல்லாமல் ஒருவர் எப்படியோ நுழைந்தார் (மத்தேயு 22:11-12). மீறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர் வெளியே (இருளில்) தள்ளப்பட்டார்.

அழுக்கான கந்தை: 
பிரதான ஆசாரியனாகிய யோசுவா அழுக்கு வஸ்திரம் அணிந்து தூதனுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான், ஆனால் கர்த்தருக்கு ஊழியம் செய்ய அவனுக்குப் புதிய சிறந்த ஆடைகளை கர்த்தர் கொடுத்ததாக (சகரியா 3:1-5)ல் வாசிக்கிறோம். 

ஆவிக்குரிய நிர்வாணம்: 
லவோதிக்கேயாவில் உள்ள சபையில் உள்ள விசுவாசிகள் தங்கள் பரிதாபகரமான நிலையை உணரவில்லை: நான் பணக்காரன், நான் செழித்துவிட்டேன், எனக்கு எதுவும் தேவையில்லை என சொன்னார்கள்; ஆனால்  நிர்ப்பாக்கியமுள்ளவர்களாகவும், பரிதபிக்கப்படத்தக்கவர்களாகவும், தரித்திரராகவும், குருடனாகவும், ஆவிக்குரிய நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், குறையே இல்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 3:17).   

ஒருபோதும் மங்காது அழியாத இரட்சிப்பின் ஆடையை நான் அணிந்திருக்கிறேனா? 
Author: Rev. Dr. J .N. மனோகரன்

Rev. Dr. J.N. Manokaran


Read more